கரம்சோவ் சகோதரர்கள் ஊட்டி உரை 2018

மதுரை மீனாட்சி சொக்கநாதர் பேராலயத்தின் ராஜ கோபுரங்களில் பக்தி இயக்க காலத்தில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம்தான்  தொன்மையானது. வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் காலத்தால் இளையது. தெற்கு ராஜ கோபுரம் நெருக்கமான நுணுக்க சிற்பங்களால் நிரப்பப்பட்டு மற்ற கோபுரங்களை விட விரிவான கலை நயம் மிக்கது.   ஒவ்வொரு முறையும் மதுரைக்கு செல்லும்போது, தவறவே விடாமல், இந்த தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் நான் ஆலய வழிபாட்டிற்காக நுழைவேன். சிலமுறை ஆலயத்தினுள் சென்று வழிபட எடுத்துக்கொண்ட நேரத்தை விட இந்த தெற்கு கோபுர வாயிலில் நின்று,  தலை உயர்த்தி, சிற்பங்களை பிரமிப்புடன் பார்த்த நேரக்கணக்கு அதிகம். இந்த கோபுரத்தை நிறுவிய ‘சிறுமலை செவ்வந்தி மூர்த்தி செட்டி’ ஒரு கல்வெட்டில் பெயராக அல்லது ஒரு கல்சிற்பமாக வரலாற்றில் தங்கிவிட்டாலும், இவரின் ஆத்மார்த்தமான, தார்மீக முயற்சியின் வெளிப்பாட்டால் நிறுவப்பட்ட  இந்த கோபுரத்தின் பிரம்மாண்டமும், கலைநயமும் காணுந்தோறும் கண்களை நிரப்பி, மனதினைப் பொங்கி விரிய வைக்கின்றன.

Towers-of-Meenakshi-Temple-Madurai


பெரு்நாவல்களும் ஒரு நோக்கில்  பேராயலயங்கள்தான் எனத் தோன்றுகிறது. அப்படியானால்,  நுணுக்கமாக புனையப்பட்டு, உச்ச நெருக்கடி தருணங்களில், நேர்எதிர் பாத்திரங்களுடன் மோதவிடப்பட்டு,  ஊகத்தில் சிக்காத உரு கொண்டு மீளும் பிரம்மாண்டமான அதன் முதன்மைப் பாத்திரங்கள், ஆலய நுழைவு வாயிலின் இந்த அதிஉயர கோபுரங்களோ என பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.  இந்தப் பாத்திரங்களின் ஆகிருதியுடன் இதனைப் படைத்த படைப்பாளி வாழ்வினை ஒப்பிடும் போது அவன் எங்வளவு செறி வாக வாழ்ந்திருந்தாலும், அவன் வாழ்வு மொத்தமும் 10 அடி கல்சிற்ப கலைநயத்தில் அடக்கும் அளவுதானோ என எண்ண வைக்கிறது.

தனது 59வது வயதில் இறந்த பியோதர் தஸ்தோவெஸ்கி இறப்பதற்கு முன்னதாக படைத்த பெரும்நாவல்  கரம்சோவ் சகோதரர்கள். திசைக்கொன்றான நான்கு கோபுரங்களைப் போல,  முற்றாக விலகிய வேறுபட்ட பாத்திரங்களாக பியோதர் கரம்சோவ்  மற்றும் அவரின் மகன்கள் திமித்ரி, இவான், அல்யோசா புனையப்பட்டிருக்கிறார்கள். இந்த  அதீத அகம் கொண்ட மனங்களை சிறு அறைகளுக்குள்,  நெருக்கமாக உரையாட விட்டு, அவர்களின் முரண்பட்ட கருத்துகளை எண்ணங்களை மோதவிட்டு , புரட்டிய பக்கங்கள்தோறும் பேராசை, அன்பு,  தாராள சிந்தனை, ஆன்மீகம் , தடையில்லா தனமனித விருப்பதேர்வு (free-will), நல்லொழுக்கம், அரசியல் என பல கோணங்களில் முடிவில்லா கேள்விகளை எழுப்பி விடைகளை தேட வைத்த பெரும்படைப்புதான்  இந்த நாவல்.எந்த சூழலில் இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது?

