ஊட்டி 2019 - குருநித்யா கருத்தரங்கு

ஊட்டி விவாத நிகழ்வுகளுக்குச் செல்லும் பேருந்துப் பயணங்களில், மலையேறத் துவங்கும்முன்  காலைநேரத்தில் எழுந்துவிடுவேன். மலைவெளி விரித்த பச்சை அழகினை தவறவே விடாமல், பார்த்துச் செல்வது கடந்த  சில வருடங்களாக எனது வழக்கம்.ஆனால் இந்த முறை அலுவலகத்தில் பாதியில் விட்டு வந்ததால் பின்தொடர்ந்த ஒரு வேலையின் நினைவுச் சுமையுடன் பேருந்து ஏற நேர்ந்தது.  பெருங்களத்தூர் விலக்கில், ஒளி கக்கிய பாதரச விளக்கு கம்பத்தின் அருகில் நின்ற பேருந்தில் ஏறியவுடன் தூங்கியவன் , ஊட்டி பேருந்து நிலையத்தில்தான் எழுந்தேன்..  ்பெர்ன்ஹில் செல்லும் பாதை நன்கு அறிமுகமாகி இருந்ததால் மூன்று சக்கர குலுங்குந்து பிடித்து குருகுலம் வந்து சேர்ந்தேன். 2018 ஊட்டி இலக்கிய முகாமிற்கு கரம்சோவ் சகோதரர்கள் உரைக்கான தயாரிப்பினைத் தவிர மற்ற எந்த படைப்பையும் வாசிக்கவில்லை என்ற குறை இருந்தது.  சுனீல் கிருஷ்ணன் ரிப்பன் கத்தரித்து துவங்கிய 1000 மணிநேர வாசிப்பு மாரத்தான் ஓட்டத்தின் புண்ணியத்தினால், இந்த முறை விவாதத்திற்காக தேர்ந்தெடுத்த சிறுகதை, கவிதை, அறிபுனைக்கதைகள் என அனைத்து படைப்புகளையும் குறைந்தபட்சம் ஒருமுறை வாசித்த மனநிறைவில் இருந்தேன்.



பயணங்களின் போது, வழக்கமாக ஏதேனும் ஒரு பொருளினை மறந்து விட்டு வரும் நான், இந்த முறை மறந்தது,  குளித்தபின் உலர்த்த எடுத்து வைத்திருந்த ஈரிழைத் துண்டு. ஏற்கனவே குளித்துவிட்டு துலக்கமாக அங்கிருந்த,  பெங்களூர் நவீனுடன் அவரின் திமிலுடைய குட்டி இயந்திர காட்டெருது (200 cc ) வண்டியை உதைத்து உசுப்பி, ஊட்டி டவுனுக்கு  ஒரு குறு உலா சென்றோம். அந்தக் காலைவேளையில் மூடிய கடைகளை ஒன்றன் பின் ஒன்றாக தட்டி ஓய்ந்து தேடிச் சுற்றினோம். கடைசியாக அங்கு திறந்திருந்த ஒரே ஒரு துணிக்கடையில், இந்தி வாடையில் தமிழ் பேசிய கடைக்காரரிடம் கிருஷ்ணனுக்கும் சேர்த்து  பேரம் பேசி மூன்று துண்டுகளை வாங்கி குடில் திரும்பினோம். புலரியில் மலையேற்ற தருணத்தின் பொலிவை காணத்தவறி, ஊட்டி ஊரின் இடுக்குகளுக்குள் சுற்றி அலைந்தது, சித்திரை வெயிலில் கள்ளழகனை காணச் சென்று அவனை தரிசிக்காமல் மலைமேல்சென்று சோலைமுருகனை மட்டும் தரிசித்தது போல இருந்தது.




சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு உதாரண நாவல்,  வாசகனுடன் உணர்வுத் தொடர்பினை (Emotional connect) ஏற்படுத்தி அதன் போக்கில் அந்த தொடர்பினை இறுதி வரை தக்க வைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும் எனவும். Metaphor என்னும் மையப்படிமம் நாவலுக்கு அவசியம் எனவும் . நாவலின் “பலகுரல்தன்மை” சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் எனவும் Thomas mann , The magic mountain நாவலின் எடுத்துக்காட்டுடன் விவாதிக்கப்பட்டது. நாஞ்சில் சாரின்  கம்பராமாயண வாசிப்பு அமர்வில், யுத்த காண்டத்தில் கும்பகர்ணன், இராவணன் மகன் அதிகாயன் வதைப் பாடல்கள் வாசிக்கப்பட்டன. ‘ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால்’ என்னும் வரி சீதையின் ஒரு முலையின் மீது ராவணனுக்கு ஏற்பட்ட ஏக்கமல்ல, சூர்பணகைக்கும், ராவணனுக்கும், விபீஷணனுக்கும் பாலளித்த அவர்களின் அன்னையின் முலை என வேறு கோணத்தில் வாசிக்கப்பட்டது

பிரியம்வதா ஐசக் டினசெனின் வெற்றுப்பக்கம் சிறுகதையை முன் வைத்து விவாத அமர்வில் பேசினார். பல மினிக்கதைகள் ஒற்றை நூலால் கோர்க்கப்பட்டு , மையக் கதைக்களம் என்று ஒன்று தெளிவாக அமையாத கதை அது. அதன் தலைப்பு சுட்டும் வெற்றுப்பக்கங்கள் என்பது இதுவரை இலக்கியத்தில் வெளிவராத பெண்களின் வாழ்க்கை எனலாம், பைபிளில் வெற்றுப்பக்கங்கள் விடுபட்டிருப்பதற்கான வரலாறும். மேற்கில் குடும்பவரலாறு எழுதவதன் பிண்ணனி என விவாதம் தொடர்ந்தது. அருணாசலம் மகாராஜன் தேர்ந்தெடுத்தது  ‘The story of life’ அதன் பக்க அளவில் குறுநாவல் எனலாம் . ஒரு வேற்றுலக மொழியுடன் தொடர்பு கொள்ளும் கதைநாயகி, தன் அடுத்த 20 வருட வாழ்வில் தான் எதிர்நோக்கும் நிகழ்வுகளை முன்னரே அறிகிறாள். எதிர்காலமனைத்தும் அறியப்பெற்ற அவள், அதன் எதிர் விளைவுகளை முற்றாக அறிந்திருந்தாலும், அதன் போக்கில் பயணிக்கிறாள். ஒரு பார்வையில் இந்த முடிவு அவளின் விடுதலையுணர்வினை காட்டுவதாக இருக்கலாம் என்ற கருத்தும் பகிரப்பட்டது. நிகிதா, ஸ்வேதா, விஜயராகவன் சிறுகதை அமர்வுகள் அந்தந்த கதைகளின் பொதுவான  வாசிப்புடன், பங்கேற்பாளர்களின் மேலதிக வாசிப்பினையும் சேர்ந்து விவாதிக்கப்பட்டது.

