மதுரையும் கேளிக்கை சினிமாவும்


நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு பேட்டியில்,  மதுரை நகருக்குள்,  80 திரையரங்குகள் இருந்ததாக ஒரு தகவலைச் சொல்கிறார். எட்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நகருக்கு இது ஆச்சரியமான எண்ணிக்கை என முதலில் தோன்றும்.  செயற்கைக்கோள் ஒளியலை வரிசைகளின்  அதீத வளர்ச்சிக்கும், அகன்றும் நீண்டும் கொண்டே இருக்கும் தட்டையான தொலைக்காட்சி தொழில்நுட்பத்திற்கும்,   முன்னரான காலம் அது. அன்று  மதுரையில் உயிர்ப்புடன்  தொடர்ந்து திரையிட்டபடி  இருந்த அரங்குகளின் கணக்குதான், குரு சோமசுந்தரம் கூறியது


 வெளியூர்க்காரர்கள் பார்வையில் மதுரை ஒரு கோயில் நகரம். ஆனால் உண்மையில்  மதத்திற்கு நிகராக, கேளிக்கை சினிமா என்னும் ஊடகத்தை  மக்கள் தொடர்ந்து ஆராதித்து வருகிற நகரம் மதுரை.  வேறெந்த பொழுதுபோக்கிற்கும்  இடமில்லாமல், இருந்தாலும் அதற்கு மனமில்லாமல், அரங்குகளில் மட்டுமே மக்கள் அன்று  கேளிக்கை சினிமாக்களை கண்டு  களித்தனர்.  அரங்கிற்கு வெளியேயான வாழ்க்கையில் கூட அந்த கனவுலகின்   அறிதுயிலில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்திற்கு 80 அரங்குகள் என்பது பொருத்தமான எண்ணிக்கை கணக்குதான். 


வைகைக்கு தென் மேற்கு கரைக்கு அருகில் இருந்த திரையரங்குகளான  சோலைமலை, மதி, ராம்விக்டோரியா, மிட்லாண்ட், வெள்ளைக்கண்ணு, நடராஜ், முருகன், குரு, ஜீவா, ஶ்ரீதேவி, கல்பனா, தங்கரீகல், மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர், நடனா அரங்குகளில்தான் நான்  பெரும்பாலான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.  இன்று சென்னை சில்க்ஸ் வணிகக் கட்டிடமாக மாறியிருக்கும்,  ஆசியாவிலேயே பெரிய திரையரங்கு எனப்பட்ட தங்கம் திரையரங்கும், நகரின் மத்தியிலிருக்கும் பழம்பெருமையான சென்ட்ரல் திரையரங்கும், வைகை்கு வடகிழக்கில் இருந்த பெரும்பாலான திரையரங்குகள் இதுநாள் வரை நான் காணத் தவறியவைகள். 


மீள மீள திரையிடப்படும் பழைய  கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர் படங்கள், சிவாஜி படங்கள். பொங்கல், தீபாவளி என வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு என்கிற கணக்கில் ரஜினிகாந்த், கமலஹாசன் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்ட புதுப்படங்கள். மணிரத்னம், விஜயகாந்தின் பெரும்பாலான படங்கள் மற்றும் வருஷம் பதினாறு, சின்னத் தம்பி, என் ராசாவின் மனசிலே, கரகாட்டக்காரன், என அந்தந்த காலகட்டத்தின் பெரும் வெற்றி பெற்ற பிற நடிகர்களின் படங்கள். 


வேம்பிலைக் கொத்தினை கைகளில் ஏந்தியபடி சாமியாடும் பெண்கள் கூட்டத்திற்கு நடுவே திகிலுடன் பார்த்த  திமுக உறுப்பினரான ராமநாராயணின் ‘ஆடிவெள்ளி’ போன்ற படங்கள். ரத்தம் சிந்தும் வன்முறைக் காட்சிகள் அதிகம் கொண்ட சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, விஜயசாந்தியின் தெலுங்கு மொழிமாற்றப் படங்கள். மொழிமாற்றாமல் ஆங்கிலத்திலேயே  வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள். உச்சபட்ச வெற்றி பெற்ற சில இந்தித் திரைப்படங்கள் என மதுரைத் திரையரங்குகளில் நான் கண்ட படங்கள் வரிசை பரவலானது.


