ராணிகளும், குதிரை வீரர்களும் - பொன்னியின் செல்வன் பாகம் 2
சதுரங்க ஆட்டம் ஆரம்பிக்கும்போது, வெள்ளை வீரர் தனது ராஜாவிற்கு முன்னால் நிற்கும் வாள்வீரனை முன்னே நகர்த்துவது, சதுரங்க வீரர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியமான ஆரம்ப உத்தியாகும். 1.e4 ஒரே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இரண்டும் இணைந்த ஒரு நகர்வாகும். மையப் பகுதியில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதோடு, எதிரியின் நகர்வுகளை கணிக்கவும், தன் காய்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும் இது உதவுகிறது. இந்த நகர்வு, ராணியும் மந்திரியும் — — தங்கள் பாதையில் இருக்கும் தடைகளை ஒரே நேரத்தில் விலக்கி, அவர்களுக்கு சுதந்திரமாக நகரும் இடத்தை வழங்கி, ஆட்டத்தில் செயல்படுவதற்கான வாய்ப்பைத் திறக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த், கேரி காஸ்பரோவ் ஆகியோருக்கிடையே 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் ஆனந்த் ஒரு முக்கியமான வெற்றியை பெற்றார். இது அந்த ஆட்டத்தில் அவர் பயன்படுத்திய தொடக்க நகர்வு . பிரக்ஞானந்தா மக்னஸ் கார்ல்ஸனை classical முறையில் வீழ்த்திய ஆட்டங்களில் ஒன்றில், அவர் சிசிலியன் நைடர்ஃப் (Sicilian Najdorf) என்ற இந்த தொடக்க நகர்வை பயன்படுத்தினார்
சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது இரு மனங்களுக்கிடையிலான ஆக்ரோஷமான போர். வீரர்கள் தங்கள் நகர்வுகளை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார்கள். எதிரியின் நகர்வுகளை கணித்து, எதிர்காலத்தில் ஏற்படும் சூழ்நிலைகளை முன்னறிந்து செயல்படுகிறார்கள். சில நேரங்களில், ஒரு நகர்வு வெறும் கட்டம் நகர்த்துவது அல்ல; அது எதிரியின் மனதில் சந்தேகத்தை விதைக்கும் ஒரு உளவியல் தாக்குதலாக இருக்கலாம்.ஒவ்வொரு நகர்வும், எதிரியின் எண்ணங்களை உணர முயற்சிக்கும் ஒரு முயற்சி. அடுத்த கட்டத்தில் என்ன செய்யலாம், எங்கே தாக்கலாம், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடலாக அது அமைகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் , ஒவ்வொரு கதாபாத்திரமும்
சதுரங்க ஆட்டத்தின் பாத்திரங்கள் போலவே செயல்படுகிறார்கள். அவர்களின் நகர்வுகள், உரையாடல்கள் கதையின் ஒவ்வொரு திருப்பமும், சதுரங்க காய்களை நகர்த்துவது போலவே திட்டமிடப்பட்டிருக்கும்.
பொன்னியின் செல்வனின் முதல் பாகம் — இது ஒரு சதுரங்கத்தின் தொடக்க நகர்வைப் போலவே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும், ஒரு சதுரங்க பாத்திரமாக அறிமுகமாகிறது: ஆதித்த கரிகாலன் கட்டற்ற வீரமும் வேகமும் கொண்ட குதிரைவீரன். வந்தியத்தேவன் துள்ளும் சுறுசுறுப்பான குதிரைவீரன், அருள்மொழி வர்மன் — அமைதியான ஆனால் ஆழமான நகர்வுகளை மேற்கொள்ளும் நகரும் கோட்டை போன்ற யானை. முதலமைச்சரின் ஒற்றனான ஆழ்வார்க்கடியான் ஒரு பார்வையில் மந்திரி பாத்திரம், நந்தினி — வஞ்சகமான நகர்வுகளின் கருப்பு ராணி. குந்தவை, ஊமைராணியும் — நுண்ணறிவும் நிதானமும் கொண்ட வெள்ளை ராணிகள் . இந்த முதல் பாகம், காய்கள் தங்கள் இடங்களைப் பிடிக்கும், தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தும், மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலையை அமைக்கும் கட்டம் எனத் தோன்றுகிறது.. இது ஒரு திட்டமிடப்பட்ட முதல் இரு நகர்வுகள் , இரண்டாம் பாகத்திற்கான வெறும் முன்னோட்டம் எனத் தோன்றுகிறது.
