கதீட்ரலின் காமதேவன்

ஜெயமோகனின் சிறுகதையான ‘மன்மதன்’ நான் வாசித்து தீராத கதைகளில்  ஒன்றாகவே நீண்ட நாட்கள் என்னுள் இருந்து வந்தது. மற்றொரு தருணத்தில், ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை  முதன் முதலாக வாசித்த போது . அதனுடன் ஒப்பிட்டு ‘மன்மதன்’ கதையின் வாசிப்பினை விரிவாக்கலாம், என்ற எண்ணம் எழுந்தது. இந்த இரு கதைகளையும் ஒப்பிட்டு வாசித்து அறியுந்தோறும்   இந்த இரு சிறுகதைகளின் மீதான பிரமிப்பு மேலும் அதிமடங்கானது. புனைக்கதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையே நிகழும் உணர்வு பரிமாற்றத்திற்கு பொருத்தமான சான்றாக பலமுறை ஜெயமோகன் அவர்களின் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட கதை கதீட்ரல்.

கதீட்ரல் கதையின் முதன்மைப் பாத்திரமான ராபர்ட்  விழியிழந்தவர். கருப்பின அல்லது கலப்பின(coloured) பெண்ணாக  வாய்ப்பிருக்கும் தன் மனைவி இறந்தபின் வாழும் தனியர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரின் வாசிப்பிற்கும் தனிவாழ்விற்கும் உதவியாளராக  உடனிருந்த முன்னாள் பணிப்பெண்ணும் மற்றும் இந்நாள் தோழியுமான பெண்ணைக் காண வருகிறார். இரு முறை தன் முகம் மீது ராபர்ட்டின் கை விரல்கள் படர்ந்துணர அனுமதித்தவர் இந்த தோழி.  மனம் கிளர்ந்த அரிதான கணங்களில் மட்டும் கவிதை எழுதும் திறனுள்ள அவரின் தோழி, அந்த தொடுதல் கணம் தந்த உணர்வினை கவிதையாக எழுதியிருக்கிறார். அந்த முன்னாள் தோழி இரண்டாவதாக மணமுடித்த கணவர் மற்றொரு முதன்மை பாத்திரம்.  தன் மாலைநேரத்தை தொந்தரவு செய்ய வரும், ஒரு விழியிழந்த முதியவரின் வருகையை ஆர்வமின்றி எதிர்நோக்கியிருப்பவர். வழக்கமான முகமன் மற்றும் உரையாடல்களுக்கு பின் அவர் மனைவி ஓய்வெடுக்க செல்கிறார்.

தனித்து விடப்படும், இருவரும் சுவையான இரவுணவிற்குப் பின் ஒன்றாக மது அருந்துகிறார்கள் பின்  ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைக்கிறார்கள். போதை மற்றும் அதனைத் தொடர்ந்த உரையாடலால் மனம் இளகி நெருங்கிய ஒரு கணத்தில், தொலைக்காட்சியில் போர்த்துக்கீசிய, ஜெர்மானிய கதீட்ரல்களின் ஆவணப்பட காட்சி  வருகிறது. அதுவரை கதீட்ரல் என்றால், ‘பல நூறு ஆட்கள் சேர்ந்து, பத்தாண்டுகளுக்கு மேலாக கட்டப்படும் ஒரு கட்டிடம் ‘என்ற வாய்வழி விளக்கமாகவே அறிந்த ராபர்ட்டிற்கு, போதையிலிருக்கும் கணவர் எங்கிருந்தோ தேடிக் கண்டெடுத்த பென்சில் கொண்டு கையைப் பிடித்து அதன் வெளிப்புற கட்டமைப்பை காகிதத்தில் வரைந்து காட்டுகிறார். அதில் தான் அறிந்துணரந்து பெற்ற வடிவத்தை ராபர்ட் மீண்டும் தோழியின் கணவருக்கு தன் கையை அவரின் கையைப் பிடித்து வரைந்து காட்டுகிறார்.  இருவரும் ஒத்த உணர்வினால் மயங்கி மேலெழுந்த ஒர் ஆழமான அறிதல் கணத்தில், கதீட்ரலை தரிசனம் செய்யும் வியத்தகு தருணத்தில் கதை முடிகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும், உலகிலேயே கடைசியான நீலக்கிளி ஜோடியில் ஒன்றான, ஜ்வெல் என்னும் ஒரு பெண் பறவை, சிறகிருந்தும் என்றுமே பறத்தலை உணராத, தன் துணையான ப்ளூ என்னும் தன் ஆண் பறவையை தழுவிப் பறந்து, பறத்தலை அதற்கு முதன்முறையாக உணர வைத்த தருணத்தை இந்த உச்சகட்டம் எனக்கு நினைவூட்டியது.

