விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017
முதல் நாள் முதல் கலந்துரையாடல், எழுத்தாளர்கள் அசோக்குமார், தூயன் இருவரையும் முன்னிறுத்தி துவங்கியது. தனிமையும்,அது தரும் மன அழுத்தமும், அசோக்குமார் கதைகளில் முதன்மை பேசுபொருளாக அமைந்திருந்த தன்மை பற்றி விவாதிக்கப்பட்டது. தன் வாழ்வின் சூழலில், நோய்மையுற்ற உறவுகளின் அணுக்கமும், பொருளியல் அழுத்தமும், தனது எழுத்துகளில் இயல்பாக வெளிப்படுவதாக அசோக்குமார் கூறினார். தூயனின் ‘முகம்’ சிறுகதையில், தோட்டி சமூக சூழலின் உட்பூசலும், பன்றி வேட்டைக்கான போட்டியும், கொதி நிலை கதைகூறலுடன் விவரிக்கப்பட்டிருக்கும் தன்மையை, அதை வாசிக்கும் வாசகனான தனக்கு அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் நவீன். மூன்று சமூகங்கள் கலந்து வாழும் மலசிய சமூக சூழலில் தமிழ் சமூகம் மீதான பொதுப்பார்வையை இந்த கதையுடன் நவீன் ஒப்பிட்டு இந்த கேள்வியை கேட்டிருந்திருக்கலாம்.
சுயவேதனையும், தனிமை துயரும் நிரம்பிய தூயனின் கதைகளில் ஒன்றான ‘மஞ்சள் நிற மீன்’ கதையில் வரும் சிறுவனின் பாத்திரம் , ஒரு நல்ல புகைப்பட ஆல்பத்தில் சேர்க்கப்பட்டு காலமில்லாமல் நிலைத்திருக்கும் புகைப்படம் போல மனதில் பதிந்தது போல இருக்கிறது எனவும் பகிரப்பட்டது. முகநூலின் பாதிப்பால், zero narration எனப்படும் சித்தரிப்பற்ற நடை அண்மை கால படைப்புகளில் மேலோங்கும் போக்கு இருக்கிறது எனவும், படைப்புகளில் மொழிக் கூர்மைக்கான பங்கின் முக்கியத்துவத்தை
ஒட்டியும் விவாதம் தொடர்ந்தது. ஆரம்பகால படைப்புகளில் கிசுகிசுப்பு அம்சத்தை, முதன்மையாக்கி எழுதுபவன், தரமில்லாத மூன்றாம் நிலை எழுத்தாளன் எனவும், தன் வாழ்வின் நிகழ்வுகள், நினைவுகளில் இருந்து அகற்ற மறக்க இயலாத கணங்களை விவரித்து எழுதி வாசக அனுபவத்தை தருபவன், நல்ல இரண்டாம் நிலை எழுத்தாளன் எனவும். தன் அனுபவத் திரையை கிழித்து முற்றிலும் பரிச்சயமில்லாத தளங்களில் கட்டற்று பாய்ந்து, கற்பனையால் இட்டு நிரப்பி, நிகர் வாழ்வு அனுபவத்தை தருபவனே தேடல் கொண்ட சிறந்த முதல்தர எழுத்தாளன் என்றார் ஜெமோ.