நெப்போலிய படையெடுப்புகளின் பின்னரான 19ம் நூற்றாண்டு ரஷ்யாவில்,பிரெஞ்சு மொழியும், இலக்கியமும்  தீவிரமான பாதிப்பினை செலுத்தியது. நூற்றாண்டுகளாக இருந்த பண்ணை அடிமை முறையினை நீக்கவும், தாராளவாத சீர்த்திருத்தங்களை  வலியுறுத்தியும் போராடிய, ஐரோப்பா சென்று கற்ற ரஷ்ய இளைஞர்களில் பிரெஞ்சு இலக்கிய பாதிப்பு இன்னும் ஆழமானது. இந்த இளைஞர் கூட்டம்  ஜார் அரசால் கண்காணிக்கப்பட்ட கெடுபிடியான சூழலில் தடை செய்யப்பட்ட ஒரு புத்தகத்தினைப் பற்றி ரகசியாக விவாதம் நிகழ்கையில், தஸ்தோவெஸ்கி மற்றும் அவரின் இலக்கிய தோழர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்குள்ளாகிறார்கள்.  சாவின் விளிம்பில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு கட்டாய ராணுவப் பயிற்சிக்கும், சைபீரிய சிறைவாசத்திற்கும் கடத்தப்படுகிறார். வாழ்வின் உச்சபட்ச சாத்தியமான இந்த வதை தருணங்களை எதிர்கொள்ளும் தஸ்தோவெஸ்கி தனது பல்வேறு படைப்புகளில் மீள மீள இவற்றை நினைவு கூர்கிறார்.

வலுக்கட்டாய நாடுகடத்தலுக்கு பிறகு, ஜார் அரசாங்கத்தால் மன்னிக்கப்பட்டு நாடு திரும்புகிறார். நீடித்து  தொடர முடியாத முதல் இரண்டு திருமண வாழ்விற்குப் பிறகு, தன்னுடன் சுருக்கெழுத்தாளராக பணியாற்றிய அன்னாவை காதலித்து திருமணம் செய்கிறார்.  இடியட், குற்றமும் தண்டனையும் பெருநாவல்களின் படைத்த பிறகு இலக்கிய பிரபலமாக மதிப்பேற்றமடைகிறார். ஒரு கட்டத்தில், ஜார் மன்னரால் நேரடியாக அவரின் மகன்களான   இளவரசர்களுக்கு பகுதிநேர ஆன்மீக வழிகாட்டியாக அமர்த்தப்படும் அளவிற்கு செல்வாக்கு பெறுகிறார். தன்னுடைய காலத்து சிறந்த இலக்கிய மேதைகள், ஓவியர்களுடனான நட்பும், பொதுமக்களால் நன்கறிந்த  படைப்பு பிரபலமாகவும் வலம் வருகிறார். புதியதாக வாங்கிய பெரிய வசதியான வீட்டில் குடியேறி, உலகியல் வாழ்விலும் தன்னிறைவு அடைகிறார். இந்த சூழலில்தான் அவர் ‘கரம்சோவ் சகோதரர்கள்’ நாவலை எழுதுகிறார். அவரின்  இந்த வீடுதான் கரம்சோவ் நாவலின் பின்புலமாக பல இடங்களில் வருகிறது.

இந்த நாவலை ஏன் வாசிக்க  வேண்டும்?

கொந்தளிக்கும் அகத்தை எந்த தடுப்பும் கொண்டு மூடியிடாமல்  தீவிர உணர்வுகளை வெளிக்காட்டும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்காக,

