வெள்ளையானையும் ஏழுதலை குதிரையும்
ஒரு புவியியல் பரப்பில் மழைப்பொழிவின் சராசரி அளவிற்க்கும், அங்கு வாழும் சமூகத்தின் பயிர் வேளாண்மை, நீர்நிலை மேலாண்மைக்கும் வருடந்தோறும் நடைபெறும் மல்லுக்கட்டுப் போர்தான் ‘வறட்சி’(Drought) என்கிறார் மைக் டேவிஸ் (Mike Davis). தனது (Late Victorian Holocaust) ‘பிற்கால விக்டோரிய அரசின் பாரிய இனப்படுகொலை’ என்னும் நூலில், அவர் மேலும் ,ஒரு முதலீட்டிய (Capitalism)சமூகத்தில் பெருந்துயர் நேரும் போது அதன் , எந்நிலையிலிருப்பவரும் பழியை அடுத்த அடுக்கிலிருப்பவர் மீது சுமத்தி குற்றத்திற்கு பொறுப்பேற்றகாமல் தப்பிக்க இயலும் என்கிறார். ஜெயமோகன் தனது ‘வெள்ளையானை’ என்கிற வரலாற்று நாவலின் மூலம், தக்காணப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட தாதுவருட வறட்சி காலத்தின் இரக்கமில்லாத களவிவரணைகளை புனைவின் துணைகொண்டு அனைத்து புலன்களையும் மொழிவழியாக நிரப்பிய அனுபவத்தினை தருகிறார். அக்கால சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி, அன்று நிகழ்ந்த மானுடப் பெருங்குற்றத்தின் பங்கினை அவரவர்களுக்கு பங்கிட்டுப் பொருத்திக் கொடுத்து காலத்தின்முன் கைவிலங்கிட்டு நிற்க வைக்கிறார்.
இந்தியத் துணைக்கண்டத்தில், 1876 முதல் 1878 வரையான வருடங்களில் மழைப்பொழிவு விகிதத்தின் மிகவும் குறைவான அளவு என்பது முன்பு பலமுறை நிகழ்ந்த வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் தாதுவருடப் பஞ்ச காலத்தில், அன்று பிரிட்டீஷ் இந்தியாவில் வாழ்ந்த 5.5 மில்லியன் மக்கள் இறந்து அழிந்தார்கள். இது பிரிட்டீஷ் தீவுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து தீவுகளில் அன்றிருந்த மொத்தமக்களும் கூட்டாக இறப்பதற்குச் சமம். பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னரான இந்தியாவின் பெரு, குறு மன்னராட்சியின் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வறட்சி தாங்கும் அமைப்புகள் உருவாகி நிலைத்திருந்தன. இவைகளே பருவமழை பொய்த்ததன் மோசமான விளைவுகளை காலங்காலமாக தாங்கி மக்களை காத்தன. நூற்றாண்டுகளாக பேணப்பட்ட பஞ்சம் தாங்கி அமைப்புகளை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தங்கள் முதலீட்டிய வரிவிதிப்பு என்றும் மாபெரும் ஊசி கொண்டு மொத்தமாக உறிஞ்சி எடுத்து சக்கையாக்கி விட்டதன் விளைவுதான் இந்த பெரும் எண்ணிக்கையான உயிரிழப்புகள்.
மதராசப்பட்டிணத்திலிருந்து சில மைல் தொலைவில் செங்கல்பட்டிலும், கர்ணுலிலும், மைசூரிலும் மாதங்களாக மாவுச்சக்கரை கிடைக்காமல், உதடுகள் உரிக்கப்பட்டு, வெறிநாய்களின் ஊன் உண்ணப்பட்ட வாயால் கவ்வப்பட்டு ,மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நிலத்தின் உடைமை அடுக்கில் அடித்தளத்தில் இருந்த பறையர் இன மக்கள். அதே நேரத்தில், பிரிட்டீஷாரின் கொடை எனக் கொண்டாடப்படும் ரயில் இருப்பு தடங்களில், நீராவி இயந்திரத்தால் இழுக்கப்பட்ட மேல்பக்கம் திறந்த இரும்புப் பெட்டிகளில், கடைநுனி கிராமப் பகுதியிலும் வரியிட்டு பெற்ற தானியங்களை ஆழாக்கு கூட விடாமல் துடைத்தெடுத்து சென்னை , விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு கடத்தினார்கள். பிரிட்டீஷாருடன் அதிகாரத்தில் சமரசத்தில் இருந்த உள்நாட்டு நாயுடு, செட்டி , அய்யங்கார் உயர்சாதி மாட்டு வண்டிகளில் முரட்டு மறவர்களின் குத்தீட்டிகளின் காவலுடன் சிற்றூர்களிலிருந்தும் இந்த தானிய மூட்டைகள் ரயில் நிலையங்களுக்கு கடத்தப்பட்டது.