இரண்டாவது அமர்வில் ஆர் அபிலாஷ் தனக்கு சுகானுபவம் தரும் எழுத்து நிகழும் கணத்தில் தேடல், விழுமியம் போன்ற சுமைகளை சுமப்பதில் உடன்பாடில்லை என்றார், அவருடைய எழுத்துக்கள் வாசகர்களுடன் ஏற்படுத்தும் எளிய உரையாடல், உறவாடல் தரும் இன்பத்தை வேண்டி. எழுதுவதே அவரின் நோக்கம் என்றார். முதல் நாவலிலேயே பெண் கதாபாத்திரத்தை முதன்மை பாத்திரமாக்கி எழுதியதைப் பற்றி கூறினார். அவர் அமர்ந்திருந்த அறையில் கண்ணை கூசும் வெளிச்சத்தை காண நேர்ந்த கணத்தில், கிரிக்கெட் பிட்ச் மேற்பார்வையாளரை மையமாக கொண்ட நாவலின் கருவிற்கான அகத்தூண்டல் அடைந்த நிகழ்வை
விவரித்தார். தன் இயல்பான அசட்டுத்தனமான துணிச்சலால் கறாராக படைப்புகளை கட்டுடைக்கும் விமர்சனங்களில் தனக்கு ஆர்வம் உண்டு என்றார். படைப்பின் தொழிற்நுட்பத்தினை கட்டுடைப்பதில் நேர்மறை நோக்கு உண்டு, ஆனால் படைப்பின் அகத்தூண்டலை கட்டுடைப்பது என்பது வாசக தீவிரத்தை குறைக்கும் பார்வை கொண்டது என ஜெமோ எதிர்வினையாற்றினார். அபாரமான வாசிப்பும், கவிதை மொழிபெயர்ப்பில் ஆர்வமும், கலந்துரையாடல்களில் தன் தரப்பை கலைச்சொற்கள் கொண்டு கச்சிதமாக முன்வைக்கும் திறனும் கொண்ட அதே அபிலாஷின், தீவிரத்தை மயக்கி மழுங்கடித்து கலைக்க முயலும் போக்கும், உரையாடுபவர்கள் மீது கோட்பாட்டு முத்திரைகளை இடும் முனைப்பும் ஏனோ முரணாகத் தெரிந்தது. பின்னர் அவரின் உரையாடல்களை, எழுத்துக்களை அணுக்கமாக பார்க்கும்போது, தீவிரமாக இயங்குவதற்கான நியாயங்கள், வாய்ப்புகள், திறன் என அனைத்தும் பெற்றவராகவே எனக்கு தோன்றினார்
.
90களுக்குப் பின் பிறந்து எழுத வந்த, தளிர் தலைமுறை எழுத்தாளர்களான விஷால் ராஜாவும், சுரேஷ் பிரதீப்பும், தங்களை நோக்கி வந்த கறாரான கேள்விகளையும் கூட சிறப்பாகவே எதிர்கொண்டார்கள். விஷால் ராஜாவின் ‘குளிர்’ , ‘விலகிச் செல்லும் தூரம்’ கதைகளையும், சுரேஷ் பிரதீப்பின் ‘சில்ற’ ‘நாயகிகள் நாயகர்கள்’ கதைகளையும் சிலாகித்து விதந்தோதும் மனநிலையிலேயே இருந்ததால், இன்னும் ஆழமாக வாசித்த மற்ற வாசகர்களின் கேள்விகளை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால்
வாசகர்கள் பொதுவான படைப்பு கேள்விகள் தவிர அவர்களின் குறிப்பிட்ட படைப்பினை பற்றிய கேள்விகளை கேட்கவில்லை. அந்த அமர்வு முடிந்தபின், விவாதத்திற்கும், விளக்கத்திற்கும் இட்டுச் செல்லும் நல்ல கேள்வியை கேட்டிருக்கலாம் என என்னை கடிந்து கொண்டபடி இருந்தேன். இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காட்சி ஊடகங்களின் தாக்கம் தொடர்பான கேள்வி சிந்திக்க வைத்தது. நேற்றைய என் நாள் வரை கிரிக்கெட், டென்னிஸ், அரசியல் செய்திகள், புணர்ம காட்சிகள், சினிமா, பாடல்கள், என காட்சி ஊடகம் விழுங்கிய நேரத்தை எண்ணியபோது, விளையாட்டு களத்தில் அனைத்து சாத்தியமான திசைகளிலும், சுழன்று, பறக்க வேண்டிய பந்தும், அதை செலுத்த வேண்டிய மட்டையும் அதுநாள் வரை ஒரு அட்டைப் பெட்டிக்குள் குறுக்கி அடைபட்டு கிடந்தது போல உணர்ந்தேன்.
போகன் சங்கருடனான உரையாடல், சபையினரனைவரின் மீதும் அள்ளித் தெளித்து ஆட்கொண்ட ஒற்றை வரி பகடிகளால் நிரம்பி, சுவையாக இருந்தது. இருத்தியல்வாத பார்வை கொண்ட போகன் சங்கர், அகத்தினை விரித்து எழுதும் எழுத்தில் தனக்கான தேடலை பற்றி கூறினார். இலக்கியம் நீதிநெறியற்றது(Literature is moral), இலக்கியம் ஒரு மனநல கருவி (psychatric tool), மன அழுத்த விடுப்பான் (depression reliever), மனபதட்டத்தின் வெளிப்பாடே இலக்கியம், ஒழுக்கமின்மையை வலியுறுத்துகிறதா இலக்கியம் என
மலைசரிவில் விடப்பட்ட கட்டுப்பாடில்லாத இருத்தலியல் கனரக வாகனம் வளைந்து ஓடித்து, சென்ற வழியில் எதிர் கொண்டவற்றையெல்லாம் இடித்து தள்ளி கடந்தது போன்ற அனுபவத்தை தந்தது. பின்னர் ஜெமோ திசைதிருப்பி எழுப்பிய ஆவி உலகத்தில், அவருக்கான ஈடுபாடு, போதை மாத்திரைகளுக்கு இலக்கியத்தில் பங்கு, தன்வரலாற்று தன்விளக்க இலக்கியம், உபவாசனை கதைகள் என விவாதங்களுக்கு கூட்டிச் சென்றபோது, அவர் கூறிய நீண்ட விளக்கங்கள்
அந்த வாகனம் எரிபொருளை நிரப்பிக் கொண்டு சமதள சாலையில் சீராக பயணம் சென்றது போல இருந்தது. ஒரு கணத்தில், அதே வாகனம் எடையிழந்து பறவையாக காற்றில் பறக்க எத்தனித்தது போலவும் தோன்றியது.
