எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்


ஒரு சினிமா படைப்பின் முதன்மை நோக்கம், பார்வையாளர் திரளை திரையரங்குகளுக்கு வரவழைப்பதுதான். மூன்று மணிநேர திரைக்காட்சியில் மயக்கப்பட்ட அந்த பார்வையாளனை ரசிகனாக மாற்றி மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைப்பதே அது அடைய முயலும் பாரிய வெற்றி.  இந்த வெற்றி பெறுவதற்காக அதன் படைப்பாக்கத்தில் எல்லா விதமான, சமரசங்களும், விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  சினிமாவின் மீதான எதிர்வினைகள்  அதன் படைப்பாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவற்றில் பரிசீலனைக்கு தகுதியான பெரும்பாலானவைகளில்  தேர்ந்தெடுக்பபட்ட சிலவற்றை அடுத்தடுத்த படைப்புகளில் அதே படைப்பாளி பிரதிபலிப்பது நிகழ்ந்திருக்கிறது.  


ஒற்றை கூகுள் சுடுக்கலில்  ஒரு சினிமா படைப்பாளி அவனின் படைப்பைப் பற்றி எல்லாவிதமான எதிர்வினைகளையும் அறிந்து கொள்ளும் வசதி  இந்த சூழலில் இருக்கிறது. விளம்பரப் பதாகைகளை ஏந்தி சினிமாவில் இடம்பெறும் ககனவுகளுடன் இயங்கும் பலர் யூடூப்பிலும், பத்திரிக்கைகளிலும் விமர்சனம் செய்கிறார்கள்.  இவர்களுக்கு சினிமாவை படைப்பாளன் கோணத்தில் அணுகி பார்வையாளனுக்கு விளக்குவதா?  இல்லை பார்வையாளன் கோணத்தில் படைப்பை அணுகுவதா என்கிற பெருங்குழப்பம் இருக்கிறது.  கதைகூறி முடிவை கூறாமல் விடுவதும், அதீதமான பாராட்டுகளும் , ஒற்றை வரி கலாய்ப்புகளும், போட்டு தாக்குதல்களும்  விமர்சனம் என்கிற பெயரில் இவர்கள்தான் பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  



ஆனால் ஒரு விமர்சகன் உண்மையாக மெனக்கெட்டால், அவன் கண்டடையும் கருவிகளும், அவன் உரையாடலும் சினிமாவின் போக்கினை ஒரு சிறிய அளவிலாவது மாற்றும். இயக்குனர் கே.பாலச்சந்தர் ஏக் துஜே கே லியே படத்தினை பார்த்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஒரு பார்வையாளரிடமிருந்து கடிதம் வந்தது என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு எதிர்வினையாகவே தற்கொலை எண்ணத்தை கண்டிக்கும்  ‘வானமே எல்லை’ படம் எடுக்கப்பட்டதாக அவரே அதே பேட்டியில் கூறியிருந்தார்.  கலகலப்பு என்கிற வணிக வெற்றிப் படத்திற்கு ஒரு வலைப்பூ விமர்சகர், அதன் காட்சிப்படுத்துதலில் இருந்த 80களின் பழைமையான அம்சத்தை சுட்டிக்காட்டியிருந்தார். அதன் உடனடி எதிர்வினையாக இயக்குனரின் அடுத்த படமான தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படத்தில்  நவீனக் காட்சி தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.  இயக்குனர் பாலாவின் படங்களில் பெண்களின் பாத்திரங்கள் பலவீனமாக இருக்கிறது என்கிற பொதுவான விமர்சனத்திற்கு பதிலாகவே  ‘நாச்சியார்’ திரைப்படம்  எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  



‘எண்பதுகளில் தமிழ் சினிமா’ நூலில் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சினிமாப் படைப்புகளை ஒட்டுமொத்தமாகவும், குறிப்பிட்ட சிலவற்றையும் பல கோணங்களில்  ஆராய்ந்து விமர்சிக்கிறார். ஒரு சினிமாவின் கதைக்கான மூலம் வழக்காறுகளிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும், நாட்டார் தெய்வங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கலாம் என சான்றுகளுடன் ஆராய்கிறார். 



