பொன்னியின் செல்வன் பாகம் 1

 








பொன்னியின் செல்வன் தமிழ் வாசகர்களின் கூட்டு நனவிலியில் பெரும் செல்வாக்கு கொண்ட நாவல். அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, ஆதித்த கரிகாலன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர் போன்ற வலுவான பாத்திரங்களை கொண்டது. பூங்குழலி, வந்தியத்தேவனின் விடுதலையுணர்வும், நந்தினி, பெரிய பழுவேட்டரையரின் கலகத்தன்மையும், குந்தவை, அருண்மொழி வர்மரின் மதிநுட்பமும், ஊமை ராணியின் மாயத்தன்மையும் என வெவ்வேறு கால கட்ட வாசிப்பில் வேறு வேறு காரணங்களால் மனதிற்கு அணுக்கமாகும் தன்மை கொண்டவைகள். மேடை நாடகம், திரைப்படம் போன்ற பல வடிவங்களில் எடுத்தாளத்தக்க  நாடகீய  தருணங்களால் நிறைந்தது. 


பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி முதன் முதலாக கேள்விப்பட்டது, எனது நண்பன் காமாட்சி ராஜா மூலம். ஒருவனின் வலது கை மற்றவன் தோளிலும்,  மற்றவனின் இடது கை இவன் தோளிலும் கோர்த்தபடி சாலையில் சாவதானமாக நடக்கும் இணை சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நாங்கள். அவனும் அவன் மூன்று அக்காக்களும் மதுரை பெத்தானியபுரத்திலுள்ள ஒரு வாடகை புத்தக்கடையிலிருந்து எடுத்து பொன்னியி்ன் செல்வனை வாசித்தார்கள். முற்றத்து உரலில் மாவை அரைத்துக் கொண்டே அவன் அக்காக்கள் மாறி மாறி வாசித்தததை நான் பார்த்த தருணங்களும். அவர்கள் நால்வரும் என்னை சுற்றி நின்று,  முக்கியமாக வந்தியத்தேவனையும், பூங்குழலியையும்   பற்றி உற்சாகம்  பொங்க விவரித்த நினைவுகளும்  ஞாபகம் வருகிறது. 


 என்னுடைய புரிதல் வட்டத்தில் இல்லாத ஏதோ ஒன்றைப் புகழ்கிறார்களே, என எனக்கு அன்று கொஞ்சம் விலக்கம் இருந்தது.  அந்த நாவலை வாசிக்க தூண்டல் உடனடியாக எழவில்லை.  பத்து வருடங்களுக்குப் பிறகு, நான் தமிழில் வாசிக்கத் துவங்கியவுடன் எடுத்த முதல் நாவல் ‘பொன்னியின் செல்வன்.  வீர நாராயண ஏரி வழியாக வந்தியத்தேவன் பயணமும், பூங்குழலி தனிமையின் விவரிப்பும்,  ஆதித்த கரிகாலன் - நந்தினி உறவுமோதலும், சுழற்காற்று பகுதியில் கடற்போரும் கவர்ந்தன.  மன்னராட்சிக்கு எதிராக கலகத்தன்மையுடன் புனையப்பட்டிருந்த  பெரிய பழுவேட்டரையர், பாண்டிய நாட்டு பாத்திரங்கள் அன்றைய முதல் வாசிப்பில் கவர்ந்தன.   ஆளும் அரசினை விமர்சித்து எதிர்த்திருந்த ஒரு குட்டிப் போராளி என என்னை அன்று நினைத்திருந்ததாக நினைவு.  


இந்த நாவல்,  தமிழகத்தினை ஆண்ட சோழப் பேரரசின் பண்டைய பெருமிதங்களை இந்த தலைமுறை வாசகரின் கனவினில் நிறைக்க வல்லது.  ஆனால் பெரும்பாலான பாத்திரங்கள் அச்சு வார்ப்புகள் போல எந்த தனித்தன்மையும் இல்லாதவைகள், நினைவு சல்லடை வழியாக நழுவி விடும் அளவிற்கு பலவீனமானவைகள். தொடர் கதை வடிவில் எழுதப்பட்டதால் வலிந்து புகுத்தப்பட்ட திருப்பங்கள் பல பகுதிகளில் இருக்கின்றன.  இவையெல்லாம் ஒரு முறை மட்டும் வாசித்த வாசகனாக என்னுடைய புறவய மதிப்பீடு.


நாவலின் திரைவடிவம் என்பது வேறு. அதில் ஒரு பார்வையாளனுக்கு கண்களை நிறைக்கும் அனுபவம்தான் முதன்மையான எதிர்பார்ப்பாக இருக்க முடியும். வணிக சினிமா படைப்புகள் பார்வையாளர் திரளின் கூட்டு அகவய ஈர்ப்பினை நம்பி எடுக்கப்படுபவை.   அங்கு சிந்தனை தூண்டல், அறிதல் என்பது  இரண்டாவது பட்சம் தான்.   ‘ பொன்னியின் செல்வன்’ திரைப்படமாகிறது என செய்தி கேட்டவுடன், ஒரு பார்வையாளனாக என்னுள் எழுந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் அகவயமானதுதான். 


பொதுவாக திரைப்படத்தின் தொழில் நுட்பத்தினைப் பற்றி பேச எனக்கு ஒன்றுமில்லை. நான் சினிமா படப்பிடிப்பு தளத்தினையோ, அது உருவாகும் முறையிலோ ஆர்வமில்லாதவன். அதன் வணிக வெற்றி கணக்குகளிலும் எனக்கு எந்த பலனுமில்லை.  திரைக்கு முன்னால் அமரும் எனக்கு அது மூன்று மணி நேரத்தில் என்ன தந்தது என்பதே முக்கியம்.  இந்த திரைப்படத்தின்  பார்வையாளனாக நான் பெற்ற சில அவதானிப்புகளை பகிரவே இந்த கட்டுரை. 


