பார்ப்பனியம்

பார்ப்பனியம் என்கிற சொல்லை பள்ளி சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் வழியாக முதன் முறையாக அறிந்தேன். படமெடுத்து சீறும் பாம்பின் கோட்டோவியத்துடன் ‘பார்ப்பனியப் பாம்பு’ என எழுதப்பட்ட வெறுப்பு வாசகம் அது. அந்நிய நாட்டு சதியின் விளைவாக உலகத்தினை அழிக்க உருவாக்கப்பட்ட  பரவிக் கொல்லும் விஷச் செடியின் விதையாக இருக்கும் என நினைத்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பின்தான் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்களின் அதிகாரத்தினை சுட்டும் பதிலிச் சொல் என அறிந்து கொண்டேன். 

பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிக்கும், மதுரை லேபர் உயர்நிலைப் பள்ளியின் வெளிப்புற சுவரில் அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.  மதுரா கோட்ஸ் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக கட்டப்பட்ட பள்ளி அது. மதுரை ரயில் நிலையத்திற்கு கிழக்குபுற தண்டவாளத்திற்கு அருகில் உள்ளது அந்தப் பள்ளி. தண்டவாளத்திற்க்கு நேர் மேற்கே மறுபுறம், பெரும்பாலும் பார்ப்பனர்களும்,  பிற உயர் வகுப்பினை சேர்ந்தவர்களும் படிக்கும் விகாசா பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் மதுரை வட்டார கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகளில், பேச்சு, விளையாட்டுப் புதிர் போட்டிகளில் பங்கு பெற வேறு வேறு சூழலில் சென்றிருக்கின்றேன். 

அருகருகே தெளிவாக எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்ட இரு வேறு உலகங்கள். ஒரு புறம் வசதியின் நிறமான வெண்மையும், பசுமையும், குளிர்மையும் மறுபுறம் ஏழ்மையின் அடையாளமான அடைக்கப்பட்ட புழுக்கமும், பழுப்பும் நினைவிலெழுகிறது. இந்த வேறுபாட்டினை நாள்தோறும் காண நேர்ந்த ஒரு மனதின் ஆற்றாமையை, அதன் விளைவான வெறுப்பினை வெளிப்படுத்திய வாசகமாக ‘பார்பனியம்’ என்கிற சொல்லை வேறு ஒரு சூழலில் புரிந்து கொண்டேன். 


நான் சந்திக்க பழக நேர்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலவையான அனுவத்தை கொடுத்திருக்கிறார்கள். ஒரு புறம், யாகம் செய்வதற்காக வந்த, மனதாலும், உடலாலும் கொழுத்துப் பெருத்த, அழுக்கான ஒரு மனிதன், வலுக்கட்டாயமாக காலில் விழச் செய்திருக்கிறான். வீங்கிய மேட்டிமையை உடல்மொழியால் எல்லா நேரமும் பிறருக்கு குறிப்புணர்த்தியபடி இருப்பவர்களை சந்திக்க நேர்ந்திருக்கிறது. இந்துக் கோயில்களை பால் மடி வற்றும் வரை கறக்கப்படும் பசுமாடாக ஒட்ட சுரண்டும் ஒரு கூட்டமும்,  அந்த வகுப்பின் அடையாளம் சுமந்த மனிதர்கள்தான். சுய  ஜாதிப் பெருமிதம் கொண்டு, அடிப்படைவாதக் கருத்துகளை சுமக்கும் அவர்களின் மனங்களை இடித்துரைக்க அது சொல் சரியான வழிதான் என முதலில் தோன்றியது.

மறுபுறம், எனக்கு முற்றிலும் வேறு வகையான அனுவத்தினை கொடுத்திருக்கிறார்கள். ஏழைப் பெயிண்டரின் மகனான பஞ்சு போன்ற மனம் கொண்ட என் நண்பன் கண்ணன் ஐயர்.  தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமூக வேற்றுமையின்றி, சமையலறை வரை புழங்க அனுமதித்த ஹிந்தி டீச்சர் சீத்தாலெட்சுமி. மகனின் கலப்பு திருமணத்தை பெரிதாக கலவரம் செய்யாமல்,  அனுமதித்தது மட்டுமில்லாமல், திருமணத்திற்குப் பின் மரியாதையுடன் வாழ அனுமதித்த ஒரு அரிய குடும்பம். கல்லூரி விடுதி அறையில் எந்த வித பாசாங்கும், மன இடைவெளியும் இல்லாமல் பழகிய பல நண்பர்கள். வருவாய் நிச்சமின்மை, புறக்கணிப்பு, ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்தாலும் இந்துக் கோயில் பணிகளில் அர்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்தி, நாள் தவறாமல் விளக்கு ஏற்றும் குருக்கள். இந்த இரண்டு எல்லைகளுக்கும் சரி நடுவில்தான் பிராமண சமூகத்தின் உண்மையான முகம் இருக்கிறது.

கல்வி, மதம், கலைகளில் முண்ணணி ஆளுமையாக கொண்டவர்களாக. அதிகாரத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்களாக எப்போதும் இருந்திருக்கிறார்கள். பிரிட்டீஷ் இந்தியாவில் ஆளுபவர்களுடன் மதம் வழியாக தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தபோது கூட,  நிர்வாகத்தில் உதவுபவர்களாக தங்களை தகவமைத்து தொடர்ந்து இரண்டாம் நிலையதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள். ஆளுபவர்களுக்குத் தேவையான தரவுகளை தங்கள் நலனுக்காக மொழியில் விளக்கி எழுதியிருக்கிறார்கள். 