ஒருபுறம் இது ஆணா, பெண்ணா, முதிர்ந்ததா, குழந்தையா எனப் பிரித்திறியமுடியாமல் சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் செத்தழிந்து சடலங்களாக, மறுபுறம் பிரட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் வெறி கொண்ட ஆக்கிரப்பு போட்டிக்காக எகிப்திலும், மத்திய ஆசியாவிலும் போர்க்களத்தில் நின்ற போர் வீரங்களின் வருங்கால தேவைக்காக, துறைமுங்களில் மூட்டைமூட்டையாக தானியங்கள் காத்திருந்தன. புதியதாக ஊக வணிகத்தில் நுழைந்த இறங்கிய உள்ளூர் உயர்சாதி முதலாளிகள், பிரிட்டீஷாரின் மற்றொரு கொடையான தந்தி தொழில்நுட்பம் மூலம் தானிய விலைத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்துகொண்டனர். தானிய விலைகள் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒரே விலையாக நிலைநிறுத்தி வைத்து ஏழைகளுக்கு எட்டாதபடி பதுக்கினார்கள். பஞ்சத்தின் கோரப்பசியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இரக்கமில்லாமல் அதிமடங்காக கூட்டியதன் பாவத்தில் இவர்களும் பங்கு பெற்றார்கள். ஒரு சிலர் தங்கள் வெற்றிலைப் பெட்டியில் வைரங்களைப் பதிக்கும் அளவிற்கு லாபம் ஈட்டி னார்கள்.
வெள்ளையானை நாவலின் முதன்மைப்பாத்திரமான ஏய்டன் பைர்ன் அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர். மாட்சிமை பொருந்திய பிரிட்டீஷ் பேரரசியின் அதிகாரத்திற்குட்பட்ட சென்னைப்பட்டிணத்தின் ஒரு படைப்பிரிவுக்கு கேப்டனாக இருப்பவர். தன் உள்ளார்ந்த நீதியுணர்ச்சியால் மாற்ற முடியாத இந்தியப் புறச்சூழலில் புழங்கியவர். தன் மனதின் காட்டுத்தீ ஓய்ந்து அடங்காத தருணங்களில் ஷெல்லியின் கவிதைவரிகளுடன் விஸ்கி நிரம்பிய கோப்பைகளுக்குள் தன்னைத் தொலைக்க முயலுபவர். ஏய்டன் தனது சொந்த அயர்லாந்து மண்ணின் நினைவுகளால் அலைகழிக்கப்படுகிறார். பிரிட்டீஷாரின் அதிகாரத்திற்கு விசுவாசமாக இருந்தாலும் ஐஸ் ஹவுஸில் இறந்த ஒடுக்கபப்பட்ட அடித்தள மக்களுக்கு நீதி பெற்றுத்தர முயல்கிறார். ஒரு இக்கட்டான மனம் பிறழ்ந்த கட்டத்தில் அவர்களின் போராட்டத்தையே இயந்திர துப்பாக்கி கொண்டு கலைக்க அதிகாரத்தின் கருவிகிறார். அந்த நினைவிலிருந்து தன்னை மீட்க மரிஸாவினை அணுகமுடியாததால், தன் கபாலத்தை துப்பாக்கி குண்டால் உடைத்து Khorne என்னும் பாகன் போர் (Pagan god for destruction and bloodshed) தெய்வத்திற்கு அர்பணிக்க முயல்கிறார். செங்கல்பட்டு சென்று பஞ்சத்தை ஆவணப்படுத்த முயன்று முடிவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை சுவருக்குள் நீதி கேட்டு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெளியேறுகிறார். சதுப்பு நீர் பின் கதுப்பில் குடிசையில் தொண்டுக் கிழவி கொடுத்த நுங்கின் பரிவினால் உளம் உடைந்து தத்தளிக்கிறார். இவ்வாறு ஏழு தலைகள் கொண்டு சிந்தித்து குழம்பி இயங்கும் வெள்ளைக் குதிரைபோல இந்த ஏய்டன் பைர்ன் எனக்குத் தோன்றுகிறார்.