நாவலில்  முதன்மையான பாத்திரம்,  பியோடர் பாவ்லோவிச் கரம்சோவ்.   மாநகர முழு சாலையையும் ஆக்கிரமித்துக் கொண்டு,  கரும்புகையை கக்கிக் கொண்டு, கோமாளித்தனத்துடன் குலுங்கிக் கொண்டு, முடை நாற்றத்துடன் ஊர்ந்து செல்லும் ஒரு கனரக இயந்திரக் குப்பை வண்டியை எனக்கு நினைவூட்டுகிறார்.  ஒழுக்கமிலா கட்டற்ற காமவேட்கையுடையவர். கருத்து உறுதியற்ற வம்பாளர். கருமி, பிடிவாதக்  கோமாளி. திருமணத்திற்கு முன்பு பிறரை அண்டி வாழ்ந்தவர். தன் முதல் மனைவியான அடிலேய்டாவிடம் வரதட்சணையாக பெற்ற 28 ஆயிரம் ரூபிளிலிருந்து பணக்காரனானவர். தனக்கு பிறந்த மூன்று மகன்களையும் வளர்க்கும் பொறுப்பினை ஏற்காதவர். இருந்தாலும் மூன்றாம் மகனாக அலெக்ஸியின் என்கிற அல்யோசாவின் மீது என்றும் மாறாத  நேசம் கொண்டவர்.

மி்த்யா என்றழைக்கப்படும் திமித்ரி  பாவ்லோவிச் கரம்சோவ் தந்தையின் முதல் மனைவியான அடிலெய்தாவிற்கு பிறந்தவர். அன்னையி்ன் உறவினர்களிடம் தஞ்சம் கொண்ட இவர் பெரும்பாலும் வெளிநாடுகளில் வளருகிறார். பெண்பித்து கொண்டவர், நிச்சயிக்கப்பட்ட பெண் காத்ரினாவிடமிருந்து பெற்ற 3 ஆயிரம் ரூபிளை, உறுப்பாசையாலும், சதையாசையாலும்  க்ரோசென்காவிடம் பறி கொடுத்துவிட்டு, கரம்சோவ் தந்தையிடம் சொத்துரிமைக்காக பூசலிடுபவர்.

80ca1e3425eccf17086380141cdcbd44


வன்யா என்ற இவான் பாவ்லோவிச் கரம்சோவ் தந்தையின் இரண்டாவது மனைவி சோபியாவிற்கு பிறந்தவர்.  அழகன், கற்றவர், இராணுவ வீரன். பகுத்தறிவாளி, ஆச்சார ரஷ்ய

திருச்சபையின் செயல்பாட்டில் விமர்சனம் கொண்டவர்.  எந்த ஒரு ஆன்மீக அமைப்பும் அதன் உறுப்பினர்களின் குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலாக தங்களைத்தானே நிறுவிக்கொள்ள கூடாது என்கிற எண்ணம் கொண்டவர்.  ஆன்மா அழியும், ஆதலால் மனிதன் குற்றம் புரிகின்றான் இதை தடுக்க இயலாது என்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் தீமையின் வடிவாக ஒரு எதிர்சக்தி இருப்பதாக நம்பிக்கை கொண்டவர்,  ஆழ்மனக் குரலாக அந்த எதிர்சக்தி இவரின் ஆன்மாவுடன் பேசி வாதிடுகிறது. ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கத்ரீனாவின்பால் ஈர்க்ப்படுகிறானர்.

இந்த நாவலில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் - அல்யோசா எனப்படும்  அலெக்ஸி பாவ்லோவிச் கரம்சோவ், துறவியும் பெரியவருமான ஜசிமாவினை குருவாகக் கொண்ட முழு அர்பணிப்பு கொண்ட கிறித்தவர் , களங்கமற்ற வெள்ளைத்தாள் மனது கொண்டவன், அதிர்ந்து பேசாதவன்.,  காலில்லாத இளைஞியான லிசியின் மீது ஈர்ப்பு கொண்டவர். இவரின் அறிமுகத்தில் தஸ்தோவெஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறா்.
‘ அல்யோசா என்பவன் யார் ?   அவனுக்கு எந்தவித தொடர்புமில்லாத 10 லட்சம் மக்கள் வாழும் சிற்றூரில் காசின்றி  ஆதரவின்றி தனியாக விட்டுவிட்டால் கூட. குளிரிலோ பசியிலோ தனிமையிலோ உழன்று அழியமாட்டான். ஒருவர் கூட ஆதரவு கொடுக்காவிட்டாலும், அவன் தன்னைத்தானே பார்த்துக்கொண்டு பிழைத்து வாழ்வான். எவரின் தயவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல’ என்கிறார்.

