வெய்யிலின் ஒரு கவிதை
ஒரு பூ பூத்துச்சாம் அப்ப பாலுறிஞ்ச ஏலாத சீக்காலிப் பிள்ளையா இருந்தேனாம் அம்ம சொல்லும். கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான் மார்ப்பால பீச்சி விடுமாம் முகத்துல தெறிச்சி கையெல்லாம் வழிஞ்சி தொழுவத்து சாண வாடைய மீறி பால் மணக்குமாம் வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம் எதுக்குன்னே தெரியல அந்த காட்சி கண்ணுல கண்ணுல வருது மதுரை ‘பைபாஸ் ரோடு’ மற்றும் அதன் அண்மைப் பகுதிகள்தான், என் சிறு, இள வயதுகளில் முழுமையாக நான் வாழந்த நிலம். அந்த வெளிவட்ட சுற்றுச் சாலை, திருமங்கலம் வழியாக தெற்கிலிருந்து மதுரைக்கு வரும் உந்துகள், நகர நெருக்கடிக்குள் நுழையாமல், திண்டுக்கலுக்கு, தேனிக்கு இட்டுச் செல்லும். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு, கொடிக்கால் தோப்பு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, என தோப்புகளால் மட்டுமே வியாபித்து செழுமையாக இருந்தது இந்தப் பகுதி, என ஒருவரிடம் நம்ப வைக்க முயன்றால், அது அதீத கற்பனை வளம் என போற்றப்படலாம் அல்லது மனநிலை காப்பக பரிந்துரைக்கு ஆளாக நேரலாம் . கம்பிபோட்ட தள்ளுவண்டியில் பொருட்கள் வாங்கும் குளிரூட்டப்பட்ட அங்காடிகளும், மின்பொருள் அங்காடிகளும், மொறு...