அயோத்திதாச பண்டிதர் , காத்தவராயன் என்கிற இளைஞராக இந்த நாவலின் இரண்டாவது முதன்மைப் பாத்திரமாக வருகிறார். முதலில் தன்னை வைணவராக ஏய்டனிடம் அறிமுகப்படுத்திக் கொள்பவர் முடிவில் நுங்கு கிழவியின் பரிவினாலும், முரகரி அய்யங்கார் போன்ற உயர்சாதியினரிடம் வாதிட்டுப் போராடித் தோல்வி கண்டபிறகு முடிவில் பௌத்தத்திற்கு மதம் மாறுகிறார். முகமறியா ஐஸ் ஹவுஸ் தொழிலாளிகளைத் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பயிற்சி கொடுப்பது. கடலின் ஓசையை அடக்கிய சங்கின் ஒலி போல, ஏய்டனின் நீதியுணர்ச்சியை தூண்டி, பஞ்சக் காட்சிகளை காண்பதற்கும், பிரிட்டீஷ் கவர்னருடன் உரையாடும் அறச்செயலினை நோக்கியும் உந்துகிறார். பெரும் கப்பல் போன்ற ஒரு சமுகத்தின் இயக்கத்தின் போக்கை தான் ஒரு சிறிய பறவை என்றறிந்தும் வாய்ப்பமையும் போதெல்லாம் எத்தனத்துடன் அதன் திசையை மாற்ற முயல்கிறார்.
இந்த நாவலின் மிகப்பெரிய பலம், மனத்தினை வருத்திப் பிசகாமல், கடந்து செல்லவே முடியாத பஞ்ச கால சூழலின் இரக்கமில்லா விவரிப்புதான்.
ஒரு நாளைக்கு சராசரியாக இருபதாயிரம் பிணங்கள் விழுகின்றன.
பஞ்சம் ஒரு காட்டுத் தீ போல, மலை மலையாக உணவைக் கொட்டினால் மட்டும்தான் அணையும்.
உடலின் ஒட்டுமொத்த திரவத்தையையும் சதையையும் உறிஞ்சி எடுத்துவிட்டதைப் போன்ற உருவம்.
எலும்புகள் மீது ஓடும் நரம்புகள் புடைத்து தெரிந்தன்
மொத்த சாலையே கரிய புழுக்கூட்டங்கள் அடர்ந்து நெளியும் சிவந்த மாமிசத்துண்டு போலத் தெரிந்தது.
ரொட்டி கீழே விழுந்ததும் அந்தப் பகுதியில் மானுட உடல்களினாலான கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்தது.
என்கிறார் ஜெயமோகன்.
என் வாசிப்பில் அந்தப் பகுதிதான் கதையின் மையம். கதையின் மொத்த முதல்பகுதியும் செங்கல்பட்டிற்கு ஏய்டன் செல்லும் அந்த பயணம் நோக்கி குவிகிறது. அதன் பின், ஏய்டன் விழிவழியாக கதை சென்னைப்பட்டிணம், ஐஸ்ஹவுஸ் போராட்டம் என விரிகிறது.
காத்தவராயன் ஒருமுறை
‘இதோ இந்தக்குழந்தைகளில் முக்கால்வாசி இன்னும் இரண்டே மாதத்தில் இறந்து விடும். கடவுளுக்கு கருணை இருந்து அப்படி எஞ்சும் குழந்தைகள் எவை என்று மட்டும் இப்போதே காட்டிவிட்டால், அவற்றிற்கு மட்டும் சோறுபோட்டு வளர்க்கலாம். எஞ்சியவற்றை பட்டினி போட்டே சாக விட்டுவிடலாம். தங்குபவை வலுவான குழந்தைகளாக இருக்குமல்லவா? என்கிறார்.
நூற்றாண்டுகளாக நிலத்தில் அடிமைபோல வாழ்ந்து , வன்முறை அறியாத, குழுவாக இயங்கவும் முடியாத மக்களின் இறப்பினை அப்பட்டமாக விவரிக்கிறார். பஞ்சத்தின் முதல்காட்சியை அமலத்துளி பட்ட புழுபோல, ஏய்டன் கண்டபிறகு, தன் உறைந்து போன காலினை வெட்டி எடுத்து நகர எத்தனிக்கும் தருணமும், அந்த உதடு உரியப்பட்டு இறப்பின் விளிம்பிலுருக்கும் பெண்ணின் ‘தொர தொர’ என்கிற ஒலியும் என்றும் என் நினைவிலிருந்து அழியப்போவதில்லை.
இந்த நாவலின் மற்றொரு பலம், இதன் வலுவான உவமைகள். இவைகள் கண்முன் நிகழும் அனுபவம் எனத் தருவதைத் தாண்டி, புலனடுக்களைக் கடந்து உணரும் அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த உவமை சொற்றொடர்களை மட்டும் வெட்டியெடுத்து தனியே பக்கங்களாக அடுக்கினால், அதுவே 150 பக்கத்திற்கான புத்தகமாக வந்துவிடும் போல.