சாதி மீறி காதல் கொண்டதால் செய்யப்பட் ஆணவக் கொலைகளுக்கும், நாட்டார் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்பினை முதல் கட்டுரை சான்றுகளுடன் வெளிப்படுத்துகிறது. பொன்னியம்மன், கொடைக்காரியம்மன், நீலியம்மன், பூச்சியம்மன் போன்ற அம்மன் கதைகளை உதாரணமாக‍க் கொண்டு, பெண்கள் பொதுவாக ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாகவும், ஆண்கள் தாழ்த்ப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாவும் இருப்பதாக ஒரு வகைப்படுத்துதலை பகிர்கிறார்.  அதேபோல நாட்டார் கதைவழக்குகளில் கூறப்படும் காதலனோ, காதலியோ சிலையாகும் தன்மை, திரும்ப வராம‍ல் போதல், நிஜத்தில் கொலைகளாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஊகிக்கிறார். 



1980களில் கதைகளில் வில்லன்களாக இருந்த பண்ணையார்கள்,  மேல்சாதிக்காரர்கள், அப்படியே 1990ளில் தேவர் மகன், சின்ன கவுண்டர், மறவன் மகன் , நாட்டாமை என அப்பழுக்கற்ற நாயகர்களாக ஆகிறார்கள். இந்த  தலைகீழ் போக்கிற்கான சமூக‍க் காரணம் என சிலவற்றை பட்டியலிடுகிறார் ஆசிரியர். 


 தன் கணவர் சோரம் போனபோது கூட,  சீறி எழாமல் கூட அடங்கி ஒடுங்கி  இருந்தவள்தான் கண்ணகி. தன் வாழ்நாள் முழுக்க கோபத்தை காட்டாமல் இருந்த கண்ணகி உச்சத்திலும் உச்சமான ஒரு தருணத்தில்தான் வெடிக்கிறாள். அதேபோல  பாட்ஷா படத்திலும், எந்த அடிதடியிலும் இறங்காமல் விலகிச் செல்கிறான் நாயகன்.  சில சமயங்களில் தன்மானம் சீண்டப்பட்ட போது கூட இயல்பாக அடிவாங்கி பணிந்த நாயகன், தங்கை வல்லுறவுக்கு உட்படுத்தப்படும்போது வெடிக்கிறார். இலக்கியத்தில் கண்ணகியின் கதைதான் பாட்ஷவாக திரைவடிவமாக மாறியிருக்கிறது என ஒரு முக்கியமான பார்வையை முன்வைக்கிறார் ஆசிரியர்.   


ஒரு சம்பவம் புனைவாகும்போது அதன் முதன் வடிவம் மற்றொன்றாகிறது. பிறகு புனைவின் வடிவம் ஆதிக்கம் பெறும்போது அதுவே வரலாறாகவும் ஆகிறது. நாளடைவில் நிஜம், புனைவு என்பவையெல்லாம் மயங்கிவிடுகின்றன என்கிறார் நூலாசிரியர். அந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றி இலக்கியம் வழியாக  சமூகம் பெற்ற  கூட்டு நனவிலியுடன் இந்த புதிதாக உருமாறிய வடிவம் சரியாகப் பொருந்தியாதால்தான் என கண்டடைகிறார் ஆசிரியர். 


நீலாம்பரியாக உருமாறிய நீலி என்கிற கட்டுரை, கண்ணகி அளவிற்கு மணிமேகலை ஏன் போற்றப்படவில்லை என ஆராய்கிறது.  பெண்களின் குடும்பவெளிப் பயணத்தை போற்றும் பொதுப்புத்தி, அவளின் சமூகவெளிப் பயணத்தை குற்றப்படுத்துகிறது.  ஆணுக்கு சமூக வெளி என்கிற புறம், பெண்ணுக்கு காதல், வீடு என்கிற அகம் என்கிற வகைமையை  மணிமேகலை தலைகீழாக்குகிறாள்.  தன்னை மீறிய பெண்ணின் ஆற்றலைக் கண்டு ஆண் அச்சங்கொள்கிறான், அந்த ஆற்றலை இயல்பற்றதாக்கி விலகிக் கொள்ள அல்லது விலக்கிக் கொள்ள முற்படுகிறான். ஆகவே நீலாம்பரியாக்கப்பட்ட நீலி பேயாக்கப்படுகிறாள். மணிமேகலை சமூக நினைவிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். இதே பார்வையில் பேச்சிகளாகவும், பேய்ச்சிகளாகவும் புனையப்பட்டிருக்கும் ம.நவீனின் 'பேச்சி' நாவலின் பெண் பாத்திரங்களை வாசிக்கலாம்.