இந்த நாவலை ஏன்  வாசிக்க வேண்டும்?

இந்த நாவலின்  ஆட்கொள்ளும் சூழல் விவரிப்பிற்காக, உதாரணமாக. பெரிய துறவி  ஜசீமாவின் அறையில் சொத்து தொடர்பான பூசலை சமரசம் செய்து தீர்க்க ஜசீமா, அவரின் சீடர்  அல்யோசா, மற்றும் இரண்டு உதவிப் பேராயர்கள், தந்தை கரம்சோவ் , அவரின் பொருந்தா நட்பு கொண்ட குடும்ப நண்பரான மிசோவ் ஒன்றாக அமர்ந்திருக்கிறார். அந்த சூழலை விவரிக்கையில்,   சாளரத் திண்டில் வைக்கப்பட்ட இரண்டு பூந்தொட்டிகள், ஒரு மேரி மாதாவின் படம், அதன் கீழ் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு, பீங்கானில் செய்யப்பட்ட ஒரு முட்டை, பீங்கானில் செய்யப்பட்ட ஒரு அதிசிறிய சிலை (porcelin cherub) போன்ற பொருட்களை வர்ணிக்கிறார்.இவற்றில் எந்தெந்த பொருட்கள் எந்த பாத்திரங்களோடு பொருத்தி அடையாளமிடலாம் என  ஒரு வாசகனாக என்னை சிந்திக்க வைத்த, அந்த சூழல் விவரிப்பின் எழுத்தாள்மை என்னை ஆட்கொண்ட காரணத்திற்காக.

இந்த நாவலை ஏன்  வாசிக்க வேண்டும்?

இந்த நாவல் தருணங்கள் எழுப்பிய கேள்விகளுக்காக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிறித்துவுக்காக  தன்னை அர்பணித்த‍ அல்யோசா, கரம்சோவ் தந்தையை சந்திக்கும்போது, தனது அன்னையும் கரம்சோவ் தந்தையின் அதிகாரத்திற்கு ஒரு  சொல் கூட மீறாமல் அடிமைபோல வாழ்ந்து இறந்த சோபியாவின் கல்லறையை காண வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார். கரம்சோவ் தந்தையின் விசுவாச வேலையாளரான கிரிகோர் பராமரிப்பின்றி கைவிடப்பட்டு ஒரு மூலையில் புதைந்திருந்த சோபியாவின் கல்லறையைக்கு இட்டுச் சென்று காண்பிக்கிறார். தன் அன்னையின் கல்லறைமுன் நின்று சில நிமிட மௌனத்தை மட்டும் காணிக்கையாக்கிச் குற்றங்குறை கூறாமல், கேள்வி கேளாமல் விடைபெறுகிறார் அல்யோசா.   அந்த தருணத்தில் ஏதோ ஒரு உணர்வினால் தூண்டப்பட்ட தந்தை கரம்சோவ் முதல் மனைவியான அடிலேய்டாவின் சமாதியை நினைவுகூர்ந்து, அதனை ஏன் பராமரிக்கவில்லை என கிரிகோரிடம் கடிந்து கொள்கிறார். பின் போதுமான பணத்தினை கொடுத்து, கரம்சோவை என்றுமே மதியாமல் அவமதித்த, தூற்றப்பட்ட உறவுடன் வாழ்ந்த திமித்ரியின் அன்னையான அடிலேய்தாவின் கல்லறையை சீர்செய்து பராமரிக்க ஆணையிடுகிறார். பொறுப்பற்ற அவரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன  என்பது போன்ற கேள்வியை புனைவுத் தருணங்களில் எழுப்பியதற்காக.

இந்த நாவலை ஏன்  வாசிக்க வேண்டும்?

