ம. நவீனின் பேய்ச்சி வாசிப்பனுபவம்


மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளைக் குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை. 


எட்ட நின்று வழிபட்டுக்கொண்டிருந்த போது, செந்நாயுருவியின் நிறத்தில் சேலை அணிந்திருந்த வறிய கிராமத்து பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் வந்தார். அவர் நெரிசலான கூட்டத்தினிடையில் தன்னை பொருத்திக்கொண்டு, பெருந்திலோ, லாரியிலோ வந்திருக்க வெண்டும். வியர்வை பிசுக்கு நெடியுடன் தன் மூன்று குழந்தைகளை கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொண்டிருந்தார். முதிர்ந்த முருங்கைத் தண்டுபோல சத்தில்லாமல் வற்றித் தளர்ந்திருக்கும் இந்த சிறிய ஆகிருதி எப்படி மூன்று பிள்ளைகளை பெற்று எடுத்திருக்கும் என நான் யோசித்திருக்கும் வேளையில், சட்டென்று சன்னதம் கொண்டு ஆடத் துவங்கினார். கையிலில்லாத ஒரு மெய்நிகர் ஆயுதத்தை ஏந்தியபடி, நாக்கினை கடித்துக் கொண்டு, கண்களின் முனைகளை மேலிழுத்து விழித்தபடி, ஆதி விலங்கின் ஒலியிட்டு கொண்டு அரற்றியபடி ஆடினார். அவரை முழுமையாக ஆட்கொண்ட அந்த உணர்வில் போலியின் சாயல் துளியுமில்லை. எந்த லயத்திலும் அடங்காமல் ஆங்காரத்துடன் ஆடிய அந்த ஆட்டத்தின் தீவிரத்தினை, அதன் பின்னரான ஆழ்கனவுகளில் பலமுறை மீளக் கண்டிருக்கிறேன். பற்றிப் படர ஆதாரக் கம்பம் இல்லாமல், பின் தொடர்ந்து துரத்திய வாழ்வு, மூலையில் ஒடுக்கி அடக்க முயலும் கணங்களில் பெண்ணிலிருந்து எதிர்பாராது பீறிட்டு எழும் இந்த உக்கிரத்தீயை பேய்ச்சி நாவல் வாசிப்பில் பல இடங்களில் ஆழமாகக் காண்கிறேன். 


பேய்ச்சி நாவ‍லை ஒரு புகைப்படமாக மாற்றினால், முதன்மைப் பாத்திரங்களான ஓலம்மா சத்தகத்தையும், கொப்பேரன் ராமசாமியையும், மணியம் சிலம்பத்தையும், அப்போய் கருப்பனையும், ராமசாமி பேய்ச்சி தெய்வக் கல்லையும், சின்னி சாராய லோட்டாவையும், முனியம்மா போட்டுடைக்க எடுத்த மண்பாத்திரத்தையும், குமரன் தன்னுடைய விஷம் செல்லும் கழுத்தினையும், மலேயா தோக் குரு சமநிலை தவறாத எலுமிச்சையையும் பற்றியபடி போஸ் கொடுப்பார்கள் எனத் தோன்றுகிறது. அதன் பின்புலமாக ஓயாது கொட்டிக் கொண்டிருக்கும் காட்டு அருவியும், ,ரம்புத்தான், கித்தா , செம்பனை மரங்களும் இருக்கலாம். அதற்கும் பின்னால் பின் திரைமறைவில் எட்டிப் பார்த்தபடி பூணியான்கள் தோன்றலாம். ஒப்பந்த குடியேற்ற தொழிலாளர்களின் தோட்டத்து வாழ்விலிருந்து , நகரத்து வாழ்வாக மாறிய வரலாற்று பார்வை பேய்ச்சி நாவ‍லில் உண்டு. நாவலை, கரும்புத் தோட்டமாக முதலில் இருந்து, பின் கித்தா மரம் எனப்படும் ரப்பர் தோட்டமாக இப்போது செம்பனைத் தோட்டமாக மாறிவந்த சூழலியல் பார்வையில் வாசிக்கலாம். பேச்சி, பேய்ச்சி என்கிற இரு மைய படிமங்களைக் கொண்டு முனியாண்டி, அய்யனார் என தமிழகத்திலிருந்து தொடரும் நாட்டார் தெய்வங்கள் பார்வையில் வாசிக்கலாம். தொடர்ச்சியாக, சீலாட் கற்றுத் தரும் தோக் குருவின் தத்துவப் பார்வையிலும். புலம்பெயர்ந்த தமிழர்களுடனான , சீனர்கள், இந்தோனேசியர்கள், மலேயர்களுடனான கலாச்சார பரிமாற்ற பார்வையிலும் என பல்வேறு கோணங்களை வாசிப்பினைக் கோரும் நாவல். 