அடுத்த அமர்வில் அரசியல் கவிஞர் என்னும் அடையாளமிடப்பட்டு அதை அசௌகரியமாக சுமக்கும் வெய்யிலின், நேர்மையான ஆளுமை கலந்துரையாடலில் வெளிப்பட்டது. விழுமியங்களில் ஆழமான நம்பிக்கையுடைய எல்லா பெரும் கவிஞர்களைப் போலவே தானும், உலகத்தை கவிதைகளால் புரட்டும் முனைப்புடனே இலக்கியத்திற்குள்
நுழைந்தேன் என்றார். மார்க்சிய கொள்கைகள் மீதான தீராத ஈர்ப்பே தன்னை இயக்குகிறது என்றும், அரசியல் கோட்பாடுகள், கனவுகள், செயல்பாட்டு வடிவம் இவற்றின் பங்கினையும் அதன் நடைமுறை சிக்கல்களை அறிந்திருப்பதாகவும் கூறினார். ஊடகம் வெகுஜன மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்பும் போக்கினை அழுத்தமாக கோடிட்டு காட்டும் வேலை இலக்கியவாதியாக தனக்கு உண்டு என்றார். போரில்லை என்பதால் எந்த அரசும் ஆயுத தயாரிப்பை நிறுத்துவதில்லை, அதே போல மக்களுக்கு அரசில் பிரக்ஞையின் நினைவூட்டுவதே ஒரு கவிஞராக அவரின் அரசியல் பங்கு என கூறினார். தீவிர விவாதத்தினை ஆற்றுப்படுத்தும் விதத்தில் அவரின் பெயருக்கான மூலம் என்ன என்கிற கேள்விக்கு, கோவில்பட்டி அம்மன் பெயரான வெயிலுகந்த அம்மன் என விளக்கினார். கவிதைகளில் தீவிர நம்பிக்கைகளை கலைத்துபோட்டு விளையாடும் இந்த தலைமுறையில் மண்ணில் காலூன்றி நின்று கொள்கை அரசியலில் பற்றுடன் இயங்கும் கவிஞனின் ஆளுமை உவகை தந்தது.
எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் தோற்றத்தில், ஒரு பொறியியல் கல்லூரியின் கணிணித் துறைத் தலைமையாசிரியர் போல எனக்கு தோன்றினார். அவரது அமர்வில் சில கேள்விகளுக்கு, நானோ நொடி நேரத்தில் துள்ளிக் கொண்டு, அவர் அளித்த பதில்களின் தொனி, ஜேனிஸ் பரியத் கலந்துரையாடலில் அவரிடம் இருந்து பொங்கி வந்த கேள்விகள், அவருக்குள் ஒளிந்திருந்த
கற்றல் மீது தீராத காதல் கொண்ட முதல் வருட கல்லூரி மாணவனை சில கணம் வெளியே காட்டிச் சென்றது. வண்டு பறந்தது போல துப்பாக்கி குண்டு என்னை நோக்கி பாய்ந்தது. போன்ற கச்சித வரிகளை தேர்ந்தெடுத்தது எதனால் என்ற கேள்விக்கு, இளமையில் அவரை ஈர்த்த மரபிலக்கிய வாசிப்பும், கச்சிதத்தை கோரும் பிரிட்டீஷ் இலக்கிய வாசிப்பும் இருக்கலாம் என்றார். செறிந்த தகவல்களை ஒரு புனைவிற்குள் கூற முயலும்போது கச்சிதமே அதற்கான பொருத்தமான வடிவம் என்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரவர்கள் முனைந்து வரைந்து பேணிக் காக்கும், சௌகரிய வளையமும், அதில் அவர்களின் அதிகார விளையாட்டு பற்றியுமான சித்திரத்தை நுண்தகவல்கள் மூலம் நுணுக்கமாக தந்தார். அவரின் எழுத்துக்களில் உபகதைகள் (anecdote ) நிரம்பி இருப்பதற்கு காரணம் தன் எழுத்து வாழ்க்கை பத்திரிக்கையாளனாக ஆரம்பித்ததால் இருக்கலாம் என்றார்.