அள்ளித் தெளித்து அன்புப் பேரலையில் நனைக்க வைக்கும்   தருணங்களுக்காக துறவி ஜசீமாவினை சந்தித்து அவரரவர்களின் துக்கங்களிலிருந்து விலக்கு பெற , குடியானப் பெண்கள்  ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். முதலானவள் தன் கைக்குழந்தை இறப்பினால் பெற்ற தாள முடியாத துயரத்திலிருந்து விலக்கு கோரி ஆசி பெறுகிறாள். இரண்டாமவள் குடிகார கணவனால் நாள்தோறும் உடல் வன்முறைக்கு ஆளானவள். அந்த  துயரத்திலிருந்து குணப்படுத்த பிரார்த்தனை செய்கிறாள். மூன்றாமவள் தொலைதூர தேசத்தில் இராணுவ வீரனாக பணிபுரியும் மகனின் அருகாமைக்காக வேண்டுகிறாள். நிறைவாக வருபவள், நாள்முழுக்க வயலில் உழைப்பின் செல்கள் உருவப்பட்டு,  கை கால்கள் எல்லாம் காய்ச்சி வெடித்த ஒரு பெண், தன்னலத்தை விடுத்து பேராயர் ஜசீமாவின் நலத்தினை விசாரிக்கிறாள். 6 கோபெக் (அதாவது 6 பைசாவிற்கு ஈடான) கொடுத்து அவளை விட ஏழ்மையான பெண்ணுக்கு கொடுக்குமாறு கோரி விடை பெறுகிறாள்.  இதை தொடர்ந்த நிகழ்வில் அல்யோசாவும் , லிசியும், ஒருவரை ஒருவரை பெரும்பரிவு கொண்டு புன்னகிக்கிறார்கள். இறைவனின் கருணை உலகின் அனைத்து பாவங்களையும் விடப் பெரிது. அன்பும் , கருணையும்தான் விலையில்லா புதையல்கள், இவையே மனிதரனைவரின். ஒட்டுமொத்த பாவத்திலிருந்தும் மீட்க வல்லது. என தஸ்தோவெஸ்கியின்  ஆழ்மனக் குரல் அன்புப் பேரலையின்

இடையில் ஒலிக்கிறது.

dostoyevskiy_2


இந்த  நாவலை ஏன் வாசிக்க வேண்டும்,

எதிர்பார கணத்தில், எழுச்சி கொண்ட,  வியத்தகு தருணங்களை புனைந்ததற்காக, ஸ்மெர்டியோகோவ் , பொதுமக்களிடும் ஈகையில் வாழ்ந்த,  நாற்றமுடைய முரட்டுத் துணி அணிந்த அபலைப் பெண்ணான லிசவெட்டாவின் முறைதெரியாத உறவினால் பிறந்தவன்.  கரம்சோவிற்கு நான்காவது மகனாக இருக்க வாய்ப்பிருந்தவன். சமையற்காரன், வலிப்பு நோயுடையவன், கரம்சோவின் வேலையாளான கிரிகோரினால் வளர்க்கப்படுகிறான். ஒரு உரையாடலில் வெளியின் நின்று கவனிக்கிறார். அந்த உரையாடல், எல்லை தாண்டிய ஒரு ரஷ்ய கிறித்தவ ராணுவ வீரன்,  ஒரு ஆசிய இஸ்லாம் நாட்டில் அகப்படுகிறான். அவன் கட்டாய மதமாற்றத்திற்கு உடன்படாமல் இறைநம்பிக்கையில் திடமாக இருந்து வதைக்கபட்டு இறக்கிறான். ரஷ்யர்கள் அனைவராலும் அவன் புனிதனாக்கப்பட்டு ஆராதிக்கையில், ஸ்மெர்டியோகோவ் , அவன் பெற்ற வதையை இந்த புனிதப்  பட்டத்தை எந்த விதத்திலும் நியாயம் செய்யாது. அவன் மதமாற்றமடைந்து அவிசுவாசியானாலும்  வாழ்ந்திருந்தால் அதுவே மேல் என்கிறார். இதைக் கேட்ட கரம்சோவ் தந்த கோமாளித்தனத்துடன் உரக்க சிரித்து ஆமோதிக்கிறார். வேறு ஒரு உரையாடலில், திருச்சபை பேராயர்கள் உணவுமேஜையிலிருக்கும் சிவப்பு ஒயின், தோழிலாளிகள் , விவசாயிகளின் காய்ச்சி தோலுரிந்து தொங்கிய கைகளின்  குருதியிலிருந்து பெற்றவை என்று கூறி மீண்டும் கோமாளி போல சிரிக்கிறார்.  மின்கம்பியில் உயர் மின் அழுத்தத்தால்  பொன்னிற மின் துகள்கள் ஒளிர்ந்து கொட்டியது போன்ற இந்த தருணங்களை புனைந்ததற்காக.

