விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017
முதல் நாள் முதல் கலந்துரையாடல், எழுத்தாளர்கள் அசோக்குமார், தூயன் இருவரையும் முன்னிறுத்தி துவங்கியது. தனிமையும்,அது தரும் மன அழுத்தமும், அசோக்குமார் கதைகளில் முதன்மை பேசுபொருளாக அமைந்திருந்த தன்மை பற்றி விவாதிக்கப்பட்டது. தன் வாழ்வின் சூழலில், நோய்மையுற்ற உறவுகளின் அணுக்கமும், பொருளியல் அழுத்தமும், தனது எழுத்துகளில் இயல்பாக வெளிப்படுவதாக அசோக்குமார் கூறினார். தூயனின் ‘முகம்’ சிறுகதையில், தோட்டி சமூக சூழலின் உட்பூசலும், பன்றி வேட்டைக்கான போட்டியும், கொதி நிலை கதைகூறலுடன் விவரிக்கப்பட்டிருக்கும் தன்மையை, அதை வாசிக்கும் வாசகனான தனக்கு அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் நவீன். மூன்று சமூகங்கள் கலந்து வாழும் மலசிய சமூக சூழலில் தமிழ் சமூகம் மீதான பொதுப்பார்வையை இந்த கதையுடன் நவீன் ஒப்பிட்டு இந்த கேள்வியை கேட்டிருந்திருக்கலாம். சுயவேதனையும், தனிமை துயரும் நிரம்பிய தூயனின் கதைகளில் ஒன்றான ‘மஞ்சள் நிற மீன்’ கதையில் வரும் சிறுவனின் பாத்திரம் , ஒரு நல்ல புகைப்பட ஆல்பத்தில் சேர்க்கப்பட்டு காலமில்லாமல் நிலைத்திருக்கும் புகைப்படம் போல மனதில் பதிந்தத...