தமிழ் சினிமா கதைகூறல் போக்கில் நிகழ்ந்த பாரிய மாற்றத்திற்கான இயக்குனர் பாரதிராஜாவின் பங்கினை அங்கீகரித்து பாரட்டுதலை வழங்குகிறார் ஆசிரியர். அதே வேளையில் உள்ளூர் பாரம்பரியம் மீது வெளியிலிருந்து வந்த நவீனத்துவம் தாக்குதல் நிகழ்த்தி மாற்றமுடியாமல் திரும்புவதே பாரதிராஜாவின் படங்களில் பொதுவான கதைக்கூறுதல் முறை என விமர்சிக்கிறார் ஆசிரியர். மேலும் பாரதிராஜாவின் படைப்புகளில் தொடர்ந்து வரும், சாதிக்குள் ரத்த உறவுகளை புதுப்பிப்பது என்கிற முன்னொட்டை கடுமையாக விமர்சிக்கிறார்

அவரின் சில வாக்கிய தேர்ந்தெடுப்புகளும் பார்வைகளும் ஆச்சரியப்படுத்துகிறது, இடதுசாரி சாகசப் படங்கள் என்கிறார். ஆசிரியர் தமிழ் சினிமா பொதுமகளிரை அணுகுகிற விதங்களையும் சில சான்றுகளை கொடுத்து விவரிக்கிறார். ‘காந்தி தேசமே காவலில்லையா?’ ‘ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ என சமூகத்தை எழுச்சியூட்டும் பாடல்கள் எதுவும் பெண்குரலில் நிகழவில்லை என்கிறார். ஆங்கிலேயர்களிடம் வேலைசெய்து சிறிது சமூக ஏற்றம் பெற நேர்ந்த தலித்துகளை பட்லர்கள் எனவும், வெடாசிக்கின்ற வேலைக்காரர்களாகவும் பொதுசமூகம் கிண்டல் செய்ததைதான் பல படங்கள் பிரதிபலிக்கிறது எனவும் பதிவிடுகிறார்.


சமூகமும் சினிமாவும் ஒன்றை நோக்கி மற்றொன்று என வைத்த ஆடிகள் எனலாம். இவற்றில் உருபெருகி பிரதிபலிக்கப்படும் பிம்பங்களின் மூலம் எவை என மேலோட்டமான பார்வையில் அறிந்து கொள்வது கடினம். அந்த தேடலுக்காக மேல்மட்ட தளங்களை ஊடுருவி தோண்டும் சில கருவிகளை இந்த  நூல் மூலம் பார்வையாளனுக்கு தருகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். அதே வேளையில் சமூகத்தின் பொதுப்போக்கு மீதான உடன்பாடு மற்றும் மீறல் என்கிற கோணங்களில் படைப்பாளிக்கும் சில திறப்புகளை காட்டுகிறது    ‘எண்பதுகளில் தமிழ் சினிமா’ என்கிற நூல். 


- சிவமணியன்



https://www.commonfolks.in/books/d/enpathugalin-tamil-cinema



கருத்துகள்

  1. எண்பதுகளில் தமிழ் நூலை கவனப்படுத்தும் நல்ல மதிப்புரை. சாதிய கட்டமைப்பு சார்ந்து, பெண் அடிமை போக்கு சார்ந்து இயக்குனர்கள் பார்வை எவ்வாறு உள்ளது அவை காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிசெல்லும் எழுத்து.

    கோ.புண்ணியவான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பின்னூட்டம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்