இந்த நாவலை ஏன்  வாசிக்க வேண்டும்?

இந்த நாவலின் தீவிர உரையாடல்களிடையில் தவிர்த்து கடந்து செல்ல முடியாத வகையில் கண்முன் வியாபித்து நிற்கும் பதாகையில் பொறிக்கப்பட்டது போன்ற கனமிக்க மேற்கோள்களுக்காக,

கடவுள் மறுப்பாளனான இவான் கரம்சோவ் ஒருமுறை இறை  நம்பிக்கைக்கும், மெய்மைவாதத்திற்கும் உள்ள தொடர்பின்மையைப் பற்றி உரையாடும் போது  

அதிசயங்கள் மெய்மைவாதியை என்றுமே பாதிப்பதில்லை.  அதிசயங்கள் அவன் கண்முன்னே மறுக்க முடியாத உண்மையாக வந்து நின்றாலும், அறிந்துணர்ந்த மெய்ம்மையின் தருக்கங்களை கொண்டு அளவிட்டு புரிந்து கொள்கிறான். இந்த அதிசய நிகழ்வுகளால் அவன் என்றும் இறை நம்பிக்கை கொள்வதில்லை. மாறாக அவன் கொண்ட நம்பிக்கையை ஊன்றி அவன் புரியும் தொடர் முயற்சியால்  நடைமுறையில் அதிசயங்களை நிகழ்த்துகிறான்.

என்கிறார்.

ஆன்மீக அல்யோசாவின் ஒருமுறை விவாதம் செய்யும் போது,

காலத்தை வென்று வாழ நீ விரும்பினால்,  உன் பயணத்தின் பாதி வழியில் சமரசம் கொண்டு திரும்ப கூடாது. நீ விரும்பிச் செல்லும் பாதை உனக்கு மனநிறைவைத் தராமல்  உன்னுள் ஏதோ எஞ்சுகிறது எனத் தோன்ற வைத்தால் சரியான பாதையில் செல்கிறாய் என்று அர்த்தம்.

இந்த நாவல் எனக்குத் தந்தது என்ன?

சிந்திக்க சிந்திக்க விரிவு கொள்ளும் இதன் பாத்திரங்களை, சூழலை என் நினைவினில் சேமித்து வைக்க,  நான் கண்டடைந்த ஒரு மாமேன்மையான வழிக்கு என்னை இட்டுச் சென்றதற்காக.

மீனாட்சி சொக்கநாதர் பேராலயத்தின்  தெற்கு கோபுரமாக - தாய்மையுணர்வு கொண்ட ஆன்மீக அல்யோசாவையும், மேற்கு கோபுரமாக படைப்பு சக்தியாக திமித்ரியையும், பகுத்தறிவாளனான இவானை வடக்கு ஞான  கோபுரமாகவும், கிழக்கு கோபுரத்தை இவர்களுக்கெல்லாம் மூலமான கரம்சோவ் தந்தையாக பொருத்திப் பார்க்கிறேன். நாவலில் கரம்சோவ் தந்தை, பணத்தை வைத்து பேராசை மனித மனங்கள் விளையாடிய ஒரு சூதாட்ட விளையாட்டில் கொல்லப்படுகிறார். உங்களுக்கு தெரிந்திருக்கும் , மீனாட்சி சொக்கநாதர் பேராலயத்திலும் அண்மையில் நடந்த தீவிபத்தினைப் பற்றி. முன்பு  வியாபாரிகளின் வரிசையான கடைகளினால் நிரப்பப்பட்டு முடைநாற்றமடிக்கும் ஆலயத்தின் கிழக்கு வாயில் இப்போது வெண்திரையால் மூடப்பட்டிருக்கும் அந்த கரிப்புகை தோய்ந்த கட்டிட இடிபாட்டினை. இந்த விபத்திற்கும், இடிந்த கட்டிடத்திற்கும் காரணம் ஒரு வகையில் பொறுப்பற்ற பேராசையும் கட்டற்ற லாபநோக்கும்தான் எனத் தோன்றுகிறது.

