ஊட்டி இலக்கிய விவாத அமர்வுகள் 2018

‘Hot boxing’ என்கிற ஆங்கிலச் சொல்லினை , ஒரு சிறிய அறையினுள் சென்றமர்ந்து,  குழுவாக போதைப்பொருட்களை நுகர்ந்து, வேறெந்த நினைவினையும் அனுமதிக்காமல், போதை உணர்வினை மட்டும் அதிமடங்காக விரித்து அனுபவிப்பது  எனத் தோராயமாக வரையறுக்கலாம். ஒரு வசதியான விசாலமான அறையின் மேல்நிலையிலிருந்த, கருப்பு வெள்ளை படங்களின் தத்துவவாதிகள் சிறகுடைய தேவர்கள் போல புடைசூழ்ந்து ஆசியளிக்க, மூன்று நாட்கள் இலக்கியத்திற்காக நிகழ்ந்த ஊட்டி விவாத அமர்வுகளையும் இலக்கிய hot boxing என்பேன். 

1


முதல் அமர்வு பாவண்ணன் மொழியாக்கம் செய்த  சிறுகதையின் காளிபிரசாத் விமர்சன கலந்துரையாடலுடன் ஆரம்பித்தது. ‘காரணம்’ சிறுகதை கன்னட இளம் எழுத்தாளர் விக்ரம் ஹத்வாராவின் படைப்பு. எழுத்தாளனின் தன்னனுபவ விரிவாக்கமாக இருந்திருக்க சாத்தியமுள்ள இந்தக் கதை,  உள்ளடக்கத்தாலும், இறுதி முடிச்சவிழ்வதிலும், அற உணர்வு வெளிப்பாட்டிலும், வாசிப்புக் கோர்வையை தக்க வைத்ததிலும், குறிப்பிடத்தகுந்த கதையாக இருந்தது. எனினும் விமர்சன நோக்கில் சிறுகதையின் வடிவம் இந்தக் கதைக்கு பொருந்தி வரவில்லை. குறிப்பாக இதன் துவக்கம், மாகெணாவின் புறச்சூழல் விவரிப்பிலிருந்து இல்லாமல், முடிவிற்கு நெருக்கமாக,  காயம்மாவின் உளநிலை விவரிப்பிலிருந்து இருந்திருந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என விவாதிக்கப்பட்டது. இந்திய இலக்கியங்களிலேயே முதன்மையான சிறுகதைகள் கொண்ட, தமிழ், உருது இலக்கிய சூழலில் வாசித்து வளர்ந்த ஒரு சராசரியான எழுத்தாளன், சிறுகதையை எங்கு துவங்க வேண்டும் என்கிற தேர்ச்சியை முதல் கதையை எழுதும்போதே பெரும்பாலும் பெற்றிருப்பான் என்றார் ஜெமோ. கன்னட இலக்கிய சூழலில் பெரும்படைப்பாளிகளைத் தவிர்த்து எழுத வரும் இளம் படைப்பாளிகளிடம் இந்த படைப்பறிவு பெரும்பாலும் இல்லை என விவாதம் நடந்தது.


எம்.எஸ் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட என்.எஸ்.மாதவனின் ஹிக்விட்டா கதையின் விவாதத்துடன் நிகழ்வுகள் தொடர்ந்தன. கால்பந்து  கோல் தடுப்பராக கோடிட்ட தன் எல்லைக்குள் ஒடுங்கி இருக்காமல் தாண்டி வந்து உதைத்து ஆடிய ஹிக்விட்டாவாக பாதர் கீவர்கீஸ் மாறிய வியத்தகு தருணம் பற்றிய விவாதம் நிகழ்ந்தன.  கிறிஸ்துவைப் பற்றிய குறிப்பும், கிறிஸ்துவின் மீது பாதிரியாரின் தொடர்பு விவரம் கதையில் இல்லை என்பது சுட்டப்பட்டது. 1970களில் லத்தீன் அமெரிக்காவில் , உருவாக பரவலான ‘விடுதலையடைதல்’  என்னும் கருத்தியக்கம், பாதிரியார்களை சட்டையை கழற்றி களத்தில் வந்து போராட அறைகூவல் விட்டது. இலக்கியம் ஆன்மீகத்தை ஒதுக்கி வைத்து வேட்டியை மடித்து களத்தில் இறங்க ‘விளித்தல்’ என்பதாக கேரளப் பண்பாட்டு சூழலில் பார்க்கப்பட்டது. கதையின் இந்தத் தன்மை மட்டும் விமர்சனமாக ஜெவால் வைக்கப்பட்டது. என் வாசிப்பில் இளைஞரான கீவர்கீஸ் அடித்த கோல் வளைந்து சென்ற விதத்தை மழைவில் போல என்று எம்.எஸ் மொழியாக்கம் நினைவினில் அடிக்கோடிட்டு நின்றது.