நாகப்பிரகாஷின்  ‘இருவர் கண்ட ஒரே கனவு’ கதை விவாதத்தில், அதிதூய குழந்தை மனதிற்கு இந்தக் கதையும், கண்ணாடிச் சில்லின் கூர்மையுடன் கீறிக் காயமேற்படுத்தும் அப்பழுக்கற்ற தீய குழந்தையின் குணத்திற்கு அசோகமித்ரனின் கதையையும் ஒப்பிட்டது சிறப்பான வாசிப்பாக இருந்தது. கு.அழகிரிசாமியின் இந்தக் கதை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், அது கொடுக்கும் புதிய அனுபவங்களால் செவ்வியல் கதை எனலாம் எனவும். உடுத்த ஆடையில்லாமல் குளிரில் இறந்த அந்த தாயார் சிறுவர்களின் கனவில் தோன்றி கடவுளாக உயருகிறார் எனவும், மான அவமான நோக்கில் இந்தக் கதையை வாசிக்க சாத்தியமுண்டு எனவும் கருத்துக்கள் பகிரப்பட்டன. பெங்களூர் நவீன் தேர்ந்தெடுத்த ‘பிரக்ஞைக்கு அப்பால்’ என்கிற கதையின் முதன்மைப் பாத்திரம் ஆத்மாநாமின் சித்திரம் , மேற்க்குலக  மாதிரிகளின் போலி மறுவாக்கம் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மலேசியா நவீன் சீ.முத்துசாமியின் இரைகள் கதைமீதான தன் கருத்தினை பகிர்ந்தார். கதையின் முதன்மைப்பாத்திரம் லக்ஷ்மி அந்தக் கதையில் அழ நேரும் ஒரே ஒரு தருணத்தினை சுட்டிக்காட்டி லக்ஷ்மியின் புனைவியல்பினை விவரித்தார். முதலாளி தொழிலாளி சுரண்டல் என்கிற பொதுவான வாசிப்பினைத் தாண்டி, இந்தக் கதையில் இரைகள் எவர் என பல சாத்தியமான விடைகள் தரும் ஆழமான படைப்பு என விவாதித்தார்.

கவிதை வாசிப்பு விவாதங்களில் அனைவரின் கவனத்தையும் விலகாமல் கவர்ந்தது  சாம்ராஜின் அமர்வுதான். நினைவிலிருந்து உருவி பல கவிதைகளை அடுக்கடுக்காக உதராணமாக வைத்து துள்ளலுடன் நடத்தினார். இடதுசாரி கவிஞரான லிபியின்  ‘பட்டை அணிந்த பாய்லர் ஸ்தலம்’ ஒரு உற்சாகமான கவிதை. மரபுக்கவிதை அமர்வில் பாந்தமான ஒரு பேராசிரியரின் நடையில் விளக்கிய ஜெயகாந்த் ராஜூ’ கருமொழி’ என்னும் சொல்லிற்கான விளக்கத்தினை  நினைவில் அழுத்தமாகப் பதிய வைத்தார். அந்தியூர் மணி பகிர்ந்த ‘ வெள்ளங் காட்டிய கள்ளக் கம்பனை’ கவிதையும் அதற்காக அவரின் புத்தாக்க விளக்கமும் நன்றாக பொருந்தியிருந்தது . வேணு வெட்ராயன் அறிதலின் போது மூளை நரம்பில் நிகழும் வேதிபரிமாற்றங்களை கவிதையுடன் தொடர்பிட்டு கருத்துக்களை பகிர்ந்தார்.

கமலக்கண்ணன் அறிபுனைக்கதைகளுக்கு பொதுவான வரையறைகளைக் விளக்கினார். அறிபுனைக்கதைகளில் வரும் அறிவியலும், வாழ்க்கையும் ஒன்றோடொன்று ஒட்டியோ, வெட்டியோ முயங்கியோ இணையாகவோ நிகழ வேண்டியது அவசியம் எனவும். அறிவியலுக்கான விளக்கத்தினை கதைக்குள் பொருத்துவது புனைக்கதையாசிரியருக்கு ஒரு சவால்தான் எனவும் மையப்படிமம் அறிவியலையும் கதையோட்டத்தையும் இணைக்கும் சரடாக அமைந்தால் இன்னும் பொருத்தம் எனவும்  விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.. சுசித்ரா அறிவியல் புனைக்கதைகளின் ஒரு முழுமையான வரலாற்றினை சுருக்கமாக பகிர்ந்தார். ஊகத்தினை மையமாக வைத்து எவ்வாறு இறுக்கமான அறிபுனைவு, நெகழ் அறிபுனைவு, ஊக புனைவு, மிகைபுனைவு, புராணங்கள் என வகைப்படுத்தலாம் என விவாதம் நிகழ்ந்தது. அவர் வாசிக்க பரிந்துரைந்த Exhalation (2009) - Ted Chiang கதை வாசிப்பு கிளர்ச்சி தரும் அனுபவமாக இருந்தது. அதன் முதன்மைப்பாத்திரமான மனித மனதிற்கு மிக நெருக்கமான மனம்கொண்ட இயந்திர மனிதன், தன் வாழ்க்கைக்கான தேடலில் மூளையை அறுவை செய்ய முடிவு செய்து அவன் சென்று சேரும் இடம் ,  இந்திய மரபில் தியானம், காலத்தின் , பிரபஞ்சத்தின் சுழற்சி என ஒரு இந்திய வாசக மனதிற்கு மிக நெருக்கமான கதையாகத் தோன்றியது. இந்த அறிபுனைவு கதை விவாதங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால், நண்பர்கள் சுசீல், கமலக்கண்ணன், விஷ்ணு, சசிக்குமார், சிங்கப்பூர் வெங்கட், நவீன் சங்கு, சங்கர் கிருண்னாவுடன் அறிவியல் கருவியான ‘இணைப்பு காணொளி’ (Conference video call”) மூலம் இலக்கிய விவாதம் தொடங்கலாம் என ஒரு திட்டம் உதித்தது. முதல் வாரத்தில் ஜெமோவின் டார்த்தீனியம் பற்றி பேசவிருக்கிறோம்.