ஆரம்பகால ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய நீராவிக் கப்பல்களின் பெயர்கள் ரங்கநாயகி, நீலாதயாட்சி மற்றும் மீனாட்சி என்கிறார் டேவிட் சங்கீத் சந்தேர்பாலி, தனது மலேயாவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் (INDIAN INDENTURE IN THE STRAITS SETTLEMENTS, 1872-1910: ) என்னும் நூலில். இப்போது செபராங் என்றழைக்கப்படும், மலேசியாவின் வெல்லெஸ்லி பகுதியே தமிழக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆரம்பத்தில் வந்திறங்கிய பகுதி என்கிறார். தெலுங்கர்கள் ஒரிடத்தில் நிலைத்து பணிபுரியாமல், பிற நல்ல வாய்ப்புள்ள பணியிடங்களை முக்கியமாக பர்மாவில் தேடிச் செல்லும் தன்மை கொண்டவர்கள் எனவும். அவர்களைப் போல இல்லாமல், குடியேறிய‍ இடங்களில் நிலைத்து தங்கி உழைப்பினைக் கொடுத்த தமிழர்களே ஒப்பந்த தொழிலாளர்களாக மேஸ்திரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒப்பு நோக்க வசதியான பர்மா, இலங்கை பொன்ற புலம்பெயர் இடங்களைத் தாண்டி மலேயாவிற்கு தமிழக தொழிலாளர்களை இழுத்தது மேஸ்திரிகளின் வசிய வார்த்தைகளான ‘ அதிக ஓய்வு நேரமும், கறிச் சோறும், அரக்கு சாராயமும் தான். என்கிறார். 



மன, உடல் ஆற்றலின் அடுக்குகளில் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் மனிதர்கள் தாங்கள் உடையும் எல்லைகளை கண்டு கடக்க முடியாத தருணங்களாக அமைந்த மரணங்களைப் பற்றி ஆய்வு செய்கிறது பேய்ச்சி நாவல். கப்பல் பயணம் தந்த அழுத்தத்தின் காரணமாக நோய்மையில் இறக்கிறார் ஓலம்மாவின் அப்பா. அதைக் கடந்து மலேயா தோட்டத்தில் குடியேறுகிறார்கள் மிஞ்சிய தமிழர்கள்., வழக்கமாக மழை பெய்ய வாய்ப்பில்லாத தைப்பூசம் நாட்களில், அந்த பிறழ்ந்த சூழலால் திரிந்த விஷமாக மாற வாய்ப்பிருக்கும் சாராயத்தின் எல்லைக்கோட்டைத் தொட்டு இந்த எளிய உழைப்பாளிகள் உயிர் துறக்கிறார்கள். அவர்களில் வலுவுள்ள சிலர் இன்னும் சில அடிகள் கடந்து, காட்டுக்குள் சென்று அருவி அருகில் இறக்கிறார்கள். தொடர்ந்த மீளா நோய்மையால் ஆற்றல் குறைந்த கண்ணன் வாத்தியாரோ, திரிந்த சாராயம் எரித்து சிதைத்து குழித்த வயிறுடன் காண்பாரற்று வீட்டிலேயை இறக்கிறார். சாராய போதை எல்லையைக் கடந்த மணியத்துக்கோ சின்னியின் பெண்ணுடல் தரும் போதைதான் உச்ச எல்லை. அறத்தின் அன்னையும், இயற்கை தேவதையுமான, ஓலம்மா தன் மண்ணிலிருந்து பிரிய நேரும் , சூழலின் மாற்றத்தினை தாங்க முடியாமல் இறக்கிறார். இந்த ஒட்டு மொத்த நிகழ்வுகளில் தன் ஒரு பங்கின் பாரத்தை தாங்கிக் கொண்டு மருளும் ராமசாமியோ , தோக் குருவினால் சமநிலைக்குத் திரும்பினாலும், தன்னுள் இருக்கும் பெண்மை உந்தித் தள்ளிய ஒரு அசாதாரண கணத்தில் இறக்கிறார். 






https://www.panuval.com/Peichi-10015359

https://www.semanticscholar.org/paper/Indian-indenture-in-the-Straits-Settlements%2C-%3A-and-Chanderbali/420e2730c3573a7c3f965bfd8e8e563699091c26

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்