 ‘பொன்னியின் செலவன் பாகம் -1’ல் யானை மீது கோட்டை சுவரினை ஆதித்த கரிகாலன் உடைத்து நுழையும் காட்சியும், சோழர்  கொடி வானுற ஏறும் காட்சியும், தேவராளன் ஆட்டம் பாடலும்,   உச்ச காட்சியான கடல் போர்  சண்டையும் என்னை முதன்மையாக கவர்ந்தன.  அக்கார அடிசில், கள்ளழகர், மதுசூதனப் பெருமாள், மடப்பள்ளி, தளிக்குளத்தார் கோயில் என கவனம் தவறினால் நழுவிவிடும் வசனங்கள் நிறைந்தது. 


 முதல்பாதியில் துடுக்கும் , துள்ளலும் கொண்ட வந்தியத் தேவன் பார்வையில் அத்தனை முக்கிய பாத்திரங்களும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகமாகிறார்கள். கட்டற்ற  காற்று போல  எல்லா இடத்திலும் நுழைந்து வெளியே வருகிறான் வந்தியத்தேவன் . அவனுக்காக ஏணி விழுகிறது, பாய்மரத் தோணியில் இடம் கிடைக்கிறது,  சுரங்கப் பாதைகள், கோட்டைக் கதவுகள் திறக்கிறது. நந்தினி வந்தியத்தேவன் உரையாடலில் தன் நாடோடி நிலையை சுட்டிக் காட்ட அவன் கூறும்  ‘ மேலே ஆகாயம் பூமி’ என அவன் கூறுவது கூட காற்றினை குறிக்கிறதோ என எண்ண வைக்கிறது.  கதையின் காற்றான வந்தியத்தேவனை பாண்டிய ஆபத்துதவிகள் அடித்து கப்பலின் உச்சியில் கட்டிய போது, கடல் காற்று சில நிமிடங்கள் நின்று போகிறது.  ஒரு வகையில் அவனைப் பின் தொடரும் ஆழ்வார்கடியானும் காற்று போலத்தான். 


போர்க்களச் சூழலில் அறிமுகமாகிறான் ஆதித்த கரிகாலன். மூர்க்க வீரனான அவன்  தன் தாய் பூமியை விட்டு விலகி விலகிச் செல்கிறான் அவன்.  உயரப் பறக்கும் புலிக்கொடியும், அதன் வானமுனான ஆதித்த கரிகாலன். நெருப்பும், புகையும், அம்பும், மேகமும் மறைத்த  வானம்.  வயதாகி நகமிழந்த கிழட்டு வீரரான பெரிய பழுவேட்டரையரின் காட்சி அறிமுகம் கூட வானத்தின் பிண்ணனியில் நிகழ்கிறது.  ஒரு சிறிய நெருப்பு வால் விண்மீன், ஒட்டு மொத்த வானத்தையும் நம் பார்வையிலிருந்து மறைந்து மூடி விடுகிறது.  


ஆதித்த கரிகாலன், பெரிய பழுவேட்டரையர் என்ற இரு வானில் தோன்றும் ஒரு நெருப்பு வால்விண்மீன் நந்தினி எனலாம். தங்க நிற சூரிய ஒளி பிண்ணணியில் அறிமுகமாகிறாள் நந்தினி. சுற்றி எரியும் அகல்விளக்குகளும், கலங்கரை விலக்க உச்சியில் எரியும் தீசுவாலையும் அவள் மனதின் வஞ்சத்தினை காட்சியாக்கத்தில் கூட்டுகின்றன.  


இலங்கை கடற்கரையில் நிகழும் போரில் பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மன் அறிமுகமாகிறார். அருண்மொழிவர்மன் - பாண்டிய ஆபத்துதவிகளுடன் நிகழ்த்தும் இரண்டு போர்களும் கூட நீரின் பிண்ணணியில்தான் நிகழ்கிறது. மூன்றாவது மற்றும் உச்ச கட்ட போர், நெருப்பு, மழை, சுழற்காற்றின் பிண்ணனியில் நிகழ்கிறது. அவரை காப்பாற்றும் ஊமை ராணியும் நீரின் மனித வடிவமாக தோன்றுகிறார்.


பொன்னியின் செல்வன் திரைமொழியில் ஆதித்த கரிகாலனை வானமாகவும், அருண்மொழி வர்மரை நீராகவும், குந்தவையை நிலமாகவும், வந்தியத் தேவனை காற்றாகவும், நந்தினியை நெருப்பாகவும் அடையாளமிட்டு பார்க்க இடமிருக்கிறது.   

நாவல் வாசிப்பு அதன் பின்னர் திரைப்பபடம் பார்த்தல் என்பதே இயல்பான வரிசையாக இருக்க முடியும். இயக்குனரின் செல்வாக்கு,  நடிகர் நடிகர்களின் நடிப்பு இவற்றினைக் கடந்து ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மீண்டும் ஒருமுறை வாசிக்க தூண்டியது இந்த திரைப்படம். 



கருத்துகள்

  1. மாலதி சிவகுமார்4 அக்டோபர், 2022 அன்று PM 11:14

    முக்கிய கதாபாத்திரங்களை ஐம்பூதங்களாக வடிவமைத்தது அருமை..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பின்னூட்டம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்