சேவகம் செய்யும் கறுப்பர்கள் அவர்கள் சுயநலம் பாதிக்கப்படும்போது மாறாத பணிவிற்குள் காட்டும் உறுதியான எதிர்ப்பு. வெண்ணைக்குள் ஒளிந்திருக்கும் மீன் முள்போல தொண்டையில் குத்துவது.
மாபெரும் வெள்ளைத்துணி ஒன்று காற்றில் பறந்திறங்கி படிந்தது போல கடற்கரை இருந்தது.
அவர்களின் கண்களைப் பார்த்தான். அழுகிய மட்கிய திராட்சை விழிகள்
அவன் உடல் ஒரு இறுகிய முஷ்டி போல அவன் முன்னால் நின்றது
மரிஸா சிரிப்பது கையை பொத்தி, மீன்விழுங்கி பறவை போலிருந்தது
புதருக்குள் புறாமுட்டை கிடப்பது போல கண்கள்
ஏய்டனின் விழிக்கோணம் வழியாக விரிவாகும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளிருக்கும் மதராசப்பட்டிணம் இந்த பஞ்சக்காட்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. பெர்ஜூயன் துப்பாக்கியும் ( ferguson rifle) , ஸ்னைடர் என்பீல்டு துப்பாக்கியும் (sniter enfied gun) ஏந்திய சிப்பாய்கள். புதிய தொழில்நுட்பமான நிலக்கரி வாயு மூலம் எரியூட்டப்படும் எரிவாயு விளக்குகள் (Gas lamps) . Abbot-Downing Company யால் சீமாட்டிகளுக்காக செந்திறத்தில் பளகளக்கும் ஸ்லெட்ஜ் கோச்சு வண்டிகள். தோதகத்தி மரத்தினால் செய்யப்பட்ட மாபெரும் கட்டிடக் கதவுகள் என செல்வம் நிரம்பித் ததும்பி செங்குதம் வழியாக வெளியேறும் மலம் போல ஆபாசமாக வழிகிறது.
இந்து புராணத்தின்படி சாகாவரம் தரும் அமிர்தத்தினைப் பெற எத்தனித்து, பாற்க்கடலினை தேவர்களும் அசுரர்களும் கூட்டிசைந்து கடையும் போது எழுந்தவைகள்தான், ஐராவதம் என்றும் வெள்ளையானையும், உச்சேஸ்வா என்னும் ஏழுதலை வெள்ளைக் குதிரையும், வெள்ளைச் சங்கும். ஜெயமோகனின் இந்த நாவலில் பிரிட்டீஷ் தீவிலிருந்து வந்த வெள்ளைத்தேவர்களும், இந்த மண்ணில் உயர்சாதி அசுரர்களும் சேர்ந்து அவரவர்கள் லாபத்திற்காக இந்த நாட்டினைச் சுரண்டிய முதலீட்டிய சமூகத்தில் தோன்றியவைகள்தான் கனடாவின் நியூஇங்கிலாந்து ஏரியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ‘வெள்ளையானையும்’ . அயர்லாந்திலிருந்து இராணுவ வீரனாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஷெல்லி பித்தனான ஏய்டன் பைர்ன் எனும் ஏழுதலை உச்சேஸ்வா குதிரை, திருமாலின் குறியீடாகவும், பௌத்தத்தின் அஷ்டமங்களத்தின் ஒன்றான சங்கினை அயோத்திதாசர் என்னும் காத்தவராயன் எனவும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. ஏகாதிபத்தியத்தின், முதலீட்டியத்தின் பேராசை என்னும் ஆலகால விஷத்தை துளிவிடாமல் பருகி லட்சக்கணக்கில் முகமில்லாமல் புழுக்கூட்டம்போல இந்த மண்ணில் இறந்து மட்கி அழிந்த அடித்தள பறையர் இனமக்கள்தான் நீலகண்டர்கள் போலும். அவர்களுக்கு என் காலங்கடந்த அஞ்சலியும் வணக்கங்களும்.
<அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018க்கு அனுப்பப்பட்ட கட்டுரை>
<நிறைவு>
அருமை. எனக்கும் இந்த நாவலை படிக்கத் தூண்டுவதாக எழுதி இருக்கிறீர். ஜெயமோகன் அவர்கள் சிறப்பாக இந்த நாவலை செதுக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. உங்களது ஒப்பீடுகள் பொருத்தமாக உள்ளன.
பதிலளிநீக்குமிக அருமையான மதிப்பாய்வு. புதியவர்வளுக்கு இது மதிப்பாய்வு அல்லது விமர்சனம. நாவலை படித்தவர்களுக்கு இது ஒரு refreshing summary.
பதிலளிநீக்கு