வார இறுதி நாட்களில் பெரும் எதிர்பார்ப்புடன்  திரைக்கு வந்திருக்கும் முதல் நாளில்,  சினிமா பார்க்கும் வைபவம் நடக்கும். பெரிய ஆட்கள் குனிந்து இடையே புகுவதை தடுக்கும் ஐந்தடுக்கு கம்பி வரிசைகளுக்குள், இடம் கிடைக்குமா கிடைக்காத என யோசித்தபடி  இருபுறமும் நெருக்கித் தள்ளிய கூட்டமான வரிசையில்  நகர்ந்தபடி இருக்கும்.  கடைசியாக, ஒருவருக்கு அதிகபட்சம் மூன்று என சீட்டுகளை  வெற்றிகரமாக கைகளில் பெற்ற போது வானமே அருகில் வந்ததென பெரும்  வெற்றி கொண்டாட்டம்தான். ஆனால் இந்த வரிசையில் கழித்த இடைவெளியில்,  அவசரமாக சில ரீல்களை ஓட்டியதால், முழுமையான பார்க்கும் அனுபவத்தை திரையரங்குகள் மட்டுப்படுத்தின.  பார்வையாளர்களை மீண்டும் சில முறை வரவழைப்பதற்கான சாமர்த்தியமான வழிமுறை அது. 


சோலைமலைத் திரையரங்கம் ரஜினிகாந்த் படங்களையும், அதற்கு சில நூறு அடிகள் தொலைவிலிருக்கும் மதி திரையரங்கம் கமலஹாசன் திரைப்படங்களையும் மரபாக திரையிடுபவைகளாக இருந்தன. குரு திரையரங்கில் முதல் படம் கமலஹாசன் நடித்த ‘குரு’ எனவும், ஜீவா திரையரங்கில் முதல் திரைப்படம் சத்யராஜ் நடித்த ஜீவா எனவும். முழுக்க முழுக்க ஶ்ரீதேவி திரையரங்கிற்குள்  படமாக்கப்பட்டிருந்த ஆர்.பார்த்திபனின் ‘ஹவுஸ்புல்’ திரைப்படம், அந்த அரங்கில் வெளியிடப்படவில்லை. என சில மதுரை திரையரங்களுக்கான  தனித்த டிட்பிட்ஸ். ராமராஜன், சங்கிலி முருகன்,  ராஜ்கிரண், ராமநாராயணன் படங்களாக வெளியிட்ட இந்த ஶ்ரீதேவி தியேட்டர் இன்று ஒரு குடியிருப்பு வளாகமாக மாறிவிட்டது. 



ஆங்கிலப் படங்களை மட்டும் திரையிட்டவை பைபாஸ் ரவுண்டானாவில் இருந்த மாப்பிள்ளை, மாணிக்க விநாயகர் என்ற இரட்டைத்  திரையரங்குகள்.  ஒவ்வொரு இருக்கையிலும் தனித்தனியான ஒலிபெருக்கியும், இருக்கை எண்ணை வெளிச்சமிட்டுக் காட்டும் மின் விளக்கும் கொண்ட திரையரங்கம் அது. வழக்கமாக திரையரங்குகளில் முதலில் உள்ளே நுழைபவருக்கு திரைக்கு நேரே இருக்கும் பின் நடு வரிசையில் இடம் என தேர்ந்தெடுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.


