தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் ஆல்வாரிஸ் - மொழியாக்கம் சுசீல்குமார்

நமது சூழலில், ஓரளவு லட்சியத்துடன் இருப்பதாக கருதப்படும், ஒரு பதின்ம வயது இளைஞன் ஒருவன் என்ன செய்வான்? ஒரு சாரார், நல்ல ஊதியம் பெற்று செட்டிலாக வாய்ப்புள்ள தொழில்த் துறையினை தேர்ந்தெடுத்து, அதற்காக பயற்சி வகுப்புகளில் முன்னரே சேரும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அடுத்த சாரார், மேன்மையான துறைகளாக கருதப்படும் திரைத்துறை, கிரிக்கெட் போன்ற புகழ் அதிகம் கிடைக்கும் துறைக்கான கனவில் இருப்பார்கள். அந்த வாசலை நோக்கிய பயணத்தில் ஏதேனும் ஒரு அடி எடுத்திருப்பார்கள்.

பதினாறு வயதில் எனக்கு, எந்த ஒரு தெளிவான லட்சியமோ கனவோ இருந்ததாக நினைவில்லை. பத்தாவது பொதுத்தேர்வுக்குப் பிறகான அந்த வருடம், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஒரே ஒரு இளைப்பாறும் வருடம் எனத் தோன்றியிருக்கிறது. புதிதாக வீட்டில் வாங்கிய வண்ணத் தொலைக்காட்சியில், கிரிக்கெட்டில் வீசி அடிக்கப்பட்ட அத்தனை பந்துகளையும் முழு நேரமாக பார்த்து பொழுதை கழித்துக் கடந்தேன். கேப்டன் பொறுப்பினைத் துறந்து புத்துணர்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் அடி அடி என்று அடித்த அந்த 1998 வருடம். அதன் பயன்மதிப்பானது, இந்தப் பத்தியில் பதிவதைத் தாண்டி எதுவுமில்லை என இப்போது உணர்கிறேன்.

கோவாவினைச் சேர்ந்த பதின்ம வயது ராகுல் ஆல்வாரிஸ் ஒரு வருட விருப்ப ஓய்வு எடுத்து பெங்களூர், சென்னை என தனியாக சுற்றுகிறார். அலங்கார மீன் விற்கும் நண்பருக்கு, கண்ணாடித் தொட்டி செய்ய உதவுகிறார். அப்பாவின் நண்பர்களின் வயலில் இறங்கி வேளாண்மை செய்கிறார். தோட்டக்கலை கண்காட்சிக்கு தன்னார்வலானாக பங்கேற்கிறார். திருட்டுத்தனமாக வெட்டப்படும் மரங்களை கணக்கெடுக்கும் வேலை செய்கிறார். அவரது தேடல், காளான் வளர்ப்பு, கள்ளிச் செடி , சிலந்தி வளர்ப்பு, பாம்பு பண்ணையில் வேலை என மேலும் மேலும் நுணுக்கம் கொள்கிறது . எல்லாவற்றை விட முக்கியமாக அனுபவ நிகழ்வுகளையும், புதியதாக கற்றவைகளையும் எழுத்தில் தொடர்ந்து பதிகிறார்.

புத்தகம் நுண்தகவல்களால் செறிந்துள்ளது. சிலந்திகள் ஆறு கால்கள் கொண்ட பூச்சியினத்தில் சேராது. அவைகள் கணுக்காலிகள் எனப்படும். கள்ளிச் செடிகளில் மெழுகு பொன்று ஒரு பொருள், இலைத்துளைகளில் அடைத்துக் கொண்டு ஆவியாதலை தடுக்கும் எனவும். கள்ளிச் செடி இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரம் எனவும். ஆற்றில், கடலில் இறந்த உடல்களை உண்ணும் முதலைகள், ஒரு வகையில் துப்புரவு சேவை செய்யும் உயிர்கள் என்கிறார் ஆசிரியர். முதலைகள் ஊர்வனவற்றை வித பறவைகளுக்கே நெருக்கமான தொடர்புடைய உயிரினங்கள். மொழி தெரியாத, செங்கல்பட்டில் இருளர்களுடன் நட்புகொண்டு பாம்பினை பிடிக்கும் யுக்தியினைக் கற்கிறார்


பாம்புகள் பிடிக்கும் நேரங்களில் நிகழ்ந்த தவறுகளால் அவருக்கு கைகளில் நிறைய காயங்கள். பாம்புக்கு உணவாக தவளையை பிடிக்கும் முறையை சுவாரஸ்யமாக விவரிக்கிறார். எதிர்திசையில் நின்றபடி ஒருவர் டார்ச் வெளிச்சத்தை செலுத்த, அந்த ஒளியில் மயங்கி நிற்கும் தவளைகளை வெறும் கையால் பிடிக்கிறார்கள். அதேபோல தாவர கண்காட்சியில் , புதுமையாக ஒரு வகையான கொடியை திறப்பு விழாவில் கத்தரித்து துவங்குகிறார்கள். முதலைப் பண்ணைக்கு செல்லும், சென்னைப் பேருந்தில் அவரிடமிருந்து பணம் களவு போகிறது, சிரமத்துடன் அவர் நண்பரின் வீட்டிற்குத் திரும்புகிறார். பொதுவெளியில் அயல் மொழியினருக்கு நமது ஊரின் விருந்தோம்பல் என்பது அவ்வளவு சொல்லிக்கொள்ளும் விதமாக இருப்பதில்லை போலும்.


புத்தகத்தில் கவர்ந்த சில வரிகள்,

ஒரு சிறுபாதையாக இருந்தாலும், அதன் முடிவுவரை சென்று பார்க்க வேண்டும்

எப்போதும் புதியனவற்றை முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும் நினைத்தளவு கடினமாக இருக்காது


சுசீல் குமாரின் மொழியாக்கம் வாசிக்க சரளமாக இருக்கிறது. முன்னுரையில் குட்டி சீனு, அரவிந்த் குப்தாவுடனான நெகிழ்ச்சியான நிகழ்வினை உணர்ச்சி குறையாமல் படிக்க முடிகிறது. Green Signal - பச்சைக் கொடி எனவும். Rock Music அதிரடி இசை எனவும், hammer headed shark கொம்பன் சுறா, Jam பழ ஊறல் எனவும், வேறொரு இடத்தில் வேலைக்கள்ளன் எனவும் சரியான வார்த்தைகளாக சிரத்தையுடன் தேர்ந்தெடுத்துள்ளார். சொற்றொடருக்கு பொருந்தாமல் ‘Belive me” - என்னை நம்புங்கள் என சில இடங்களில் நிகழ்ந்த மொழிபெயர்ப்பு நெருடவும் செய்தது.

பொறுப்புணர்வுடன் ஆத்மசிரத்தையாக செய்யும் எந்த ஒரு செயலுக்கும் காலம் கடந்த மதிப்புண்டு என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சான்று.

-சிவமணியன்


https://thannaram.in/product/therukkale-pallikkoodam/




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்