ம நவீனின் ‘போயாக்’, 'யாக்கை' சிறுகதைகள் வாசிப்பனுபவம்
போயாக் சிறுகதை
ம நவீனின் ‘போயாக்’ கதை, முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள், பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப் போல விவரிக்கப்பட்டிருந்தது. தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர் என்ற மூன்று வழிகளில் ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி. அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.
கதைசொல்லியின் வருகை மற்றும் அந்த சூழலின் தங்கி இருத்தலால், , ஈபான் ஆதிகுடியினருக்கு ஆங்கிலக் கல்வியும், குற்றேவல் புரிந்தால் கிடைக்கும் கூலியும் பலனாகக் கிடைக்கிறது. சீமாவிற்கோ அவள் பழகுவதற்கு அரிதான அயலானின் அணுக்க உறவும், வாய்ப்பமைந்தால் உடலின்பமும் கிடைத்திருக்கும். சிம்பாவிற்கு தான் என்றுமே கேட்டிடாத ஆங்கிலக் கதைகள் கேட்கக் கிடைக்கின்றது. மரவள்ளிக் கிழங்கினை நொதிக்க வைத்து பெறப்பட்ட துவாக் பானம், சீமாவின் இளமையும், பார்வையும், உறவிற்கு இணங்குகிறேன் என்கிற உடல்மொழி ஜாடையும், காற்றில் பறந்து ஆடியபடி இறங்கும் சேவலின் வாலினைப் போல அவனுக்கு போதை தருகிறது. இவைகளைத் தவிர அவன் காணும் ஓரங் ஊத்தன், முதலைகள், பன்றிகள், நாய்கள், குச்சிகளின் மீது ஊன்றப்பட்ட மண்டை ஓடுகள், சீமாவின் வாயின் மண்புழுக்கள் என அனைத்துமே அவன் மனதில் ஊறுணர்வு ஏற்படுத்தி உறுத்துகின்றன. கதைசொல்லியால் உடைக்க முடியாத இந்த பாறைகளான, படகோட்டியின் ஓரங் ஊத்தன் , ஈபான் பழங்குடிகளின், முதலை வேட்டைத் திறனும், சீமாவின் ‘இளங்குமரிகளுடன் உறவிருந்தால் நெற்றியில் குறி வளர வைக்கும்’ மாந்திரீக பின்புலம் கொண்ட தந்தையும், என இவை ஒவ்வொன்றுமே, அயலானின் சுரண்டலிலிருந்து தங்களை காக்க அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டு பேணப்படும் காவல் தடுப்பு போலத் தோன்றுகிறது.
இந்தக் கதையில், குறைகளாக எனக்கு தோன்றிவைகள், முதலைகளின் அறிமுகமும் முதலைகளை ஈபான் பழங்குடிகள் வேட்டையாடும் நிகழ்வும், அதன் பின்னர் ஆயப்பட்டு அதனிலிருந்து பெறப்படும் கறியும் , கொழுப்பும் இன்னும் அழுத்தமான வர்ணிப்புகள் மூலம் சித்தரிக்கபட்டிருக்கலாம். உறுதியான மரத்தூண்களுடன் சுனை நீக்கப்பட்டு பிளக்கப்பட்ட மூங்கில்கள் சுவராக இருந்தன என ரூமா பராங்கில் ஆதிகுடிகளின் வாழ்வியல் சூழல் விவரிக்கப்படுகிறது. இன்னும் அழுத்தமாக அந்த சூழலின் இயற்கை வர்ணனைகள் மூலம் கதைசொல்லியின் மனவோட்டம் விவரிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை கதையின் மையமாக இதனைப் பற்றி பேசவில்லை, விளிம்பில் நிகழ்பவைகள் என்பதால் விரிவான விவரணைகளை தவிர்க்கப்பட்டும் இருந்திருக்கலாம்.