மன்மதன் கதையில் கிருஷ்ணன், தென்பாண்டிய மாவட்டங்களில் ஒன்றான ஒரு வைணவப்  பேராலயத்தில் சிற்பங்களை காண வருகிறார். கோயில் , கோபுரம், தேவகோட்டம், சுதைச் சிற்பங்கள்,  குளம், தோட்டம் வெளிவட்ட சுற்றுசுவர், என ஒவ்வொன்றாக சுற்றிக் கண்டபின். பத்தடி உயர கற்சிற்பங்கள் நிறைந்த உள்மண்டபத்திற்கு நுழைந்து சிலைகளை ரசித்துக் கொண்டிருந்த போது, மல்லி என்கிற பூ கட்டும் பெண் ஒருத்தி நுழைகிறாள். சிற்ப சாத்திர மரபுமுறையின் அனைத்து சாத்தியங்களுடன் பெரும்படைப்பூக்கம் பெற்ற சிற்பி ஒருவனால் செதுக்கப்பட்டு உயிர் பெற்று வந்த பெண் சிற்பம் போல அழகில் மல்லி இருக்கிறாள். அவளின் உடல்தோற்றத்தினை அலகலகாக பகுத்து ரசித்து தன்னிலை மறந்து போதையுணர்வு போன்றதொரு நினைவில் மயக்கம் கொள்கிறான் கிருஷ்ணன்.

அவள் சென்று அழைத்து வரும், தன் கணவனும்  சிற்ப நுட்ப விளக்குபவருமான ராஜூ, தன் கோயிலின் நுண்வரலாற்று தகவல்களை கிருஷ்ணனுக்கு விவரித்து வியக்க வைக்கிறான். அவன் விழியிழந்தவன் என உணரும் கணத்தில் நழுவி நழுவிச் செல்லும் எண்ணத்தை கட்டுப்படுத்தி உரையாடுகிறான் கிருஷ்ணன். குறவன், குறத்தி சிலைகள், வீரபத்திரன் சிலைகள் என அவன் விவரிப்பு நுட்பம்  கிருஷ்ணனை ஆட் கொள்ளும் போது, கல்லாத அவனின் இந்த சிற்பஞானத்திற்கான காரணம் என்ன என வினவுகிறான். அவரின் குருவான நாராயணசாமி அய்யங்காரின் பின்புலமும், அவரின் அணுக்க நட்பையும் விளக்கி, உச்சப் புள்ளியில் மன்மதன் ரதியின் சிற்பங்களை, தன் கைகளால் தொட்டுணர்ந்து, அவன் தானாக பெற்ற புதிய கோணத்திலான ஞானத்தை ராஜூ விளக்கும்போது மன அதிர்வடைகிறான் கிருஷ்ணன். விழியிழந்த ராஜூ ஆண் அழகின் உச்சமான மன்மதனாகவும், எந்த ஆபரணமுமில்லாத கருமை நிறமுள்ள மல்லி அன்னத்தின்  மீதிருக்கும் பெண்ணழகின் உச்சமான ரதிதேவியாகவும் மாறுவதை கிருஷ்ணன் உணரும் கணத்தில் கதை முடிகிறது.