இரண்டாம் பாகம் — அது ஒரு ஆவேசமான சதுரங்கப் போராட்டம். இங்கு காய்கள் நகர்வதில்லை, தாவுகின்றன. சிலர் தயக்கத்துடன், சிலர் வஞ்சகத்துடன்,
சிலர் திடமான தாக்குதலுடன், சிலர் தங்கள் உயிரையே பணயமாக வைத்து நகர்கின்றனர். ஒவ்வொரு நகர்வும், ஒரு தீவிரமான முடிவை உருவாக்குகிறது. காய்கள் இரக்கமின்றி வெட்டி வீழ்த்தப்படுகின்றது. நந்தினியின் மயக்கும் ஒளி மங்கிய நகர்வுகள், மதுராந்தக தேவரின் மறைமுகமான திட்டங்கள், அருள்மொழியின் கடல் வழிப் பயணம், வந்தியத்தேவனின் சிக்கலான சோதனைகள் — இவை அனைத்தும் ஒரு சதுரங்கத்தின் நடுநிலைப் போராட்டம் போலவே. இரண்டாம் பாகம், வெற்றி மற்றும் தோல்வி, நம்பிக்கை மற்றும் நம்பிக்கையிழப்பு, பாசம் மற்றும் வஞ்சகம் ஆகியவற்றின் உச்சக் கட்டத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒரு செக்மேட் நிலை என்ற கதையின் முடிவை நோக்கிச் செல்லும் திடமான நகர்வுகள்
ஆற்றங்கரையில் காதல் வயப்பட்ட இளம்ஆதித்ய கரிகாலன் குதிரையில் நிற்க, விளக்கேந்திய நந்தினி ராணிபோல நேர் கோட்டில் செல்வது,. ஒளியும் மங்கிய அந்த தருணம், கதையின் போக்கையும் , பாத்திரங்களின் அடையாளங்களையும் ஒரே வெளிப்படுத்துகிறது.
ராஷ்ட்ரகூட வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகி, ராணிக்கு வழிவிடும் காட்சி, செஸ் விளையாட்டில் செக்மேட் நிலையை நினைவூட்டுகிறது. இது மதுராந்த தேவர் என்ற ராஜாவிற்கு வைக்கப்படும் திட்டமிட்ட தாக்குதலின் உச்சம்.
பாகுபலி திரைப்படத்தில் பெண்கள் பெரும்பாலும் பாசம், தியாகம், வீரத்திற்கான அடையாளங்களாகவே காட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் உளவியல் ஆழம் குறைவாகவே வெளிப்படுகிறது. அதற்கு மாறாக, பொன்னியின் செல்வனில் மந்தாகினி , நந்தினி, குந்தவை, வானதி, சமுத்திர குமாரி, போன்ற பெண்கள் தந்திரம், அழகு, அறிவு, அரசியல் நுண்ணறிவு ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கதையின் ஆதார சக்திகளாக செயல்படுகிறார்கள்.
பாகுபலியின் போர்காட்சிகள் மிகைப்படுத்தப்பட்ட வீரத்திற்கான காட்சிப்படுத்தலாக இருக்கின்றன. ஆனால், பொன்னியின் செல்வனில் இறுதிப் போர் உத்திகள் மிகுந்த கடைசி கட்ட ஆட்டம், நேரடி தாக்குதல்களும் மறைமுக நகர்வுகளும் சேர்ந்து ஒரு நுட்பமான போர்த் திட்டத்தை உருவாக்குகின்றன.