ஒரு மழைநாளின் பின்னிரவில் நிகந்த அந்த நிகழ்வினை அறிகையில் மனம் எந்த வகையிலும் ஒப்பவில்லை. நத்தையின் தடம் போன்ற பிசுபிசுப்பான கன்னம், என நாசூக்காக விவரித்திருந்தாலும் , மனச்சமர் குலைந்து, அந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கவே கூடாது என்றே மனதினுள் மன்றாடி வேண்டினேன். துருத் துகள்களால் நிரம்பி அதனை உதிர்த்தபடியிருக்கும் ஒரு பழுஞ்சிவப்பு இரும்பு ஆணி, மனிதத்தோலினை துளைத்தாலே, அது நாளங்களையும், நரம்பினையும் குத்தி, காயம் ஏற்படுத்தும், சீல் பிடிக்கும். அந்த காயத்திலிருந்து முற்றிலும் மீள, நீடித்த ஆறுதலும், கவனம் குவிந்த தொடர்ந்த சிகிச்சையும் தேவைப்பட்டும். எதிர்க்க திராணியில்லாத சிறுமியின் மீதான பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சி, மலரக் காத்திருக்கும் உறைபால் வெண்மையும் இளஞ்சிவப்பும் கலந்த ஒரு முகிழ்ந்த மொட்டின், மீது துருத்துகள் ஆணி இரக்கமின்றி கூராக செலுத்தி கிழித்ததைப் போல இருந்தது.
சிறுமியை பாலியல் நோக்கில் சுரண்டினால், எந்த ஒரு பின்விழைவும் நிகழாது என அறிந்து, இந்த குரூர நிகழ்வினை நிகழ்த்தியதற்காக கதைசொல்லிதான் முதன்மைக் குற்றவாளி. கதைசொல்லியின் காம நோக்கினை அருகிலிருந்து உணர்ந்தபின்னும், அறியாமை கொண்ட அல்லது அறிந்தும் அலட்சியத்துடன், சிம்பாவை தனிமையில் விட்ட சீமாதான் இரண்டாம் குற்றவாளி. குழந்தை சிம்பாவிற்கென எந்த ஒரு பாதுகாப்பும் தராமல், கதைசொல்லியிடம் கல்வி என்கிற சாக்கில், அனுமதித்த ஈபான் ஆதிக்குடி மக்களான லேத்தா , லாயவும் சேர்ந்துதான் குற்றவாளிகள். இத்தகைய ஆழமான கதை சமகால குற்ற நிகழ்வான, கிறித்தவ மதத்தின் பரப்பு ஊழியன் என்கிற அடையாளத்தில், தென்கிழக்கு ஆசியாவில் குழந்தை பாலியல் குற்றம் புரிந்த ரிச்சர்ட் ஹக்கில் பிண்ணனியை மட்டும் பேசவில்லை எனத் தோன்றியது.
கதைசொல்லியை காலனிய ஆங்கில, பிரெஞ்சு பேரரசு சக்திகளாகவும், முதலைகள் சீனர்களாகவும், ஈபான் பழங்குடியினர் மலேயர்களாவும், சீமாவை கங்காணிகளாக இருந்த யாழ்பாண தமிழர்கள், மலையாளிகள், மேட்டுக்குடி தமிழர்கள் எனப் பொருத்தினால் எந்த ஒரு உயிர் பாதுகாப்பும், இன்றி மலேசியாவின் மலைக் காடுகளில், உழைப்பின் செல்கள் அனைத்தையும் உருவப்பட்டு, குரூரமாக சுரண்டப்பட்டு, முகமில்லாமல் மடிந்த பறையர்கள் என ஒருமுகமாகப் பார்க்கபட்ட, ஆதிகுடி தமிழக மூதாதையர்கள் என் முன் தோன்றினார்கள். மலேசிய வரலாற்றினை அறிவதும் என் மண்ணின் வராலாற்றை அறிவதும் ஒன்றுதான் என நான் அந்த தருணத்தில் உணர்ந்தறிந்தேன்.
கனவு கலைந்து, கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன். அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில் ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது. ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர் செம்மண் நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும், ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும், ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.