இதுவரை இரண்டாம் நிலையிருந்தவர்கள், பொருளியல் ரீதியாகவுமும், ஆட்சி நிர்வாகத்திலும் முதல் நிலையில் ஏற்றம் கொண்டபோது, அதனை சகிக்க முடியாமல் எதிர்த்து  உருவானதுதான் நீதிக் கட்சி போன்ற இடைநிலை ஜாதிகளின் இயக்கங்கள்.  இந்த எழுச்சி தலித் இயக்கங்களின் எழுச்சியாக மாறுவதை ஒரு நூற்றாண்டிற்கு மேல் தாமதப்படுத்தியதற்கு பார்ப்பன மற்றும் இடைநிலை ஜாதி குழுக்கள் இருவருக்கும் பங்கு இருக்கிறது. 

வன்னியர், நாடார், பிள்ளைமார், முதலியார், தேவர் போன்ற இடைநிலை சமூகங்களுக்கு  தலைவர்கள், வட்டாரம் தவிர்த்து தனித்து  அடையாளப்படுத்தி  பார்க்க பொதுக் கூறுகள் என ஒன்றில்லை.  ஆனால் பிராமணர்கள் மதம் சம்பந்தமான தெளிவான புற அடையாளங்களுடன் இருப்பதால்,  ஒரு குழுவாக திரளவும். அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து தனித்துக் கொண்டு, மேட்டிமை கொண்ட உயர் வகுப்பினராக தங்களை பிம்பப்படுத்தினை வளர்த்திக் கொண்டு செல்வாக்கு செலுத்தவும் முடிகிறது. அதேவேளை இந்த இடைநிலை சாதிகள்  தங்களின் மீதான விமர்சனங்களை மடைமாற்றவும், சமூகப் பொறுப்பினை துறக்கவும்,  கூட்டாக சேர்ந்து பிராமண சமூகத்தை  எல்லாவிதமான கேலி, கிண்டல், வெறுப்பிற்கு இலக்காக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  

தொடர்ச்சியான அந்நிய பண்பாட்டு தாக்கத்தினால், இந்திய சமூகம் உள்ளொடுங்கி, உள்ளூர் அந்நிய என்ற எந்த புதிய சிந்தனையையும் சந்தேகத்துடன் அணுகும் , உறைந்த சமூகமாக மாறியிருக்கிறது.  இந்த சூழலில் ஆரிய-திராவிட வாதம், பார்ப்பனியம் போன்ற தட்டையான  துருவப்படுத்தும் சிந்தனைகள் சமூக தோல்விக்கான, ஏழ்மைக்காக காரணங்களை எளிதாக விளக்க வைக்கவும், பரப்பவும் ஏதுவாக இருப்பதால் பரவலான செல்வாக்குடன் இருக்கிறது.  

தென் ஆப்ரிக்காவில் நூற்றாண்டு கால ஒடுக்குமுறை நிறவெறி அரசு கவிழ்க்கப்பட்டு, முதல் கறுப்பர்களின் தலைவரான நெல்சன் மண்டேலா ஆட்சியில் அமர்ந்தார். அப்போது நாட்டின் எதிர்காலத்தினை கட்டமைக்க முந்தைய இனவெறி ஆதிக்க நிர்வாகிகளான டச்சு வெள்ளையர்களை சமாதானத்திற்காக அழைத்திருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு முன்னேறும் சமூகமாக தென்  ஆப்ரிக்கா வளர்வதற்கு முக்கியமான தருணத்தில் அந்த மன்னிப்பும், ஒருங்கிணைய அழைப்பும் ஒரு பெரிய திருப்புமுனை செயல். 

தமிழ்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டில், இட ஒதுக்கீடு, ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியால்,  இடைநிலை சாதிகள் பொருளியல் ரீதியாக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு  முன்னேறியிருக்கிறார்கள்.  கல்வியிலும், ஆட்சி நிர்வாகத்திலும், பொருளியல் வளர்ச்சியிலும் பிராமண சமூகத்திற்கும், இடைநிலை சமூகத்திற்குமான ஏற்றதாழ்வு எல்லை குறைக்கப்ட்டிருக்கிறது. ஆகவே, இந்த பார்ப்பனியம் என்கிற வார்த்தை படிப்படியாக வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். 


 வெறுப்பினை உள்ளியல்பாக கொண்ட எந்த ஒரு சிந்தனையும், நடைமுறையில் வன்முறையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த சிந்தனையை சமரசமின்றி உரக்க கோஷமிட்டபடி பரப்பும் கூட்டம் அதிகாரத்தை அடையவும், ஒருங்கிணத்த மந்தை மனிதர்களை ஒடுக்கிச் சுரண்டவுமே  பெரும்பாலும் பயன்படு்த்தப்படும். பார்ப்பனியம் என்கிற சொல்லின் தேவைக்கான சூழலும், அது ஏற்படுத்திய சிந்தனை தாக்கத்திற்கான காரணத்தையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் காலங்கடந்து தீய நோக்கத்திற்காக பேணப்பட்டு பரப்பப்பட்டு வரும் அதன் தொடர்ச்சியை நிராகரிக்கிறேன்.

-சிவமணியன்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்