இரண்டு கதைகளுமே தெளிவான ஒற்றுமைகளும்  வேற்றுமைகளும் உடையவை.. ராஜூவும் ராபர்டும் விழியிழந்தவர்கள். கிருஷ்ணனின்  சிற்பங்களுடனும், மல்லியுடனுமான போதைதந்த தனிமை தருணத்தில் ராஜூவும், தோழியின் கணவனின் மாலைநேரத் தனிமையில் ராபர்ட்டும் தொந்தரவாக நுழைந்து பின் திகைக்க வைத்து  அணுக்கமாகிறார்கள். ராஜூ இரவு முழுவதும் விழித்திருந்து கோயிலின் அனைத்து சிற்பங்களையும் தொட்டுணர்ந்து அதன் மீது சிறு கீறல் பட்டால் கூட அடுத்த நொடியில் உணரும் திறனுடையவன். ராபர்ட் இரண்டே முறைதான் தோழியின் முகத்தை தொட்டுணர்ந்திருக்கிறார்.   அதில் முதல் தொடல்கணம் அவள் எழுதியதிலேயே மாமேன்மையான படைப்பாக இருக்க சாத்தியமுள்ள ஒரு கவிதையை எழுத அவளைத் தூண்டுகிறது. வாசகனுக்கு பலவிதமான திறப்புகளை வெளிக்கொணர வாய்ப்பிருக்கும் அபாரமான உச்சபுள்ளியுடன் இருகதைகளும் நிறைவடைந்தன.

20 வருடங்களாக கோயிலின் வெளிப்புற கற்கட்டுமானங்களையும் சிற்பங்களையும் கண்டு வியந்து வந்த கிருஷ்ணனுக்கு,  சிற்ப கலையின் அதுநாள் வரை அவனறியாத நுட்பங்களை புதுமையான கோணத்தில், ஆழமான ஞானப் பார்வையில் காட்டுகிறார் ராஜூ.  கதீட்ரலின் வெளிக் கட்டுமான தோராயமான வடிவத்தினை தோழிக்கணவன் ராபர்ட்டிற்கு வரைந்து காட்டிய பிறகு, அதனால் தான்பெற்ற ஒரு வடிவத்தை ராபர்ட் மீண்டும் கணவருக்கு காட்டுகிறார்.  கதீட்ரலில் கணவனும் மனைவியும் நெருக்கமில்லாத காதலில்லாத ஒரு வித சமரத்துடனான உறவில் ஒன்றாக வாழ்கிறார்கள். ராஜூ மல்லியோ காமதேவனும் தேவியும் உயிர்கொண்டு நடமாடும் தோற்றங்களோ என எண்ண வைக்கும்மாறு  கதையின் முடிவில் எழுகிறார்கள். சிற்ப கலையின் சிரேட்டமான நுண்தகவல்களால் செறிவூட்டப்பட்டது மன்மதன் சிறுகதை. கதீட்ரலில் நமது கோவில்களில் யாளி சிற்பத்தை நினைவூட்டும் கார்கோயல் Gargoyal என்னும் தண்ணீர் வடிகால் குழாயில் செதுக்கப்படும் சிற்ப வடிவத்தின் குறிப்பு மட்டும் வருகிறது.