பாகுபலியில் எதிர்ப்புகள், துரோகம், பழிவாங்கல் போன்றவை நேரடியாகவே காட்டப்படுகின்றன. ஆனால், பொன்னியின் செல்வனில் மதுராந்தக தேவர், நந்தினி, பழுவேட்டையர்கள், ஆதித்ய கரிகாலன், சிவபாத சேகரன் போன்றவர்கள் சதுரங்க வீரர்கள் போல நகர்கிறார்கள். ஒவ்வொரு நகர்வும் திட்டமிடப்பட்டதும், தூண்டப்பட்டதும், முன்னறிவுடன் அமைகிறது.
நான் அடிக்கடி ரிஷியுடன் சதுரங்கம் விளையாடுவேன். அந்த ஆட்டம் எப்போதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். ஒருவரின் கவனத்தை மற்றொருவர் சிதறடிக்க முயலும்போது, சீண்டலும், நக்கலும், சிரிப்பும் பரிமாறப்படும். விளையாட்டின் முடிவில், எங்கு தவறினோம், எங்கு வாய்ப்புகளை இழந்தோம் என்பதைக் குறித்து நாங்கள் தவறாமல் விவாதம் நடத்துவோம். சில நேரங்களில், நான் தொடர்ச்சியாக வெற்றி பெறும் போது, தந்தையாக யோசித்து அவன் வருந்தக் கூடாது என , ஓரிரு ஆட்டங்களில் வெற்றியை அவனுக்கே விட்டுக் கொடுப்பேன். அந்த தருணங்களில், அவன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி எனக்கு வெற்றியை விட மேலான பரிசாக இருக்கும்.
பிற்பாடு, அவன் தனது ஆட்டத்தில் நண்பர்களுடனும் போட்டிகளில் பங்கெடுத்தும் பல உத்திகளை கற்று, திறமையாக வளர்ந்ததும், அவன் தொடர்ச்சியாக வென்றான், நான் என் பொறுமையின்மையை ஆட்டங்களின் முடிவில் வெளிப்படுத்தும்போது. ஆச்சரியமாக அவன், பெருந்தன்மையுடன், எனக்கு வெற்றியை விட்டுக் கொடுத்து, என் தோல்வியின் ஏமாற்றத்தை மென்மையாக தணிக்க முயற்சித்தான். அந்த நேரங்களில், சதுரங்கம் ஒரு விளையாட்டாகவோ மனதின் போராட்டமாகவோ இல்லாமல், உளம் உணராத நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கலை போலவே தோன்றும்.
சிறுவனாக இருந்த காலங்களில், என் நெருங்கிய உறவினர் ஒருவருடன் நான் அடிக்கடி சதுரங்கம் விளையாடி இருந்தேன். அவர் நிலைமாறாத அழுத்தமான நிதானத்துடனும் , நான் ஒரு பரபரப்பான வேகத்துடனும் எப்போதும் விளையாடுவோம். அவருடனான ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு ஒரு புதிய புதிர் போல இருக்கும். அந்த ஆட்டங்களில் எப்போதும் எனக்கு கிடைத்தது தோல்வியும் பாடமும்தான். மேலும் மேலும் அவருடன் மோதி, நான் என் ஆட்டத்தை மெதுவாக—ஆனால் உறுதியுடன்—வளர்த்தேன். அவர் என்னை ஒரு சிறுவனாக அல்ல, ஒரு போட்டியாளனாகவே பார்த்தார். என் தோல்விகளில் நான் துவண்ட போதிலும், அவர் ஒருமுறையும் மனநெகிழ்ச்சியோடு அணுகவில்லை. நான் தோல்வியடைந்து மனம் துவண்ட போதிலும், அவர் ஒருமுறையும் எனக்கு வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை.
பின்பு ஒருமுறை, அவரது இல்லத்திற்கு விருந்தினராக சென்ற போது, அவர் தனது வளர்ந்த மகனுடன் விளையாடும் போது பார்க்க நேர்ந்தது. அந்த ஆட்டத்தில், அவர் சில நகர்வுகளை விட்டுக் கொடுத்து, மகனின் மகிழ்ச்சிக்காக வெற்றியை பரிசளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு ஒரு சோர்வான எண்ணம் தோன்றியது “ஏன் அந்த நெகிழ்ச்சியான அணுகுமுறை எனக்கு வழங்கப்படவில்லை?”.. ஒவ்வொருவரும் உறவுகளை அணுகும் விதம் வேறுபட்டது. சிலரை போட்டியாளராகவும், சிலருக்கு மட்டும் பாசத்தால் பாதுகாப்பு தர விரும்புகிறார்கள்.