விருது விழா மூலவர் சீ.முத்துசாமி, எளிமையாலும், மெய்மை நிறைந்த வெளிப்படையான பேச்சாலும், கனிவாலும் என்னை கவர்ந்தார். மலேசியாவில் தோட்டப்புறம் என்றால் இங்கு கிராமப்புறம் என்பது அவரின்
அமர்வின் போதுதான் தெரியவந்தது. அவரின் மண்புழுக்கள், அகதிகள் போன்ற கதைகளில் பலகுரல் தன்மையில், கதை அமைந்திருப்பதற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜெயகாந்தன் மீதான அவரது பரவசமிகு ஈர்ப்பால், தன் மகன்களுக்கு, சிவகாந்தன், ஜீவகாந்தன் பின் வண்ணநிலவன் மீதான ஈர்ப்பால் ராகநிலவன் என பெயரிட்டதாக கூறினார். லசராவும், Pearl S Buck ம், வண்ணதாசனும், தேவதேவனும், அவரின் ஆதர்ச எழுத்தாளர்கள் என்றார். 70களிலும், 80 களிலும் தீவிரமாக எழுத்தில் இயங்கிய அவர், 20 வருட இடைவெளிக்கு பிறகு 2000களில் எழுத வந்ததற்கு காரணம், மலேசிய இலக்கிய சூழலின் புறக்கணிப்பும், பூசலும் என்றார். பெரும்புயல், உக்கிர மழை, கொதி வெயில் அனைத்தையும் ஆண்டாண்டாக தாங்கி தோட்டத்தில் நின்ற, கனிந்த மரத்தில், தொடுத்திக் கொண்டிருந்து, காற்றடித்து உதிர்ந்த, ஈரமிலா பட்டை கூட மதிப்புமிக்கது எனத் தோன்றியது. அவரை வணங்கி ஆசி பெற்றேன்.
மலேசிய இலக்கிய அமர்வில், நவீன் அளித்த மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான வரைபடத்திலும், அதனைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பல திறப்புகள் நிகழ்ந்தன. ஜெமோ பெருநிகழ்வு என
குறிப்பிட்ட ஆளுமை நவீன் மற்றும் அவருடன் வந்த மாணவர்களால் எதிர்காலம் நம்பிக்கை தந்தாலும், செல்ல வேண்டிய தூரம் தொலைவில் இருக்கிறது என தோன்றியது. தடைகளையும் தாண்டி உத்வேகம் குன்றாமல் அவர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஜெனிஸ் பரியத், இந்த விழாவில் முன்னமர்ந்த ஒரே பெண் எழுத்தாளர். அவரின் அமர்வில், மேகாலயாவில் ஆட்சியராக பணிபுரியும் ராம்குமார் மொழிப்பாலமாக உடனிருந்து அவருக்கு விளக்கினார். காசி, ஜெயந்த பழங்குடி மக்களின் நிலமான மேகாலாயவின் நிலத்தின் மீதும், தொன்மக்
கதைகளின் மீதும் அவருக்கான ஈடுபாட்டை தன் வசீகர பேச்சாலும், ஒளிரும் குழந்தைமை சிரிப்பாலும் விவரித்தார். அவரின் எழுத்துக்களின் நாகரிக நேர்த்தியும், கனவுத்தன்மையும் பற்றி விவாதம் சென்றது. அவரின் Boats in the land சிறுகதையின் முதல் வரியினை விநாடி வினாப் போட்டில் சரியாக கூறி நாஞ்சில் நாடன் அவர்களின் கையால் புத்தகத்தை பரிசாக பெற்றேன். இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் மீதிருக்கும் பொதுவான மேட்டிமைவாத குற்றச்சாட்டுகளுக்கு, வாசிப்பு ஒரு பெரும் இயக்கமாக வளர்ந்து விரிந்து பெருகினால், தரமில்லாதவைகள் அவைகளாகவே உதிர்ந்து விடும் என்றார்.