பேக்கேஜில் வாடகை எடுத்து பெற்ற நேரத்தை அவசரத்துடன் வீணடிக்க விரும்பாத கதைசொல்லி, அவனுக்கு கிளர்ச்சி தந்து, மயக்கி முயக்க முயலும் விலைமகளான கேத்ரினாவுடன் உரையாடுகிறான். கேத்தரினாவின் தந்தை ஈத்தன் அவரின் கடல் பயண தோழர்களுடன் புயல் வரும் என்ற முன்னறிவிப்பையும் மீறி, தன் மகளின் திருமண ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தால், மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறார். மிடுக்காக ஆங்கிலம் பேசி , மீன்களை நட்சத்திர விடுதியில் விற்க தெரிந்த கோபி, ஒரு முறை , கேத்தரினாவிடம் இணக்கமில்லாத பாலியல் அத்துமீற முயன்றவன். கோபியை பழித்து பேசிய சில நிமிடங்களில், கடலை நோக்கி குறியை நீட்டிய, ஈத்தனை ஒரு பெரிய அலை வந்து அடித்துச் செல்கிறது. அந்த கணம் முதல் இரண்டு மாதங்களுக்கு கடலில், மூச்சை பிடித்தபடி, பலூன் போல மிதக்கும் ஈத்தன், தேவனின் கண்களையும், சிறுவயதில் பார்த்த மேகச்சிலுவையையும் தேடுகிறான். கடலின் அலையாக தன்னை மாற்றிக் கொண்டு,, மீன்களுக்கு தன்னை இரையாக ஒப்புகொடுத்து உப்பு நீரில், அக்கினி உருண்டையாக மாறிய, ஈத்தனின் முடிவை அறிந்த பின் உடைகளை கலைத்துவிட்டு உறவிற்கு ஆயத்தமான கதைசொல்லி ஏன் கால்சட்டையை அவசரமாக அணிந்து கேத்தரினாவை விட்டு விலகுகிறான் என்ற கேள்வியுடன் கதை முடிந்தது.
ஈத்தனும், கோபியும், கதைசொல்லியும் மூன்று விதமான இயல்புடைய ஆண்கள். கோபிக்கு கடல் என்பது ஒரு லாபமீட்டும் தொழிற்சாலை. தனக்கு உரிமையில்லாத பெண் முன் ஆண்குறியை காட்டும் அவன். தன் முன்பகைக்காக கடலில் விழுந்த ஈத்தனை கைவிட்டதற்கான வாய்ப்பும் கதையில் உண்டு. ஈத்தனோ தன் மகள் மீது அன்பும், கடலன்னையின் மீதும் பேரீர்ப்பும் கொண்டவன். ஒரு விபத்தால், கடலில் விழும் ஈத்தன், தன்னிலை மறந்து கடலுக்குள் தன்னை அமிழ்த்தி அலையாக தன்னை ஒப்புக் கொடுத்து, பிழைத்து வந்து, நிலம் தந்த சமநிலையைத் தாள முடியாமல், மீண்டும் அதே இடத்திற்குச் சென்று மாள்கிறான். கோபி, ஈத்தன் என்ற இரு துருவங்களுக்கு இடையில் அலைபவனே கதைசொல்லி எனத் தோன்றுகிறது. முதலில் தன் நிறமுள்ள பெண்ணிடம் முயக்கத்தில் கூட தன்னை விட்டுக்கொடுக்காத கதைசொல்லி, அவளிடம் தன்னை சிறிது சிறிதாக இழக்கிறான். கடலில் விழுந்த தந்தையின் வாழ்வின் நிச்சயமின்மையின் சூழல் கேத்ரினாவின் சொற்களில் விரிய விரிய, அவள் உடல் மீதான கதைசொல்லியின் பார்வை விவரிப்பின் நுட்பம் கூடுகிறது, அவள் உடல் கருமையில் ஒளி கூடுகிறது, காம வேட்கை தீவிரமடைகிறது.