அதற்கு மாற்றாக,  டிக்கெட்டில் இருக்கை எண்கள் குறிப்பிட்டிருக்கும் வரிசைப்படி மட்டுமே ஆட்களை அமரக் கோரும் மதுரையின் முதல் தரமான திரையரங்கம் அது. நெருப்பு கக்கும் காட்சிலா  டினோசருக்கும், பச்சை முகமூடி அணிந்த ஸ்டான்லி ப்கிஸ்க்கும், பின்னப்பட்ட நீண்ட சடையுடன் தொள தொள அங்கி அணிந்த மொட்டை  ஜெட் லீக்கும்,  நான் யார் என்ற மருகி நின்ற கருப்பு ஜாக்கெட் அணிந்த ஜானுக்கும், கண்ணாடி அணிந்தபடி துப்பாக்கியுடன் மோட்டரில் அமர்ந்திருந்தபடி  ஸ்டைலான அர்னால்டுக்கும் பைபாஸ் சாலையின் வளைவிலிருந்து தெரியுமளவிற்கு ஐம்பது அடி கட் அவுட் வைத்து விளம்பரப்படுத்திய திரையரங்கம் அது. 


நான் முதலில் பார்த்ததாக நினைவிலிருக்கும் படம் ‘கரிமேட்டுக் கருவாயன்’. தென்னை மர உச்சிகளில் பதுங்கியபடி ரத்தக் கண் சிவக்க வில்லன்களை வேட்டையாடிய விஜயகாந்த் மதுரைக்காரர் என்னும் காரணத்தாலும் மனதினை கவர்ந்தார்.  என் பள்ளி நண்பன் பாலமுருகன் போலீஸ் நம்பியாராக மாறி  என்னைத் துரத்த,  சைக்கிள் ட்யூப் ரப்பரை  இணைத்து கட்டிய கவட்டை வில்லை ஏந்தியபடி நான் கருவாயனாக ஓடுயிருக்கிறேன். தூர்தர்ஷனின்  திரைப்படத்தை ஊரே பார்க்கும் ஞாயிறு மாலையில், குருசாமி நாடார் மளிகைக் கடையில் பதுங்கியபடி அந்த திருடன் போலீஸ் விளையாட்டினை ஆடியிருக்கிறேன்.


ஒவ்வொரு திரைக்காட்சியிலும் தன் இருப்பினை பொங்கும் ஆற்றலால் வெளிப்படுத்தியபடி  இருப்பவரும், கதையின் திருப்புமுனைத் தருணங்களில் வீரம், காதல், இறப்பின் துயரம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை முகத்தில்  முழுமையாக வெளிப்படுத்த முடிந்தவருமே என் வரையறையின்படி ஒரு நல்ல நாயகன். அதன்படி சிறுவயதில் கமலஹாசனுக்கும், விஜயகாந்திற்கும் ஒரே நேரத்தில் ரசிகனாக இருந்திருக்கிறேன். உழைப்பாளியாக கை, கால் சட்டை முனைகளை கிழித்தபடி, பணக்காரனாக கோட் அணிந்து பொருத்தமில்லாமல் கைகளை மடித்தபடி, அதிசயப்பிறவியாக கீழிடுப்பு வரை கிழிந்த பனியனை அணிந்த  ரஜினிகாந்த் ஏனோ என்னை ஆரம்பத்தில் கவரவில்லை. அபாய அளவைத் தாண்டிய கூட்ட நெரிசலில், ஶ்ரீதேவி திரையரங்கின் ஒரு ஓரத்தில் , நீலநிறத் திரைச்சீலைகள் காற்றில் பறந்து மறைத்தபடி பார்த்த , பாட்ஷா திரைப்ப்படத்தின் மலையைப் புரட்டிய வெற்றி அவரை விவாதத்திற்கு தவிர்க்க முடியாதவராக்கியது. அதற்கு நிகராக கமலஹாசன் ‘இந்தியன்’ படத்தின் வெற்றியைத் தந்தவுடன்தான் அன்றைய மனக்கவலை ஓரளவிற்கு குறைந்தது. 



மேகம் கொட்டட்டும், ராஜா கைய வைச்சா, சாந்து பொட்டு கமலின் பாட்டு வரிகளை உற்சாகமாக மனதிற்குள் மீள மீள பாடியபடி, அவரின் வசனங்களை நகல் செய்து குதூகலித்த ரசிகனாக அவரை ஆராதித்து இருந்திருக்கிறேன். பள்ளி வகுப்பு இடைவெளிகளில், சனி , ஞாயிறு அரட்டைகளில் சலிக்காமல் கமலின் நடிப்பு, பாட்டு, திரைத்தருணங்களதான். ஆழ்ந்த விவாதங்கள்  கண்டடைதல்கள் எல்லாம் அவற்றிற்குள்ளேயே. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பட்டாணியிடம் ராஜூ வாங்கிய கடன் வட்டியுடன்  ‘ஆறு ஐம்பதாவதன்’ தொடர்பினை அவினாசி ‘ஐம்பதை ஆறாகத்’ திருப்பி கொடுப்பதில்,  நுண்மையாக கண்டு அதை விளக்கும் ஒருவன் என் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு மதிப்புமிக்க புத்திசாலி. 