எனது இந்த இரண்டாவது விஷ்ணுபுர விழாவில், இலக்கிய நண்பர்கள் வட்டாரத்தின் மேலும் பல நண்பர்கள் சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, ஷாகுல் ஹமீது, சசிக்குமார், விஷ்ணு, சுசீல், சுசீல் கிருஷ்ணன், கமலக்கண்ணன், மலைச்சாமி அழகர், சாம், படிகம் ரோஸ் ஆன்ரோ , கதிரேசன் உடன் சேர்ந்து அணுக்கமானேன். சென்ற முறை போல அமர்வுகளின் தேநீர் இடைவெளியில் ஜெமோவின் அருகில் மட்டுமே இருந்து இலக்கிய அரட்டை பேச்சை கேட்காமல், தமிழின் இலக்கிய ஆளுமைகளான மலேசியா நவீன், கே.என். செந்தில், நான் வணங்கும் நாஞ்சில் நாடன், பாவண்ணன், லஷ்மி
மணிவண்ணன், அவர்களின் அருகில் இருந்து வியந்தபடி உரையாடல்களை கவனித்து உற்சாகமடைந்தேன். இரவில் டாக்டர் விடுதியில் சில ஆயிரங்களை செலவழித்தால்தான் கிடைக்குமளவிற்கு மிக மிக நேர்த்தியான வசதியான அறையும். உணவையும் ருசித்தபோது, இலக்கியம் மீதான பற்றும், அர்பணிப்பும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைத்து நடைமுறைப்படுத்திய தமிழின் சிறந்த மனங்களான, விஷ்ணுபுரம் வட்டார நண்பர்களால் மட்டுமே சாத்தியம் என தோன்றியது. வெளியே தெரிந்த செல்வேந்திரன், ராஜகோபாலன், அரங்கசாமி, விநாடி வினா செந்தில், விஜய் சூரியன், மீனாம்பிகை, கடலூர் சீனு, சிறில் அலெக்ஸ், விஜயராகவன் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. விழா மேடையின் பின் திரையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தில் புரட்டப்படும் புத்தகப் பக்கங்களிலிருந்து பல வண்ண பறவைகள் ஒன்றன் பின் ஒன்றாக தளைகளை உடைத்து பறந்த ஓவியம் மிக மிக கலைநயத்துடன், நிகழ்வின் நோக்கத்தை துல்லியமாக தெரிவிப்பதாகவும் இருந்தது. அதை வரைந்த ஓவியருக்கும், மேடை பின்திரை வடிவமைப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள். ஜெமோவின் அந்த நீல நிற சட்டை சூப்பர்.
முதல் நாள் நிகழ்வில், ஜெமோ மீதான ஒரு வழக்கில் ஆஜரான வழக்கு உரைஞர் கிருஷ்ணன் விவரிப்புடன் கலகலப்பான ஒரு நிகழ்வு பகிரப்பட்டது. வெட்டப்பட்ட வாழை மரத்தண்டிலிருந்து துளிரிலை சில மணிநேரங்களிலேயே குருத்து விடும் என்பது, நீதிபதி, எதிர்தரப்பு வழக்கறிஞர் என எவருமே அறியாததால், எடுக்கப்பட்ட புகைப்படம் பொய்யானது என ஒரு வழக்கில் நிரூபித்து, கிருஷ்ணன் வெற்றியடைந்த சம்பவம் வேடிக்கையுடனும் வெடிச்சிரிப்புடனும். பகிரப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த விழா நிகழ்வுகள், சந்திப்புகள், அரட்டைகள், கலந்துரையாடல்கள் சில மணிநேரங்கள் தான், ஆனால் அவைகள்தான் என்னைப்போன்ற பல இலக்கிய வாசகர்களுக்குள் படைப்பின் கற்பனையின், இளந்தளிர்கள் பசுமையுடனும், நறுமணத்துடனும், மண்ணின் ஈரத்துடனும் தழைத்து வளர ஊக்கியான இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நிகழ்ச்சிக்கு வந்த பின்னூட்ட கடிதங்களை படித்தபோது அந்த எண்ணம் திடமாக வலுபெற்றது.
<நிறைவு>
INTRESTING
பதிலளிநீக்குஅவரின் Boats in the land சிறுகதையின் முதல் வரியினை விநாடி வினாப் போட்டில் சரியாக கூறி நாஞ்சில் நாடன் அவர்களின் கையால் புத்தகத்தை பரிசாக பெற்றேன்.
பதிலளிநீக்குதலைவா அது நீதான ,வாழ்த்துக்கள் .
ஷாகுல் ஹமீது