கரம்சோவ் நாவலில், திருச்சபைக்கு வரும் அனைவராலும் முதலில் வழிபடப்படும்  மரியாதைக்குரிய பெரிய துறவியும் அல்யோசாவின் குருவுமான ஜசீமாவை, ஆலயத்தின் தெற்கு வீதி வழியாக நுழைந்தவுடன் அருள்தர அமர்ந்திருக்கும்  ‘முக்குறுணி’ விநாயகராகப் பார்க்கிறேன். கரம்சோவ் தந்தையின் வீ்ட்டின் வாயிலைத் தாண்டி வந்து ஸ்மெர்டியோகோவை குளிக்கும் அறையில் ஈன்றெடுக்கும் நாற்றமடிக்கும லிசாவெட்டாவின் பிள்ளைப்பேறு வலியை,  சொக்கநாதர் சன்னதிக்கு முன்னதான மகப்பேறு் சிலையில் காண்கிறேன். வரிசைக்கிரமாமாக ஆண் கற்சிலைகளுக்கு முன்னால் நிற்கும் ஒரே ஒரு ஒயிலான நர்த்தகி சிலையில் மயக்கும் பேரழகி க்ருசோவாவைப் பார்க்கிறேன்.

நண்பர்களே!

மறுக்க முடியாத பேருண்மையாக நூற்றாண்டுகள் கடந்து,  திறந்து வைத்த அகத்தின் ஒவ்வொரு மூலை வெற்றிடத்தையும் நிறைத்து,  கண் முன் வியாபித்து நிற்கும் மீனாட்சி சொக்கநாதர் பேராலய வழிபாட்டின் போது ஒவ்வொரு முறையும் புதிய சிற்பங்களை பதிய கோணங்களில் கண்டு புதிய அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்திருக்கிறது.  அதுபோல 19ம் நூற்றாண்டில் இறுதியில் நிகழ்ந்த இந்தப் பெருநாவலால் கரம்சோவ் சகோதரர்களை முதல் முறை வாசிக்கையிலேயே எனக்கு பல உணர்வெழுச்சிகள் தந்தது. ஒரு முறை தெற்கு வாயில் கோபுரமான அல்யோசாவின் விழிக்கோணம் வழியாக நாவலுக்குள் நுழைந்த நான், மறுமுறை தன்மோக வேட்கை கொண்டு உழலும் திமித்ரியின் மேற்கு வாயில் வழியாகவும்,  அதன் பின் இறைமறுப்பாளனும், எதிர்சக்தியுடன் உரையாடியவருமான இவானின் வடக்கின் மொட்டை கோபுர வாயில் வழியாகவும் மீண்டும் மீண்டு்ம் நுழைந்து வாசிக்க விரும்புகிறேன். நிறைவாக கிழக்கு வாயில் வழியாக நுழைந்து இந்த சமூகம் கழித்து கொட்டிக் குவித்த தாங்கொண்ணா நாற்றமுடைய கட்டற்ற நுகர்வுவெறிக்கு மூலாதாரமான பேராசை, பெண்ணாசை, பணத்தாசை என்கிற குப்பை குவியலின் உச்சமான கரம்சோம் தந்தையின் மனம் வழியாக மீண்டும் ஒருமுறை செல்ல விரும்புகிறேன். இந்த வாசிப்புகள் தரும் அனுபவத்தை சிந்தனையிலிட்டு நிரப்பி என் அகத்தை நான் கலைத்து புது உரு கொள்ள விரும்புகிறேன்.

<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்