கல்லூரியில் கலை இலக்கிய மன்றம் நடத்தி பங்கு பெற்ற போட்டிகளில் பெரும்பாலும் சினிமாதான். சைகை மொழியில் சினிமா படத்தின் பெயர் கண்டுபிடித்தல்,  சினிமா வினாடி வினா, குறுக்கெழுத்துப் போட்டி என 10ல் 8 நிகழ்ச்சிகள் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் தான். இவை தவிர எஞ்சியவை கலைமனம் கொண்ட சிறுபான்மையினர்களுக்கான  சிறுகதை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள். என் ஆரம்பகட்ட புத்தக வாசிப்பு கிழக்கு பதிப்பகத்தின் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகளின் வாசிப்புடன்தான் துவங்கியது. 


என்னுடைய உறவுப் பாட்டி ஒருவர்,  சினிமாவின் மீது வெறித்தனமான  காதல் கொண்டவர். அரிசி மில்லில் தினக்கூலி வேலைக்கு சென்று பெற்ற வருமானத்தில், பேரன் பேத்திகளை பொறுப்பெடுத்து வளர்க்கும் உறவுக் கட்டுக்குள் இருந்து சமாளித்தபடி, தினமொரு படத்தை திரையரங்கில் பார்த்தவர். பார்த்த படங்களின் பாதிப்பு குறைவதற்குள், அகப்படுபவர்களிடம்,  கண்கள் விரிய படத்தின் கதையை விவரணைகளால் நிகழ்த்திக் காட்டுவார். இளையராஜாவின் ஒரு கிராமிய குத்துப் பாட்டிற்காக மட்டும்,  ‘காதல் கவிதை’ என்கிற படத்தினை தியேட்டரிலிருந்து அகற்றும் வரை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை என அரங்கிற்கு சென்று பார்த்திருக்கிறார். 


என்னுடைய அம்மாச்சி குருவத்தாய், பெண்களை தொடாத நாகரீக டி.ராஜேந்திரனுக்கும், எம்.ஜி.யார் போல நாட்டுக்கு தேவையான பண்பான கருத்துக்களை திரையினை பார்த்துக் கூறும் ராமராஜனுக்கும் தீவிர ரசிகை. அவருக்கான ஒரு பதினைந்து அங்குல கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் அவருடன் சேர்ந்து இவர்கள் படங்களை பார்க்க நேரிட்டிருக்கிறது. நல்ல வேளையாக  நம்ம அண்ணாச்சி சரத்குமார் தலையெடுத்து வரும்போது ஆச்சியின் கண் பார்வை குறைந்து படங்கள் பார்ப்பதை குறைத்து விட்டார். 


ஒரு சராசரி ரசிகனை கணக்கில் கொண்டு, காதல், நகைச்சுவை, வன்முறை, திகில், துயரம் போன்ற உணர்வுகளில் ஒன்றினை அழுத்தமாக அடிக்கோடிட்டு மற்றவைகளை கலந்து ஒரு கேளிக்கை சினிமா படைப்பு திரைக்கு வருகிறது. அந்த சினிமாக்களை பார்க்கும் பார்வையாளன், அந்த அந்த உணர்வுகளுக்கான ரசிகர்கள், அவர்கள் வேண்டியதை மட்டுமே பெற்று, அவர்களுக்கு பொருந்தாதவற்றை தவிர்த்து விடுகிறார்கள்.  என் நெருங்கிய நண்பன் ‘இயக்குனர் பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளை மட்டுமே திரையிலோ, தொலைக்காட்சியிலோ பார்ப்பான். பாலாவின் படங்களில் அன்புக்குரியவர்களை வில்லன்களால் கொடூரமாக கொல்லப்பட்டு , அதற்கு நாயகன் பழிவாங்கும் வன்முறைக் காட்சிகளை முற்றாகப் பார்க்காமல் தவிர்த்துவிடுவான். 