ஞாயிறு விவாதத்தில் முன்னிலை அம்சம் சந்தேகமின்றி கடலூர் சீனுவின் ‘லகுலீச பாசுபதம்’  அமர்வுதான். லகுலீச வழிபாட்டு முறை, பெளத்தம் மற்றும் சமணத்துடனான உரையாடலின் சித்திரத்தினையும், அதன் வரலாற்று பரிமாணத்தையும் தெளிவான மொழியில் விளக்கினார். அதற்கு உதாரணமாக லகுலீசர் படிப்படியாக சண்டிகேச நாயனாராக,  சண்டிகேஸ்வரராக சைவத்தில் தொகுக்கப்பட்டு ஐக்கியமாகிறார் என சிற்பங்களை சுட்டிக்காட்டி விளக்கினார். அந்த சிற்பங்களின் உருமாற்றம் இந்த நூலினை வாசிக்கும் ஆர்வத்தினை கூட்டின. சுகுமார் ஆழிக்கோடு அவர்களின் தத்வம்ஸி மீதான கிருஷ்ணன் சங்கரன் அவர்களின் அறிமுக  விவாதத்துடன் அமர்வுகள் நிறைவு பெற்றது.

ஜெ மற்றும் பிற நண்பர்களிடம் விடைபெற்று கதிர்முருகன் அவர்களின் காரில் மலையிறங்கினோம். எங்கள் நன்நிமித்தம் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற சாலையில்  கஜலட்சுமி, குட்டி கஜராஜனின் தரிசனம் கிடைத்தது.  வெயிலில் உலர்ந்த செம்மண்ணிலிருந்து ஒரு உருவம் எழுந்து பேருரு கொண்டு , மற்றொன்று அதன் சிற்றுருவாகி   நடு சாலையில் நகர்ந்து போல தோன்றியது. சாலையில் அந்த இரண்டு யானைகளில் அன்னையாக இருக்கும் ஒரு பெரிய யானை நிதானமாக தீர்க்கமாக நின்று சுற்றி பார்த்தபோது,  பதட்டத்தில் மூளையும், கை கால்களும் செயலின்றி உறைய , நெஞ்சை விட்டு நாளங்கள் வழியே விசையோடு பாய்ந்த குருதி ஓட்டத்தின் வேகத்தை மட்டும் அந்தக்கணம் உணர்ந்தவனாய் அமர்ந்திருந்தேன். குட்டியை தன் துதிக்கை அணைப்பில் திசை செலுத்தி, பள்ளத்திலிருந்து எழுந்து சாலையைக் கடந்து மேட்டிற்கு சென்றது.  கதிர்முருகன் எடுத்த புகைப்படத்தின் ஒளி மினிமின்னலால், மேட்டில் இருந்து ஒரு கணம் தலை திரும்பி, என் கண்களை தீர்க்கமாக அந்த அன்னை யானை பார்த்த கணம் என்றும் என் நினைவினிலிருந்து மறையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்