மன்மதன் கதையினை  ஒரு வாசிப்பில், மல்லியை இந்திய பண்பாட்டு சூழல், அதன் நிலம் , அல்லது வளங்கள் எனக் கொண்டால்,  கிருஷ்ணனை , இந்த பண்பாட்டிற்குள் புதிதாக நுழையும் ஒரு வெளிச்சூழலைச் சேர்ந்தவன் அல்லது இந்த பண்பாட்டினை சுரண்டும் நோக்கத்துடன் அறிய முயலும் இந்த சூழலைச் சேர்ந்த ஒருவன் எனலாம். ராஜூவையும், நாராயணசாமி அய்யங்காரையும்,   பொதுச்சூழலால் முற்றாக புறக்கணிக்கப்பட்டு ஆனால் வாழ்வின் கடைசி துளியினையும் அர்பணித்து, காலம்காலமாக பண்பாட்டை பேணி, மரபான ஞானத்தை தேர்ந்த அடுத்த வழித்தோன்றலுக்கு கடத்தும் தலைமறைவு முன்னோடிகள் எனலாம். மல்லியின் பரிபூரண உடல்தோற்றத்தால்  கிருஷ்ணன் மனக்கிளர்ச்சியுரும் கணத்தை நம் வளத்தினைக் கண்டு கிளர்ச்சியடைய்து சுரண்டி கொழுக்கலாம் என எத்தனிக்கும் தருணமாகவும். ராஜூ மன்மதன்-ரதி, வீரபத்திர சிலைககளின் பொதிந்திருக்கும் நுட்பங்களை விவரிக்கும் கணம். இந்த பண்பாட்டில் புதைந்திருக்கும் சூட்சுமமான ஞானங்களை திறக்கும் திறவுகோலுடன்,  அதனை பல கரங்களில் ஆயுதமேந்தி காக்கும் மனத்திண்மையும் எங்களுக்கு உண்டு எனவும் சுட்டிக்காட்டியதாகவும் தோன்றியது.

மற்றொரு வாசிப்பில்,  இந்த தற்கால சமூகச் சூழல் அடுக்கில் பட்டியல் இனத்தவருக்கும் அடுத்த கீழ்படியில் அழுத்தப்பபட்டிருக்கும் , ஆனால் முற்காலத்தில் ராஜ அம்சம் பெற்று முன்னுரிமை பெற்றிருந்த , குறவ ராஜா, குறவ ராணியாக   ராஜூவையும் மல்லியையும் . அவர்கள் மீது அமர்ந்திருக்கும் இளவரசி, இளவரசியை , இந்த பண்பாட்டு கலை ஞானங்களையும் பொருத்திப் பார்க்கலாம். கிருஷ்ணனை , தன் புராதான பண்பாட்டின் பெருமையை மட்டும் தலையில் சுமந்தலைந்து பீற்றிக்கு கொள்ளும், ஆனால் அதன் விரிவினை அறிந்து கொள்ள எந்த முயற்சியும் கொடுக்க மனமில்லாத,  அதன் தொடர்ச்சிக்கு எந்த வித உழைப்பும் கொடுக்காத பெருந்திரளான இடைநிலை சாதிகளில் ஒருவராக முன்னிறுத்த தோன்றுகிறது. இன்று இந்த சமூகத்தால் வாய்பில்லாமல் பிச்சைக்காரர்களாக நாடோடிகளாக ஒதுக்கப்பட்ட அந்தத் தொகை மக்களில் சிலருக்கு ராஜூவினைப்போல சரியான சூழலும் வாய்ப்பும் அமைந்தால், பூட்டப்பட்ட இந்த கலையின் ஞானத்தை திறந்து உணர்வதும்,  அவர்கள் தலையில் சுமப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஆற்றலைக் கொண்டு புத்தாக்கி விரிவாக்குவார்கள் எனவும் விளக்கியதாகத் தோன்றுகிறது. கண்ணப்ப நாயனாரைப்போல தன் கண்ணை எடுத்து கொடுத்து இறைவனின் குருதிவடியும் கண் புண்ணைக் காப்பார்கள் எனவும் தோன்றுகிறது. ராஜூ என் மனதில் இளையராஜாவாகவும், எம் எஸ் சுப்பு லெட்சுமியாகவும், திருவல்லா மணப்புர சிவனின் கருவறையின் காப்பாளனான  புலைய ‘யது கிருஷ்ணனாகவும்’ விரிகிறான்.

ஜெயமோகனின் மன்மதன் சிறுகதை

மன்மதன் ஆங்கில மொழியாக்கம்

Raymond Carver's Cathedral

<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்