இணையத்தின் பெருக்கத்திற்கு முன்னால், கேளிக்கை சினிமாவில் நகைச்சுவை, வீரத்திற்கு ஈடாக ரசிகர்கள் கவர்ந்திழுக்க  உதவியது காதல் என்கிற போர்வையில் காட்டப்படும் காமம். கேளிக்கை சினிமாவில் காட்டப்படும் காமம் என்பது ஒரு பக்க பார்வையுடனானது.  பெரும்பாலான நேரங்களில், ஆணுக்கு பெண்ணுடலும், சில நேரங்களில் பெண்ணுக்கு ஆணுடலும் தரும் உடல் கிளர்ச்சியை மட்டுமே கொண்டாட்டமாக முன் வைக்கிறது.  வேலைப்பளு ஓய்ந்த பொழுதில் ஒரு சராசரி ரசிகனோ, ரசிகையோ சினிமா என்னும் கனவுலகிற்குள் நுழையும்போது, இது ஒரு மெல்லுணர்வுக் கிளர்ச்சியைத் திருகிறது. 


சினிமா பார்வையாளனின் கோணத்தில்,கேளிக்கை திரைப்படத்தின்  புதுமையும், தனித்த நடையுமே முக்கியமாக கவரும் அம்சம். அந்தப் புதுமை அறியாத புதிய முகமாகவோ, அல்லது புதுமையான கூட்டணியாகவோ, புதுமையான கதையில் அல்லது புதுமையான ஒப்பனை , முகமாற்றத்தில் தன் மனங்கவர்ந்த நட்சத்திரம் பொருந்திப் போவதாகவோ இருக்கலாம். இளையராஜா, ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற  ரசிகர்களை மகிழ்வித்த, சில  உச்ச  நட்சத்திரத்திறங்களுக்கென சில சலுகைகள் உண்டு. அவர்கள் சிறிய மாற்றத்ததுடன் அவர்களாகவே மீள மீள தங்களை சமர்ப்பிக்க அனுமதி உண்டு. இவர்களும்  கூட கேளிக்கைக்கான அம்சமின்றி அவர்களின் கருத்துகளை,  பிரச்சாரமாக நேரடியாக முன் வைத்தால் அது பெரும்பாலும் தோல்விதான். 


இருப்புப் பாதை மீதான நீராவி இஞ்சினும், புகைப்படக்கருவியும் அறிவியலின் தவிர்க்க முடியாத பரவலால் பிரிட்டீஷ் இந்தியாவிற்கு நுழைந்தது.  இந்தியாவின் முதல் இருப்புப்பாதை சென்னையில் ரெட் ஹில்ஸ் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையை 1837ல் பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த அரை நூற்றாண்டுக்குப் பின்னரே, இந்தியாவின் ஆரம்பகட்ட பேச்சற்ற குறும்படத் திரையிடல் முயற்சிகள் சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேறியது.  ஒரு கேளிக்கை சினிமாவை பார்ப்பது  என்பது ஒரு புதிய இடத்திற்கு இட்டுச் செல்லும் மறக்க முடியாத ரயில் பயணம் போல எனத் தோன்றுகிறது. ஒரு ரயில்ப் பயணி,  அவனை பாதித்த பயண அனுபவத்தை ஒரு சில முறை மீட்டிப் பார்த்து விட்டு மறந்து விடுகிறான். ஆனால் ஒரு கேளிக்கை சினிமா ரசிகனோ வாழ்நாள் முழுக்க சினிமாவையே மனம் முழுக்க சுமந்து கொண்டு அதில்  பெற்ற தருணங்களை மட்டுமே, சுவாசித்து   நினைவிலிருந்து மீட்டெடுத்து, அரட்டையடித்து, உழல்கிறான். 



  • சிவமணியன்






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்