IMG_1594


சந்தேகமின்றி முழு ஆர்வத்துடன்,  என் கவனத்தை துளி கூட விலக விடாமல்  பங்கேற்க வைத்தது எழுத்தாளர் நாஞ்சில் நாடனின்  கம்பராமாயண வாசிப்பு அமர்வுதான். பகழி, பரிபவம் , விடைப் பாகன், ஒண் நகர், வாள் நுதல்,  மனுசன், கோ-இயல், செறுநர் போன்ற சொற்களும் குருதி ஊறும் கிணறுகள், நறுங் கூந்தலின் சுறு நாற்றம்,  வெள்ளியங் கிரியை விண்தொட எடுத்து ஆர்த்திய இராவணன், சுள்ளிக் கிளையில் அமர்ந்திருந்த அனுமனின் புஜம், குகன், சுக்ரீவன், விபீஷணன் என ஏழு புதல்வரால் பொலிந்த ‘நுந்தை’ என ஒவ்வொரு சொற்களும், வரிகளும் உவமைகளும் பல நூறாண்டுகள்  ஓலைச் சுவடி, காகித அச்சு, கணிணி எழுத்துரு, கிண்டில் எனக் கடந்து வந்து என்னை அடைந்த கணத்தில் நான் பெற்ற உள்ளதிர்வை உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன். ‘எந்தையும் நீ’ என்கிற செய்யுளில், ‘எம்முன்’ என்பது என்முன் பிறந்த தமையனை அல்ல எனவும்.   அந்த செய்யுளில் எந்தை, தாய் மற்றும் தவ வந்தனை தெய்வம் என்கிற வரிசைக்கு நடுவில் இருப்பதால் அது மூதாதையர்களை குறிக்கும், என்கிற விளக்கத்தினைக் கேட்டு கம்பனிடம் ‘Not bad’ எனக் கூறி வாழ்த்து கூறி கைகுலுக்கத் தோன்றியது.

கவிதை விவாத அரங்கில் ஒரு தமிழ்க் கவிதை, ஒரு இந்தியக் கவிதை, ஒரு உலகக் கவிதை என மாதிரியாகக் கொண்டு சிறந்த கவிதையின்  தன்மைகள் பற்றி பல கோணங்களில் விவாதம் நிகழ்ந்தது. கவிதையில் முதலாவதாக தவறாமல் அமைய வேண்டியது Novelty என்கிற பிறிதொன்றில்லாத புதுமைத்தன்மை. அடுத்தது,  Context என்கிற சந்தர்ப்பம். Non-Rhetoric என்கிற சொல்சுழற்சி இல்லாத சொல் ஒழுங்கும் மற்றொரு இன்றியமையாத தன்மை என விளக்கப்பட்டது. புதுக்கவிதைகளுக்கு ஒழுங்கமைவும், ஓசைநயமும் ஒரு உசாத்துணை ஆனால் தவிர்க்க முடியாதது அல்ல எனவும் விவாதிக்கப்பட்டது.  இவையனைத்து அமைந்த கவிதைகள் தான் நிறைவாக அது தரும் பொருள், தரிசனம், எழுப்பும் கேள்விகள் என வாசகனை இட்டுச் செல்லும் என விவாதிக்கப்பட்டது. அவ்வகையில் செர்பிய கவிஞரான வாஸ்கோ போபாவின் குவார்ட்ஸ் என்கிற கவிதை, பூமிக்குள் இருந்து எழுந்த கை, வானத்தில் வீசிய குவார்ட்ஸ், முடிவிலா கோணங்களில் வெளி ஒளியை உள்ளெதிரொளிக்கும் வானமான கவிதையை சிறந்த கவிதைக்கான சான்றாக கூறப்பட்டது.