சூழலியல் தன்னார்வலரும் , அறிவியல் புனைகதைகள் எழுத்தாளருமான சாரா மைட்லாண்ட (Sara Maitland ) ன் Moss witch என்கிற கதையிலும் பச்சை பாசி ஆடை அணிந்த ஒரு இயற்கை அன்னை வருகிறாள், அவள் பெயர் பாசிக் கிழவி (Moss witch). காட்டில் தாவர ஆராய்ச்சிக்காக வரும் ஒரு இளைஞன், பாசிக் கிழவியின் எச்சரிக்கையை மீறி ஒரு வளர் கொடியின் தளிர் தண்டை வெட்டியவுடன், அவனை பாசிக் கிழவி அறைகிறாள். இறந்த அவனின் உடலின் பாகங்களை ஒன்றொன்றாக வெட்டி எடுத்து கலைநயத்துடன் அவைகளுக்குறிய தாவரங்களுக்கு உரமாக்கி அழகூட்டுகிறாள். இறுதியில் மண்டை ஓட்டினை பொடிபோல உதிர்த்து காற்றில் தூவியபடி மறைகிறாள். மேற்கின் இந்த இயற்கை அன்னையைப் போல பரிவற்றவள் அல்ல ‘யாக்கை’யின் கிழக்கின் கடலன்னை. படகில் நின்ற ஈத்தனுக்கு, முதலலை என்னும் அபாய எச்சரிக்கை தருகிறாள்.. உப்பில் துவர்த்த பச்சைப் பாசியை உணவாக தருகிறாள். காற்றைப் பிடித்து எடையிழந்தால், நாட்கணக்கில் மிதக்க வைத்து காக்கிறாள். ஆனால் அவள் தரும் உச்ச ஆன்மீக அனுபவத்திற்கு ஈடாக, உப்பு நீரில் தாள முடியாத வலியினைத் தருகிறாள். மகள் கேத்தரினுடனான உறவின் முறிவினை கோருகிறாள்.
கடலன்னையை எந்த ஒரு மண்ணின் நிலம் அல்லது பண்பாட்டு சூழல் எனலாம். கோபியை நிலத்தை, பண்பாட்டை சுரண்டி தன்னலத்திற்காக விற்கத் தயங்காத தன்னை முன்னிறுத்தும் முச்சந்தி வியாபாரி எனலாம். மனத்திண்மை கொண்ட ஈத்தனை அதே பண்பாட்டு சூழலில், அர்பணிப்பும் தேடலும் கொண்ட ஒரு படைப்பு மனம் எனக் கொள்ளலாம். அவன் கடலில் விழுந்து அமிழ்ந்த அந்தக் கணம், படைப்பு மனம் அவனறியாமல், தன்னை இழந்து, தீவிரமாக பண்பாட்டுத் தேடலை துவங்கும் தீவிரமான கணம் எனலாம், விடலைப் பருவ முதல் காதலில் விழும் கணம் போல. இந்த மாபெரும் தேடல் கடலில் அவன் மூழ்கிய பின், அவன் அணுக்கமான உறவுகளை கைவிட நேரலாம். உப்பு நீரில், மீன்கள் அவன் சதையை கொத்தித் தின்னலாம். இந்த கொடும் விலைக்கு பதிலாக அவன் பெறுவது சாமானியர்களும், மீன்களைத் தேடும் தேர்ந்த கடற்பயணிகளும் கூட காண வாய்ப்பே கடலன்னையின் தட்டிவிடாத மார்புக் காம்பினை, இறைவனான கர்த்தரின் கண்களை, மேகச் சிலுவையை, செம்மண், பாசிப் பச்சை கடலை. கடலின் சூழலை ஒரு தொட்டிக்குள் அடக்கி, வெப்ப நீர் பீலி வழியாக பாய்ச்சும் ஏழடி ஜக்கூசியில், அனுபவிக்க எத்தனிக்கும் கதைசொல்லி போன்ற இடைநிலையர்களுக்கு இந்த தேடலின் ஆழம் புரிய நேர்ந்தாலும் தங்கள் ஆழ் மனத்தை கலைக்க முடியாமல் வெற்றாடையை அணிந்தபடி விலகுவார்கள். ஆனால் உப்பு நெடியுடைய கடற்காற்றும், ஈத்தனின் போராட்டமும் அவர்கள் ஆடையையும், தோலையும் ஊடுறுவி உள்ளத்தை என்றுமே துளைத்து ஈர்க்கும்.
நவீனுக்கு என் வாழ்த்துக்கள்.
<நிறைவு>
கருத்துகள்
கருத்துரையிடுக
பின்னூட்டம்