ம நவீனின் வெள்ளை பாப்பாத்தி வாசிப்பனுபவம்
வெள்ளை பாப்பாத்தி சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி, நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை, நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து, அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள். என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன். சிறுவர் பள்ளியில் போட்டியாளராகவும், அணுக்க தோழர்களாகவும் ஒன்றாகப் படிக்கும் சிறுமியான கொடிமலரும், சிறுவனான கணபதியையும்தான் கதையின் முதன்மைப் பாத்திரங்கள். முன்பு ரப்பர் தோட்டத்தில் வேலை...