IMG_1676


சுநீல் கிருஷ்ணனின் இலக்கிய விமர்சன அமர்வில், ரசனை விமர்சனத்திற்கும், கோட்பாடு விமர்சனத்திற்குமான வேறுபாடும், இரண்டின் அவசியமும்,விவாதிக்கப்பட்டது. தமிழில் க நா சுவால் முன்னெடுக்கப்பட்ட ரசனை விமர்சனத்தால் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா எனப் பல முன்னோடி நவீனப்  படைப்பாளிகளின் படைப்புகள் இன்றுவரை மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் கோட்பாடு எடைக்கல்லையிட்டு படைப்பினை கீழிழுக்கும் நோக்கு மட்டுமே பரவலாக கோட்பாடு விமர்சனம் என்கிற பெயரில் நிகழ்கிறது எனவும். இத்தகைய விமர்சனங்கள் படைப்பின் முன் உள்ளத்தை திறந்து வைக்காத,  பொறுப்பற்ற கோட்பாட்டு விமர்சர்களால் முன்னெடுக்கப்படுகிறது எனவும் , ஊழல் மலிந்த கல்விச் சூழலில், படைப்பூக்கம் சிறிதும் இல்லாத, தங்கள் இருப்பை தக்க வைக்கும் நோக்கம் மட்டுமே இதற்கு காரணம் எனவும் விவாதிக்கப்பட்டது. ஆனால் ஒரு நல்ல கோட்பாட்டு விமர்சனம் என்பது ரசனை விமர்சனம் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்புமாறு, படைப்பின் அடுக்குகளுக்குள் ஊடுருவி அதனை விளக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. முழு அமர்விலும், தமிழில் குறிப்பிடத்தகுந்த வகையில் பங்காற்றிய ஒரு நல்ல கோட்பாடு விமர்சனப் பெயர் கூட  சுட்டிக்காட்டப்படவில்லை.

விஷால் ராஜாவின் ‘முடிவின்மையில் நிகழ்பவை’ கதை விவாதத்தில்,  கதையின் வடிவக் கச்சிதம் பற்றி விவாதிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர்களில் விஷால் ராஜா காமத்தை மட்டும் எழுதாமல் காதலை எழுதுவது நல்ல நோக்கு எனவும், இந்தக் கதையில்  வண்ணங்கள் நினைவுகளுடன் தொடர்புபடுத்து விவரிக்கத் தகுந்தவை எனவும் வாசக அனுபவம் பகிரப்பட்டது. இந்தக் கதை ஒரு தேவதைக் கதையாக (Fairy tale) புனைந்திருப்பதால், அதில் குழந்தைமைத்தன்மை (Innocence) கொண்டிருப்பது அவசியம் எனவும் விவாதிக்கப்பட்டது.  கதையின் போக்கில் குறியீட்டு ரீதியான படிமங்கள் பெருகப் பெருக அந்த மொத்த குவியலை வாசகன் தொடர முடியாமல் அவன் கவனத்தை கலைக்க வாய்ப்பிருக்கிறது எனவும் விவாதிக்கப்பட்டது. சொல் கட்டுப்பாடு கொண்டு, எண்ணி எண்ணி கோர்க்கும் நவீனத்துவ மனநிலையை பெறுவதற்கு முன்பு சுந்தர ராமசாமி எழுதிய  ‘ஜன்னல்’ கதை விவாதிக்கப்பட்டது , அவரின் நோயுற்று சில காலம் படுக்கையிலிருந்த அவரின் சிறுவயது நிகழ்வினை மீட்கும் படியான ஒரு நல்ல கதை எனவும், ஜன்னல் என்பது புத்தக வாசிப்பை சுட்டுவதாகவும், அதில் அவர் பெற்ற அனுபவங்களை கதையில் விவரித்திருப்பதாகவும் பல கோணங்களில் கதை விவாதிக்கப்பட்டது. ஆன்டன் செகோவின் சிறுகதை, பஷீரின் சிறுகதை விவாதங்களின் போதும், எழுத்தாளனின் பின்புலமும், அதை கதையுடன் தொடர்பிட்டு வாசகன் பெற வேண்டிய நோக்குகள் பற்றியும் விவாதம் நடந்தது.

சந்திரசேகர் நேர்த்தியாக முன்னமர்ந்து நிகழ்த்திய இந்தியத் தத்துவ முறைகள், அறிதல் கோட்பாடு விவாதம்  கவனம் பிசகாமல் உள்ளிழுத்த மற்றொரு சிறந்த அமர்வு. இந்திய அறிதல் சிந்தனை பிரமாணங்களான பிரத்யட்சம், அனுமானம் , சப்த பிரமாணம் , உபமானம், அர்த்தப்பிராப்தி, அனுபலப்தி என்பதற்கு ஜெமோ கோடுத்த கேரளக் கடற்கரையில் இறங்கிய அன்னாசிப் பழத்தை, ஒரு மலையாளி எவ்வாறு அடுக்கடுக்காக மேற்சொன்ன முறைகளைக் கொண்டு அறிந்திருப்பான் என்னும் விளக்கம் இவற்றைப் பற்றி மேலும் அறிய ஆர்வத்தை பெருக்கியது . இந்த அறிதல் முறைகளில் சிலவற்றை பெயரறியாமல் ஆனால் நடைமுறையில் பயன்படுத்துகிறோமோ என எண்ண வைத்தது.  இந்த வரிசை அறிதல் முறைககளில் 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், தனிப்பட்ட உந்துதல் மற்றும் தேடல் இல்லாமல் இவற்றை இன்றைய கல்விச் சூழலில் உச்சபட்ச கல்வி நிலையங்களிலும் கூட கற்க வழியே இல்லை எனவும் பகிரப்பட்டது. மரபிலக்கிய அமர்வில், திருக்குறளில் பரவலாக வாசித்தறியாத குறள்களின் மீதான விவாதம் நிகழ்ந்தது, பொன் தூண்டிலும், சிறுகை அளாவிய கூழும் விவாதம் முடிந்த பிறகும் சிந்தனையில் சுழன்று வ‍ந்தன.