பாகுபலி திரைப்படம் ஒரு பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்டது. இதில் கதாபாத்திரங்கள் துருவ படுத்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன — ஒருவர் நல்லவன், மற்றவர் கெட்டவன். கதையின் ஓட்டம், கருப்பு-வெள்ளை என இரு துருவங்களாக பிரிக்கப்பட்டு, நல்லவனின் முழுமையான வெற்றியுடன் முடிவடைகிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு திறந்த தீர்வும், உறுதியான முடிவும் அளிக்கிறது. ஆனால், இது உணர்வுகளின் நுணுக்கம் மற்றும் மனித உறவுகளின் சிக்கலான பரிமாணங்களை பெரிதாக ஆராயவில்லை.
அதற்கு மாறாக, பொன்னியின் செல்வன் ஒரு நுண்ணிய அரசியல் சதுரங்கம் போலவே நகர்கிறது. இதில் நியாயத்திற்காக விட்டுக் கொடுத்தலும், பொறுமையும், மனநிலை மாற்றங்கள், உணர்வுகளின் சிக்கல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மதுராந்தக தேவர் போன்ற கதாபாத்திரங்கள், துரோகம் செய்யும் வில்லன்கள் அல்ல; அவர்கள் தங்கள் சூழ்நிலையின் விளைவாக நகரும் மனிதர்கள். அவர்களின் நகர்வுகள் அறம், அரசியல், காலச்சூழல் ஆகியவற்றின் இடையில் சிக்கியவை.
இந்தக் கதையில், வெற்றி என்பது ஒருவரின் வீழ்ச்சியால் மட்டுமல்ல, ஒருவரின் மனநிலையின் மாற்றத்தாலும், பொறுமையாலும், பாசத்தாலும் நிகழ்கிறது. இதனால் தான், பொன்னியின் செல்வன் ஒரு சினிமா அனுபவத்தைத் தாண்டி, மனித வாழ்க்கையின் சிக்கலான சதுரங்கத்தை பிரதிபலிக்கும் ஒரு நுண்ணிய கலைச் சிந்தனையாக மாறுகிறது. இது வெற்றியின் வெம்மையை காட்டுவதில்லை; வெற்றிக்கு செலுத்தும் பாதையின் நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது.
வாழ்க்கை என்பது ஒரு சதுரங்கப் போராட்டம் போலவே. சிலருக்கு அது இடைவிடாத போட்டி, தொடர்ந்த வெற்றிக்கான முயற்சி. அவர்கள் எதிராளிகளை வெட்டி வீழ்த்த வேண்டும், முழுமையாக மேலோங்க வேண்டும் என்பதே இலக்காகக் கருதுகிறார்கள். அவர்களது நகர்வுகள் திடமானவை, வெற்றியை நோக்கி நகரும் திட்டமிடப்பட்டவை.
ஆனால், சிலருக்கு வாழ்க்கை என்பது போட்டியில் வெல்லும் முயற்சியைத் தாண்டி, மனித உறவுகளின் நுண்ணிய சமநிலையை பேணும் ஒரு பயணமாகும். அவர்கள் வெல்லக்கூடிய நிலையிலும், நியாயத்திற்காக, பாசத்திற்காக, சமரசத்திற்காக விட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. அவர்களது நகர்வுகள் பொறுமையுடனும், பரிவுடனும், முன்னோட்டத்துடனும் அமைந்தவை.
இந்த இரு அணுகுமுறைகளும் வாழ்க்கையின் இரு முகங்கள். ஒன்று வெற்றியின் வெம்மையை பிரதிபலிக்கிறது; மற்றொன்று உணர்வின் மென்மையை., இந்த இரண்டாவது அணுகுமுறை எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.
===================================================================
கருத்துகள்
கருத்துரையிடுக
பின்னூட்டம்