IMG_1649

இந்த முறை ஊட்டியில் எனக்கு கரம்சோவ் சகோதரர்கள் நாவலின் விவாத அமர்வின்,  பொறுப்பு எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடன் இணைந்து கொடுக்கப்பட்டது. அந்த அமர்விற்கான கட்டுரையை நான் தயார் செய்து வைத்திருந்தாலும், முன்னமர்ந்து நடத்துவதில் பயிற்சி இல்லாததால் தயக்கம் இருந்தது. ஆனால் அமர்வு துவங்கிய பிறகு, அந்த அலையில் நான் பதட்டமின்றி தொடர்வதை உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து அசோக்குமார் தன் பங்காக தஸ்தோவெஸ்கியின் வரலாற்றுப் பிண்ணனியை விளக்கினார். உரையாடல்  நேரத்தில் பங்கேற்பாளர்களின் பொருத்தமான எதிர்வினைகளும், கேள்விகளும்,, ஜெமோவின் இதுவரை நான் எண்ணியிராத கோணத்தின் வாசிப்பும் அமர்வினை உற்சாகமாக்கின. கிழக்கின் துறவிகளை ஒத்த, ஜசீமா பாத்திரத்தினை பேராயராக மொழிமாற்றம் செய்திருந்தது பொருத்தமில்லை எனவும், கரம்சோவ் தந்தையின் மூன்று கிளைகள் தான் திமித்ரி, இவான், அல்யோசா எனவும் விளக்கினார். இவான் சாத்தானுடன் உரையாடல் புரிந்தது , தன் ஆழ்மனத்துடன் தான் எனவும் விளக்கினார். கொந்தளிப்பான ரஷ்ய சமூகத்தின் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிகழ்ந்த பெரும்நிகழ்வுகளின் ஆரம்ப சமிக்ஞைகளை இந்த நாவலில் உணரலாம். மொத்தத்தில் எனக்கு நிறைவினைத் தந்த அமர்வு அது.

IMG_1645


இரவுணவிற்குப் பின்னரான அமர்வுபூர்வமற்ற சனிக்கிழமை இரவில் ஜெமோ முதலில் கூறிய ஐந்து கை யட்சி கதையில் காரமில்லை என்ற எதிர்வினை வந்தது.  ‘அப்படியா மோனே’ என புன்னகித்து கொண்டே ஒருவர் மாற்றி ஒருவாறாக பற்றித் தொற்றும் அலமாரி கிழவிப் பேய் கதையைக் கூறி, அணைந்து அணைந்து ஒளிர்ந்த அறையின் திகிலினை மேலும் கூட்டினார். இதனைத் தவிர அறிவியலின் கட்டற்ற வளர்ச்சியின் எதிர்விளைவுகளை தவிர்க்க, அதற்கு நிகராக தத்துவமும், இலக்கியமும் இணையாக வளர்ந்து ஒன்றினை மாற்றி  ஒன்று கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும், ஈடிட்டு நிரப்ப வேண்டிய அவசியமும் , யானை வரிசையை கட்டுப்படுத்திய மூத்த பெண்யானை, அதிகாரம் அடுக்காக உச்சம் நோக்கிச் சென்று, பின் தன்னை மையப்படுத்திக் கொண்டு சமூகத்தை உறைய வைக்கும் விதமும் தொடர்பான offline விவாதங்கள் நிகழ்ந்தன.

புதிய இலக்கிய நண்பர்களின் அறிமுகமும், முகமனும், முன்னரே பழகிய இலக்கிய நண்பர்களுடன் மேலும் அணுக்கமான உறவும் கொண்டு. நெடுநாட்கள் நினைவினில் வாழும்,  உவகை கொள்ளத்தக்க அறிதல்களையும், அனுபவங்களையும், பெற்று மலையிறங்கி இல்லம் திரும்பினேன்.

<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்